Saturday, July 30, 2011

அப்பாற்ப்பட்டவன்...

எண்ணமும் எழுத்தும்
சங்கமமாய் சமுத்திரம் படைக்கும்
இயற்கையும் காதலும்
அலைகளாய் ஆடிடத்துடிக்கும்

முத்துக்களாய் பிறந்துவிட்ட
வார்த்தை வடிப்புகள்
மாலைகளாய் மாறினாலும்
எங்கோ எதுவொன்றோ
குறையும்

தாயைக் கண்டுவிட்ட பசுக்கன்றாய்
சிலநேரம்
மழைமேகம் கண்டுவிட்ட மயிலாய்
சிலநேரம்
பலநாள் கழித்து
பழையதைக் கண்டுவிட்ட பிச்சைக்காரனாய்
சிலநேரம்
என்று சில்லிடும் மகிழ்ச்சியது
கோடையில் விழும் மழைத்துளியாய்
மறைந்து போகும் எங்கோ

பதம்பார்த்து விதைக்கக் காத்திருப்பவனுக்கு
மழை வேண்டும்
பதமாய் பெயர்த்தெடுத்த ஈரப்பானைக்கு
வெய்யில் வேண்டும்
அறுத்துவிட்டு கதிரடிக்க காத்திருப்பவனுக்கு
விரைவாய் வீசும் காற்று வேண்டும்

ஒவ்வொரு வடிமைப்பும் ஒவ்வொரு தேவை பொறுத்தே
என்றாலும் ஒவ்வொன்றும் வக்குக்கப்பட்டது ஒவ்வொரு காலம் பொறுத்தே

அவனுக்கு சூரவெளியும் வேண்டும்
அதனூடே சுரம் மீட்டும் தென்றலும் வேண்டும்
சுட்டெரிக்கும் வெய்யிலும் வேண்டும்
உறையவைக்கும் பனியும் வேண்டும்
சிலநேரம் இறைவனும் வேண்டும்
சிலநேரம் மிருகமும் வேண்டும்
காதலிலும் களிப்படைவான்
காமத்திலும் புலப்படுவான்
கள்ளும் நஞ்சும் கலந்தே வேண்டும் என்பான்

கல்லைக் காணும்போது கடவுள் இல்லை
கடவுளை காணும்போது கல்லில்லை

அவற்றிற்கு அப்பாற்ப்பட்டவன்.....

0 comments:

Post a Comment

உங்கள் கருத்தை நான் அறிய