Saturday, July 30, 2011

விசை...

தெளிந்த நீராய் தேங்கியிருக்கும்
தண்ணீர் தடாகம்

என் முகம் பார்க்கிறேன்

வானம் பார்க்கிறேன்

கண்ணாடிபோல் காட்டுகிறது

பார்வை போதாதென்று

உணரவேண்டி தொட முயல்கிறேன்

முதலில் பயத்தோடு

மெதுவாக மென்மையாக

சிறியதாய் ஒரு அலை வட்டம்

வன்மையாய் தொடத் தோன்றி

தொட்டவுடன் தோன்றுகிறது

பெரியதாய் பல வட்டம்

அழுத்தம் கொடுக்க கொடுக்க

அலைவட்டம் அதிகரிக்க

புரிந்தது ஒவ்வொரு விசைக்கு

சமமான எதிர் விசை

எதிர்பாராத் திருப்பம்...

பலரும் உலாவி வரும் நெடுஞ்சாலையது
காற்றோடு கலந்தது போல் ஒரு பயணம் அங்கே
நொடிக்கொன்றாய் என்னை கடக்கிறது பல
அதிர்வலைகள் அடிக்கடுக்காய் சில
எதிர்நோக்கி பறந்துவரும் பூச்சிகளும்
சில தூசிகளும் தடந்தெறியாமல்
தெரித்துப்போயின

பயணம் ஊர்வதாயில்லை
பறப்பதாயிருந்தது
எல்லைக் கற்களை எண்ணி முடியவில்லை

விட்டு விட்டு போடப்பட்டிருந்த கோடு
விடாமல் ஒரே கோடாய் மாறிவிட்டிருந்தது

திடீரென வந்த திருப்பத்தை நான் கவனிக்கவில்லை
எச்சரிக்கை பலகை இருந்தும்

தடம்புரண்டது வாகனம்
தடைப்பட்டது பயணம்

பலமுறை இதுவே நடந்தாலும்
முதன்முறை மட்டும் தான் அது
எதிர்பாராத் திருப்பம்

தேவை எனக்கு...

அறியாமல் செய்துவிட்ட
தவறொன்றை தவிர்த்துவிட

விசம் தோய்ந்த வார்த்தைகளால்
காயப்படுத்திய தருணங்களை கவர்ந்துவிட

கையேந்தியும் கவனியாமல் வந்த
கணங்களை கலவாடிவிட

கண்களோடு கண்களை மட்டும் உலவிட்டு
வார்த்தை வராமல் போன
பொழுதுகளை திரும்பப்பெற

கட்டாயமாய் திணிக்கப்பட்ட
திணிப்புகளை உதறி தள்ளிவிட

தேவை எனக்கு கச்சிதமாய் கணிக்கப்பட்ட
ஒரு காலயெந்திரம்

அப்பாற்ப்பட்டவன்...

எண்ணமும் எழுத்தும்
சங்கமமாய் சமுத்திரம் படைக்கும்
இயற்கையும் காதலும்
அலைகளாய் ஆடிடத்துடிக்கும்

முத்துக்களாய் பிறந்துவிட்ட
வார்த்தை வடிப்புகள்
மாலைகளாய் மாறினாலும்
எங்கோ எதுவொன்றோ
குறையும்

தாயைக் கண்டுவிட்ட பசுக்கன்றாய்
சிலநேரம்
மழைமேகம் கண்டுவிட்ட மயிலாய்
சிலநேரம்
பலநாள் கழித்து
பழையதைக் கண்டுவிட்ட பிச்சைக்காரனாய்
சிலநேரம்
என்று சில்லிடும் மகிழ்ச்சியது
கோடையில் விழும் மழைத்துளியாய்
மறைந்து போகும் எங்கோ

பதம்பார்த்து விதைக்கக் காத்திருப்பவனுக்கு
மழை வேண்டும்
பதமாய் பெயர்த்தெடுத்த ஈரப்பானைக்கு
வெய்யில் வேண்டும்
அறுத்துவிட்டு கதிரடிக்க காத்திருப்பவனுக்கு
விரைவாய் வீசும் காற்று வேண்டும்

ஒவ்வொரு வடிமைப்பும் ஒவ்வொரு தேவை பொறுத்தே
என்றாலும் ஒவ்வொன்றும் வக்குக்கப்பட்டது ஒவ்வொரு காலம் பொறுத்தே

அவனுக்கு சூரவெளியும் வேண்டும்
அதனூடே சுரம் மீட்டும் தென்றலும் வேண்டும்
சுட்டெரிக்கும் வெய்யிலும் வேண்டும்
உறையவைக்கும் பனியும் வேண்டும்
சிலநேரம் இறைவனும் வேண்டும்
சிலநேரம் மிருகமும் வேண்டும்
காதலிலும் களிப்படைவான்
காமத்திலும் புலப்படுவான்
கள்ளும் நஞ்சும் கலந்தே வேண்டும் என்பான்

கல்லைக் காணும்போது கடவுள் இல்லை
கடவுளை காணும்போது கல்லில்லை

அவற்றிற்கு அப்பாற்ப்பட்டவன்.....

புதிய கோணம்...

நிலா முகம் விழுந்து
உடைகிறது தண்ணீர் தடாகம்

பூமி சுழலவில்லை ஆனால் இரவு பகல்
பூமியை சுற்றுகிறது சூரியன்

பகலில் பழுப்பு வானம்
தண்ணீர் சுடுகிறது
தீ சில்லிடுகிறது
காற்றில் கருந்துகள்
பனிக்கட்டி கருமை நிறம்
பசுமை என்பது சாம்பல் நிறம்

மான்களுக்கு புலிப்பல்
புலிகளுக்கு கிளி மூக்கு
கிளிக்கு யானைக்கால்
யானைக்கு பூனை உடல்

வேரில்லாத மரம்
கிளையில்லா தழை
நிறமில்லா இலை

பெண்மை ஆளுமை
ஆண்மை கருதரிக்கிறது

இந்த எதிர்மறைகள் அனைத்தும்
ஒரு புதிய கோணம்

ஒரு மிருகம்...

ஆடை அணிந்து வலம் வருகிறேன்
அழகாய் இருக்க முயல்கிறேன்

மொழிகளில் வல்லமை காண்கிறேன்
பிழை என்கிறேன்
நிறை என்கிறேன்

இறக்கம் கொள்கிறேன்
வார்த்தை வடிக்கிறேன்
கதை கவிதை புணைகிறேன்

இசை இசைக்கிறேன்
பா படிக்கிறேன்
தூரிகை தொடுகிறேன்
ரசிக்கிறேன்
சிரிக்கிறேன்
மறக்கிறேன்
நினைக்கிறேன்

பண்பாடு காண்கிறேன்
பதவி ஏற்கிறேன்
பணிவிடை செய்கிறேன்

நன்றி
கருணை
காதல்
அன்பு
பாசம்
நேசம்

என்று பலவாறு
வேறுபடுத்த முயன்றாலும்

உண்மை சுடுகிறது
மனிதன் ஒரு மிருகம்
என்று உணரும் போது...

ஏற்றுக்கொண்ட வேளையில்...

ஏற்றுக்கொண்ட வேளையில்
யாம் என்னசெய்தோம்? என்று
நினைக்கையில் எரிகிறது நெஞ்சம் எரிமலையாக
தமிழ்மகளின் தலைமகனை
தரணியில் தமிழனின்
அறமும் மறமும் வற்றிவிடவில்லை
என்று அறிதியிட்டு வரையறை செய்தவனை
எம்மினத்தின் இறுதி மன்னனை
இங்கு இழுத்துவந்து
கழுவேற்ற வேண்டுமென்று
கவிதைபாடி கட்டளைப் பிறப்பித்தவர்
அதே தமிழனின் தலைமையாய்
இருக்கிறாரென்றால்
உண்மையில் தமிழன்
தரம் தாழ்ந்துதான் போய்விட்டான்
குணம் மறந்துதான் மாய்ந்துவிட்டான்

தமிழனாகவே தொடர்கிறேன்....

தமிழனாகவே தொடர்கிறேன்
ஆங்கிலத்தை அறிவாய் நினைக்கும்
அறிவிலிகள் மத்தியிலும்

அம்மா என்பதை அடகுவைத்து
அம்மி என்றழைக்கும்
வாடகை வார்த்தையில்
பெருமிதம் கொண்டு
மார்தட்டிக்கொள்ளும்
மடையர்கள் மத்தியிலும்

ஆங்கிலத்தால் ஆகாரம் கண்டாலும்
எம்மொழி
எம்மினம்
எம்மக்கள்
என்று இருக்கும்
இருமாப்புக்கொண்ட
தமிழனாகவே தொடகிறேன்
என்றென்றும் பெருமையாக

நானே உவமையானேன்....

நானே உவமையானேன்
உணமைக்கும் தத்துவத்திற்கும்
இடையில் ஊசலாடும்
உவமை வாழ்க்கைக்கு

நானே உவமையானேன்
உயிர்விட்ட உடலாய்
பத்து கால்களில் ஊர்வலம்
போகும்போது

நானே உவமையானேன்
வெறுமையாய் வந்து
வெரும்கையாய் போகும்போதும்

நானே உவமையானேன்
உண்மை உணர்த்திப்போனேன்
உணர்ந்து கொண்டவர்
யாரென்றுதான் தெரியவில்லை

சில....

நண்பன்

இருப்பானென்றா இறுமாந்திருந்தேன்?
தாங்குவானென்றா தவித்திருந்தேன்?
நீங்குவானென்று நினைக்கவில்லையே
ஒரு கணப்பொழுதும் நான்!

---------------------------------------------------------------------
காதல்

இருந்துவிடுகிறேன் எப்பொழுதும்
உன் நினைவில் தூங்காமல்
பதிந்துவிடுகிறேன் என்மனதில்
உன் உருவம் நீங்காமல்
உதிர்ந்து விழுகிறேன் காதலில்
காய்ந்து போன சருகாக
நீ உயிர்ப்பிப்பாய் என்று இருக்குறேன்
இன்னும் உருவாக

-------------------------------------------------------------------
கல்லறைக்குள்

நாளையேனும் வருவாயா?
என்று கத்திருக்கிறேன்
என் கல்லறைக்குள்
இன்னும் என்னுயிர் உறங்காமல்

-------------------------------------------------------------------

ஆணவக்காரன்

இன்னுமிருக்கிறானென்பதை எரியூட்டி
இன்னுமா இருக்கிறான்? என்றுசெய்தால்
இருப்பவனும் இல்லாமல் போவானே!
என்று ஆகும் வழி செய்ய
ஆவலாய் அன்புடன்
சிரம் தாழ்த்தி
கரம் கூப்பி
வேண்டிக்கொள்கிறேன் வேந்தனை

--------------------------------------------------------------------

காரணம்

இதுதானோ?
என்றுணர
எழும்பி வரும்
கனைகள் அனைத்தும்
முரண்பட்டு
முரிந்துபோயின
முன்னில்லாமல்....

உன்னதம் எது?

மண்ணை முட்டினாலும்
விண்ணை எட்டினாலும்
வேர் விடுத்தாலும்
விழுது வளர்த்தாலும்
நிழல் நிறைத்தாலும்
கனி கொடுத்தாலும்
விதை உதிர்த்தாலும்
பசுமை படர்ந்தாலும்
காற்று கலைத்தாலும்
உதிர்ந்தாலும்
கசிந்தாலும்
வெட்டுண்டாலும்
கட்டுண்டாலும்
சாளரமானாலும்
தீ தீண்டினாலும்
நீர் பெயர்த்தாலும்
அது அதுவாய்
இருத்தல் என்பது
உன்னதமே

இறுதியாய் ஒரு ஒப்பாரி...

11-Jun-11 அன்று என்னை விட்டு பிரிந்துவிட்ட என் நண்பனுக்காக இறுதியாய் ஒரு ஒப்பாரி

போய்வா நண்பனே போய்வா
என்னை மட்டும் விட்டுவிட்டு
போகத்துனிந்தவானே போய்வா
நீ போய்வா

நீ வரப்போவதில்லை என்றுணர்ந்தாலும்
அற்ப ஆசையில் சொல்கிறேன்
போய்வா நண்பனே நீ போய்வா

கண்களில் வழியும் கண்ணீரோடு
இறுதியாய் உன்னை காண முடியாமல்
கண்ட்டுண்டவன் சொல்கிறேன்
போய்வா நீ போய்வா நண்பனே

கனத்துப்போன இதயம் இங்கே
மரத்துப்போன போதிலும்
உன் நினைவுகள் நீத்துப்போகாது
என் நண்பனே நீ போய்வா

என் சுமைகளை இறக்கிவிட்டு
நீயே சுமையாகிப் போனாய்
உன்னை சுமக்க முடியாமல்
சுருங்கிக் கிடக்கிறேன் நண்பனே
போய்வா நீ போய்வா

கடல் கடந்து இருந்தாலும்
கண்ணீரை நிறுத்த முடியவில்லை
பறந்து வந்துவிட துடித்தாலும்
காலம் தடையினை எடுக்கவில்லை
நீ போய்வா நண்பனே நீ போய்வா

உன் இறுதிப் பயணத்தில் இல்லாமல் போன
இந்தப் பாவி பாடுகிறேன் உனக்காக
ஒரு பாடல் போய்வா நண்பனே
நீ போய்வா

உலகம் சொல்லித்தந்தவானே
நீ சொல்லாமல் கொள்ளாமல்
போனதேன் நண்பனே
போய்வா நீ போய்வா

துயரத்தை பகிர்ந்தவானே
துக்கத்தை துடைத்தவனே
நீயே துயரமாகி துக்கம் தந்து
போனாயே நண்பனே போய்வா நீ போய்வா

நாளை எனக்காய் நாள்வரும்
எனக்காக நீ காத்திரு
அந்த நாளுக்காக நான் காத்திருக்கிறேன்
இப்பொழுது நீ போய்வா
என் நண்பனே நீ போய்வா

ஏதோ சொல்கிறாய்......

என்னை நோக்கி
ஓடிவருகிறாய்
நகரவில்லை நான்
பாய்ந்து வருகிறாய்
பயப்படவில்லை நான்
சில நேரம் அடிக்கிறாய்
சில நேரம் அணைக்கிறாய்
ஆசையாய் அடைகிறாய்
அவ்வப்போது அத்து மீறுகிறாய்
ஈரமாக்கிச் செல்கிறாய்
பரிசை தந்து
ஏதோ சொல்கிறாய்
விளங்கவில்லை
அலையே

Monday, July 11, 2011

வேல்விழியா?

வேல்விழியா? இல்லை
விழிவழி வேலா?

பட்டைநெற்றி பளபளவென!
தொட்டிட விரலோ விறுவிறுவென!

கத்தை குழலோ காதுகளோரம்
காமத்தீயாய் கரைபுரண்டோடுது!

நெற்றிப்புருவம் தரித்தபாணம்
விரைந்துவருகுது திரித்திடவே!

நாசியின்நீளம் ஒலிந்துவந்து
விழைகுவழைக்குது மெலிந்துவந்து!

தேன்சுளையோ எனநினைய
தானிதழே என தளிர்க்குது!

முத்தாய் இங்கே பளக்குது
பற்க்கோர்வை தான் சிரிக்குது!

வாழைச்சுருளின் மென்மைதானோ?
அதுபடர்ந்த மேனிதானோ?

கொங்கையோ பொதிகையோ?
குவிந்திருக்கும் குமரியோ?

இடையே இல்லையெனவோ
பின் நோக்க அழகிருந்திடவே

வாழைத்தண்டாய் வழுவழுவென
கால்களிரண்டை கண்டிடலாமோ?

மலர்க்கரம்தான் தழுவிடுமோ?
பூவிரல்தான் நழுவிடுமோ?

மோகத்தில் எனை மாய்த்திடுமோ?
சொர்கத்தில் கொண்டு சேர்த்திடுமோ?

அழுகுரல்....

சிந்தனை மறந்து சிரித்து
கண்களின் கண்ணீர்
முத்துக்களாய் சிதறி ஓடும்
பொழுதிலும்.....

பகலை இரவாய் நினைத்து
எவருடனும் பேச தவிர்த்து
தனிமையை தழுவிக்கொள்ளும்
பொழுதிலும்...

மனமென்னும் குப்பைக் கூடையில்
கிழித்தும் கழியாமலும் வீசப்பட்ட
நினைவுகளை அலசி அடுக்கும்
பொழுதிலும்....

கணினித்திரையில் கண்களைப் பதித்து
காரியமே கண்ணாய் இருந்து
கடமையாற்றி காலம் கழிக்கும்
பொழுதிலும்....

சிதறிய சிந்தனைகளும்
சிதைக்கப்பட்ட நினைவுகளும்
தொடபில்லாமல் தொடர்ச்சியாய்
வந்து கனவாய் கவ்வும்
பொழுதிலும்....

நிலையில்லா மனம் நிலையான
இடம் தேடி நித்தம் நித்தம்
நீந்தி காலம் கடத்தும்
பொழுதிலும்......

அலையடிக்கும் கரைபோல்
சலனம் சஞ்சரித்து சலனப்படுத்தி
சஞ்சலம் செய்யும்
பொழுதிலும்........

எனக்குள் கேட்கும் எங்கோ
ஓர் அழுகுரல்
ஏனோ??????????

அன்னையே!!!

அழகாய் இருந்து
அமைதியாய் கிடந்து
மனதை ஆட்கொள்கிறாய்

சிலநேரம் ஆர்ப்பரித்து
அள்ளிக் கொ(ல்)ள்கிறாய்
நீயே நின் மக்களை

மரங்களைப் பெயர்த்தாய்
பரவாயில்லை

அனால் நீ அறுத்துக்கொண்ட
மொட்டுக்கள் எத்தனை?
பிய்த்துப்போன பூக்கள்
எத்தனை?
அள்ளிச்சென்ற பிஞ்சுகள்தான்
எத்தனை? எத்தனை?

எத்தனைக் கவிங்ஞ்னை அழித்தாயோ?
எத்தனை மா மனிதனை அழித்தாயோ?
எண்ணிச் சொல்ல இயலுமா?

உனக்குப் பசித்தால்
உன் பிள்ளைகளை நீயே
உட்க்கொள்வதா?

உன்னை அழகுபத்திக்கொள்ள
இத்தனை உயிர்களை
உருக்குவதா?

பிள்ளைகளின் இரத்தத்தில்
தாய் மின்னிக் கொள்வதா?

நீ புரண்டு படுத்து
எங்களை அழிவில் ஆழ்த்துவதா?

மலைகளை பெயர்த்துவிட்டு
பிணங்களை குவிக்கப் பார்க்கிறாய்

உன் பல்லிடுக்கில் மாட்டிக்கொண்ட
மண்டை ஓடுகளை தண்ணீரால்
தள்ளிவிட்டுப் பார்க்கிறாய்

நீங்களே ஏன்?
நானிருக்கையில் என்கிறாயா?

வேண்டாம் இந்த விளையாட்டு
போதும் இனியேனும்
இதனை நிப்பாட்டு

தவிர்க்க நினைக்கும் கணங்கள்....

கணப்பொழுதில் கவர்ந்துவிட்ட இனமொன்று

சலனம் காட்டி சட்டென்று கடந்து சென்றுவிட

பதிந்துவிட்டது பசுமரத்து ஆணியைப்போல்
பற்றிக்கொண்டது பகீரென்று பரவசம்

எங்கிருந்தோ எரிபொருளை ஏற்றிவந்து
தெளித்துவிட்டு போனது வளைவின் நினைவுகள்

ஆனந்தம் கொடுத்தாலும் அனலாய் வீசியது
சுவாலை சுட்டெரித்தது, கனலாய் கழிந்தது கணங்கள்

நினைவுகளை திருப்பமுயன்றும் கலைக்க முயன்றும்
தொட்டுவிட்டது தோல்வியைத்தான் தவிர
வேறொன்றும் இல்லை

ஆட்டிவைத்ததை அணைக்கத்தான் முடியவில்லை
அடக்கவாவது முடிவு செய்து முயன்று

இயற்கையின் கீறல் வழி தெளித்துவைத்து
தணிக்க முயன்று தணித்ததாய் தோன்றினாலும்

எப்பொழுது வேண்டுமானாலும் பற்றிக்கொள்ளும்
பக்குவத்தோடு பயமுறுத்தி வருகிறது

தவிர்க்க நினைக்கும் கணங்கள்

கருப்பு

" எலேய்... எங்கெடா கருப்ப பத்தி தெரியும்ல.....எங்கெடா ஒரு எகுரு எகுருன்னா... உங்கெடாக்கு கொட சரிச்சுரும்டா...." கழண்டு வரும் கால்சட்டையை பிடித்துக்கொண்டும், சரிந்து விழும் பள்ளிக்கூடப்பையை சரிசெய்தவாறு கூறினான் முத்துராசு

"ஆமா.... இவுரு கெடா... பெரிய்ய..... கருப்பசாமி குதுர..... போனவாரம் எங்கைய்யா சந்தைலேர்ந்து வாங்கியாந்த கெடாவ பாத்தேன்னு....... வைய்யி ..... உன்கெடா காணாம போயிரும்டா... அரிசிமூட்ட " என்று அவனை உசுப்பேத்தினான் மாடசாமி.

"ஏலேய்......... கருக்காபல்லா அபடீன்னா உங்கெடாய்க்கும் எங்கெடாய்கும் சோடி போட்டுக்குவோம் தம்பியாரே.... உங்கெடா செயிச்சா பத்து சிலேட்டு குச்சி, கைப்புடி கொடுக்காபுளி, கார்ருவாய்க்கு நாவபழம் தாரேன் அதே எங்கெடா எங்கெடா செயிச்சா... நீ தாரியா?" என்று வீராவேசமாய் கேட்டான் முத்துராசு

"நாளைக்கு சாயங்காலம் மரக்காயர் களத்துல சோடி போடலாம் தம்பியரே நீ உங்கிடாய கூடியா நானும் எங்கிடாய கொண்டாரேன்" என்றவன்

யோசித்தவாறே "பத்து சிலேட்டு குச்சி, கொடுக்காபுளி சரி, ஆனா நவபழம் கார்ருவைக்கு முடியாது தம்பியாரே... வேண்னா... பத்துகசுக்கு வாக்கித்தாரேன்" என்றான் மாடசாமி குரலை தாழ்த்தியவாரே.

"சரி நாளைக்கு சாயங்காலம் மரக்காயர் களத்துல சோடி போட்டுகாலாம். பந்தயம் ஒப்புத்துகிரேன்னு
கருப்பசாமி மேல சத்தியம் பண்ணு " என்று இருவரும் சத்யம் செய்து உள்ளங்கையில் கிள்ளிக்கொண்டு வீடு திரும்ப.

வாசலில் தண்ணீர் தெளித்துக் கொண்டிருந்த முத்துராசு அம்மா "ஏய்யா?..... ராசா....... முத்துராசு.... பள்ளிக்கூடத்லேருந்து வர இம்புட்டு நேரமா ராசா? ஆத்தா காப்பித்தண்ணி கலந்து வச்சிருக்கேன் எடுத்துக்குடி... ஐயா இப்ப வந்துருவாக.." என்ற அவள் வார்த்தைகளை காதில் வாங்காமல் வீட்டுக்குள் ஓடிய முத்துராசு திண்ணையில் பையை வீசி எறிந்துவிட்டு கொள்ளபுரம் நோக்கி ஓடினான்.

அங்கு கட்டப்பட்டு கம்பீரமாய் நின்றது அவனது கிடா கருப்பு. அதுவும் இவனை கண்டவுடன் கட்டப்பட்டிருந்த மரத்தை சுத்தி சுத்தி வந்தது, வலுக்கட்டாயமாக இழுத்து கட்டினை அவிழ்க்க முற்ப்பட, அதற்குள் முத்துராசு ஓடி கருப்பை அனைத்துக் கொண்டான்.

மெல்ல கருப்பின் கொம்புகளையும், கால் கொளும்புகளையும் மெல்ல வருடினான், தன் மடியில் கருப்பை படுக்க வைத்து தடவிக் கொடுத்துகொண்டே "எலேய் கருப்பு... நாளைக்கு அந்த கருக்காபல்லனோட கெடாய ஒரே முட்ட முட்டி தள்ளிபுடு என்ன? கொண்டுபுடாத பாவம்" என்றான்.

"ராமதேவநல்லூர்ல கெடா வெட்டாம் எல்லாக் கெடாயையும் வாங்கிட்டு போயிட்டானுக ஊர்ல கெடாவே கெடைக்கலியாம் நம்ப கருப்ப கூட நல்ல வேலைக்கு கேட்டானுக நாந்தேன் முடியாதுன்னுடேன் " என்று மனைவியிடம் பேசியவாறாய் உள்ளே நுழைந்தார் முத்துராசுவின் அப்பா.

அப்பாவை பார்த்தவுடம் "ஐய்....கருப்பு......... ஐயா.... வத்துட்டாக" என்று எழுந்து ஓடிச்சென்று அப்பாவை கட்டிகொண்டான் முத்துராசு. அவர் தனது சட்டைப் பையில் வைத்திருந்த பொட்டலம் ஒன்றை எடுத்து முத்துராசுவிடம் கொடுக்க "ஐய்.... குருவிரொட்டி" என்று ஆசையோடு வாங்கி ஓடிசென்று அதை பிரித்து எண்ணத்தொடங்கினான்.

இரவு முத்துராசுவுக்கு திடீரெண்டு காய்ச்சல் வந்தது, அவனால் எழுந்திருக்க முடியவில்லை "ஆத்தா .....ஆத்தா ........." என்று முனகிகொண்டே இருந்தான். காய்ச்சல் அணலாய் வீச முகத்தில் வலதுபக்க கன்னம் வீங்கிக்கொண்டே வந்தது.

"இது பொன்னுக்கு வீங்கி தாயி, ஒன்னும் பயப்படாத நல்ல இள ஆட்டுக்கறியா இருந்தா சொவரொட்டிய சுட்டுக்கொடு, கொழுப்பையும், காலையும் போட்டு சூப்பு வச்சுக் குடு ஆத்தா பொன்னுக்கு வீங்கி காணாமப் போயிடும்" என்று வைத்தியம் சொன்னாள் வெள்ளசீலகிழவி.

"ஐயா..... முத்துராசு....... எழுந்திரு..... செல்லம்" என்று அவனை எழுப்பி "இந்தா ...ராசா.... இந்த சூப்பகுடி ஒடம்பி சரியாயிரும் கண்ணு" என்று அம்மா தந்த சூப்பு டம்ப்ளரூடு வந்து கொள்ளபுற அறிகாப்படியில் அமர்ந்தான்.

இப்போது கருப்பு கட்டப்பட்டிருந்த மரத்தில் வெறும் கயிறு மட்டும் கட்டியிருப்பதை கண்டான். கையில் இருக்கும் அந்த டம்ப்ளரையும் அனாதையாய் கிடந்த கயிறையும் மாறி மாறிப் பார்த்தான். துக்கம் தொனடியடைக்க தூக்கி வீசினான் டம்ப்ளரை. அழுகையும் ஆத்திரமும் பொத்துக்கொண்டு வர கண்ணீர் வெடித்துச் சிதறியது அவனுக்கு. கருப்பு................என்று கதறினான்.

மரண அவஸ்த்தை....

சமபந்தியாய் சமர்ப்பணம்
ஒரே நாளில் பலருக்கு
ஒரே பந்தியில்
அதே இலையில்
மீண்டும் மீண்டும்

பக்குவமில்லா பரிமாற்றங்கள்
ஈடுபாடில்லாத
கற்பனை கதகளி
அரங்கேறியது அமைதியாய்
பல ஊமை நாடகம்

வெறி ஒருபுறம்
வெறுமை ஒருபுறம்
புனிதம் மட்டும்
வாசல்புறமே

கலைந்தது சடுதியில்
அவிழ்ந்ததை மறந்து
தொலைந்தது கலாச்சாரம்
கண்ணியம் காற்றோடு

கருணையில்லை
கண்ணீரில்லை
வலியிருந்தபோதும்
வராத வருத்தம்

கைநீட்டி
காசு வாங்கும்
போதும் மட்டும்

மரண அவஸ்த்தை

நிலாச்சோறு

பார்வை
தொட்டுவிடும்
தூரத்தில்தான்

ஆனால்
எட்டிப்பிடிக்க
முயன்று
ஏமாற்றம்
மட்டும் ஏனோ?

தொட முயன்ற
தருணமெல்லாம்
தேய்பிறையாகி
காணாமல் போக

விலகும்போது
வளர்பிறையாகி
கண்களுக்கு மட்டும்
முழுநிலவாய்

அழகிய அம்புலியை
அடைந்துவிட
அழுது புரண்டாலும்
கனவில் மட்டுமே
கைக்கெட்டும்
நினைவில் அன்று

என்றுணர்ந்து
தேற்றிக் கொண்டாலும்

இன்றுவரை எனக்கு காதல்
ஒரு நிலாச்சோறு மட்டுமே

யாரு அதிக இலவசம் தராங்க.....

யாரு அதிக இலவசம் தராங்களோ அந்தக் கட்சி ஜெயிக்குது ஏன்?

இலவசம் தரதுன்னால மக்கள் வாங்குதா? இல்ல மக்கள் வாங்கர்துனால அவங்க தராங்களா?. பொருள் வங்குரவன் விரும்பி வாங்குனாதான கடைக்கார விப்பான். யாரும் வாங்காம இருந்தா? கடைய மூடிட்டு போய்டுவான் இல்லியா?

இப்போ தப்பு யார்கிட்ட இருக்கு? அரசியல் வாதி கிட்டயா? இல்ல மக்கள் கிட்டயா?

நாம உண்மையா சிந்திக்கிறதா இருந்தா யார மாத்தணும்? யாரா குறைசொல்லனும்? அவன் குடுக்குறான், அவன் கெடுக்குரான்னு சொல்லி சொல்லி எல்லாத்தையும் வாங்கிட்டு. எதாவது ஒரு கட்ச்சிக்கு ஓட்ட போட்டுட்டு வேலைபாக்க போய்டறது.

என்ன அரசியல் நடக்குது இங்க? ஒன்னும் மட்டும் நல்ல தெருஞ்சுக்குங்க எதுவுமே இலவசம் இல்ல. நீங்க வாங்குற ஒவ்வொரு பொருளுக்கும், எப்டியாவது ஒரு வழியில நீங்க பணம் குடுத்துதான் ஆகணும்.

அடுத்தது விலை வாசி- பெட்ரோல் வில 50 - 60 ரூபாய்க்கு உயர்ந்துட்டா, உடனே எல்லா பொருளோட விளையும் ஏறும் சரி, வில கொறஞ்சா எத்தனப் பேரூ விளைய குறைக்கிறாங்க சொல்லுங்க?. இதுக்கும் அரசியல்வாதி காரணமா? மக்களோட பேராசக் காரணமா? இல்ல ஒரு பொருளை பதுக்கல் பண்ணி விலையேற்றம் ஆகவைத்து பிறகு சந்தைக்கு அதிக விலைக்கு கொண்டு வாராங்களே, அதுவும் அரசியல் வாதியா?

நீங்க வேண்டாம்னு சொன்னா யாரும் உங்கள மிரட்டப்போவதில்லை? மிரட்டவும் முடியாது?

அது என்ன? எல்லாரும் கலைங்கர மட்டும் குறை சொல்றீங்க, போன தேர்தல்ல யாருதான் அறிவிக்கல. எப்படியும் எல்லாரும் அறிவிக்கப் போறாங்க, அதுல யாராவது கண்டிப்பா வரப்போறாங்க, இதுல என்ன ஒருத்தர மட்டும் எல்லாரும் குறை சொல்றது. என்னமோ இப்போ கலைங்கரத் தவிர மத்தவங்க எல்லாம் காமராஜர் மாதிரி?

நான் கலைங்கருக்கு சப்போர்ட் பண்றதா யாரும் நினைக்க வேண்டாம், இதுவே MGR கொடுத்தப்ப பொன்மனச் செம்மல் அப்படீன்னு சொன்னது ஏன்? எனக்கு புரியல?

இன்னொன்னு நல்ல தெரிஞ்சுக்குங்க எல்லாரும் பேசும்போது, அவங்களையும் அவங்க பொருளாதரத்தையும் மனசுல வச்சு மட்டும் பேசக் கூடாது. இன்னமும் ஒரு கிலோ ஒரு ரூபாய் அரிசிய நாம்பி நெறைய குடும்பங்கள் இருக்கு, காப்பீட்டுத் திட்டத்த வச்சு ஒருவேள மாத்திர வாங்க வழியில்லாதவன் எத்தனையோ மக்கள் நல்ல குனமடைஞ்சு இருக்காங்க. அறிவிச் அல்லது நிறைவேத்துன திட்டம் பத்துல நாலு தப்பா அத புறந்தள்ளுங்க, ஆறு சரியா? அதப் பாராட்டுங்க? எல்லாமே தப்பா? ஆட்ச்சிய மாத்தி ஓட்டுப் போடுங்க.

எல்லாரும் அவங்க நெனைக்கிற கட்சி ஜெயிக்கனும், அவங்க நெனைக்கிற தலைமை இருக்கணும். இதுதான் அவுங்க அவுங்க ஆசை.