Saturday, August 27, 2011

ஒரு தமிழன் முதலமைச்சராய் இருந்திருந்தால்

இதோ இன்னும் பதிமூன்றுநாட்கள் தான் நம் தமிழர் மூவரின் உயிர் ஊசலாடுகிறது. ஆறுகோடி மக்கள் இருந்து என்ன பயன்? வெறும் கண்டனங்கள், அறிக்கைகள், போராட்டங்கள் மட்டும் போதுமா? எவர் மதிக்கிறார் இப்பொழுது?

அய்யா இருந்தபோது அய்யா செய்வாரா? அய்யா செய்வாரா? என்று கையேந்தினோம். தந்தியடித்தார், அறிக்கை விட்டார், கவிதை பாடினார், மகளுக்கு மந்திரி பதவி இல்லை என்று மத்தியில் மிரட்டினார், உண்ணாவிரதம் என்கிறபெயரில் கடற்கரையில் படுத்து இரண்டு மணிநேரம் காற்றுவாங்கிவிட்டு வந்தார், கவிதைபாடினார், கண்ணீர் வடித்தாரே ஒழிய வேறொன்றும் இல்லை பலன். இழப்பு ஈழத்தின் முனேற்றம், புலிகளின் அழிவு, இரண்டுலச்ச மக்கள் படுகொலை.

இப்போது அம்மாவை உட்காரவைத்துவிட்டு அம்மா செய்வாரா? அம்மா செய்வாரா? என்று கையேந்தி நிற்கிறோம்.

வந்தார் மத்தியரசு இவரை மதிக்கும் என்று நினைத்தது பொய்யாய் போக, போர் என்றால் மக்கள் சாகத்தான் செய்வார்கள் என்றவர், பிரபாகரனை கைதுசெய்து இந்தியா கொண்டுவர வேண்டுமென்று தீர்மானம் போட்டவர், திடீரென்று ஈழ மக்கள் என்றார், எம்.ஜி.ஆர் போல் புதிய அவதாரம் எடுத்தார் தீர்மானம் போட்டார், அதற்கு பலனாக சமச்சீர் கல்வியை அழித்துவிட துடித்தார்.

இப்பொழுது இன்று மூன்று தமிழர்களை அதுவும் தமிழ்நாட்டில் தூக்கிலிடப் போகிறார்கள். தமிழகத்தின் முதல்வர், தமிழக மக்களை யாரிடமும் கையேந்த விடமாட்டோம் என்று சொன்னவர் இப்பொழுது மவுனம் காக்கிறார். கருத்துரைக்கவோ, அறிக்கை விடவோ, தீர்மானம் போடவோ முன்வரவில்லை.

இத்தனை மக்களும் கேட்டுக்கொண்ட பிறகும் முதல்வர் அமைதிகாக்கிறார் என்றால் என்றால் அவர்கள் தூக்கிலிடப் படுவதை மறைமுகமாக ஆதரிக்கிறார் என்றே அர்த்தம்.

இதற்க்கெல்லாம் காரணமென்ன?

ஈழப் பிரச்சனையாகட்டும், மீனவர் பிரச்சனையாகட்டும், இந்த தூக்குதண்டனை பிரச்சனையாகட்டும் தமிழ்நாடு என்பதால் தான் இப்படி. இதே வேறு மாநிலமாக இருந்தால் நடப்பதே வேறு என்றும் சொல்லிக்கொள்கிறோம் வெக்கமில்லாமல்.

இதற்க்கெல்லாம் காரணமென்ன அந்தந்த மாநிலங்களில் அவர்களின் தலைவர்கள் அவர்கள் இனத்தவரே. அனால் நம் மாநிலத்தில்தான் போவோர் வருவோரெல்லாம் தலைவர். கண்டவரெல்லாம் முதல்வர் ஏதோ அதிசயமாக எம்.ஜி.ஆர் ம், வை.கோ ம் இருந்துவிட்டால் கண்டவரையெல்லாம் தலைவராகவும் முதல்வராகவும் கொள்வது நம் இனத்திற்கு நாமே துரோகம் செய்வது போலாகுமே?

இதோ இப்பொழுது கையேந்தி நிற்க வேண்டிய நிலைமை ஏன்? நாம்தான் நம் மக்களுக்கும் துரோகம் செய்கிறோம். யார் எந்த பதவியில் இருந்து தவறு செய்தாலும் அவர்களை சொல்லி குற்றமில்லை. அவர்களை அங்கு வைத்த நம்மைத்தான் சொல்லவேண்டும்.

ஒரு இனத்திற்கு தலைவன் அந்த இனத்தை சேர்ந்தவன் இல்லை என்பது எவ்வளவு பெரிய முட்டாள் தனம். பிறகு அவரிடம் எதிர்பார்ப்பது அதைவிட பெரிய முட்டாள் தனம்.

வாழ்க தமிழ், வாழ்க தமிழ் ஈழம், வாழ்க தமிழ் நாடு, வாழ்க தமிழ்மக்கள், வாழ்க திரவிட இனம், வாழ்க தமிழினம்இந்திய இறையாண்மைக்கு வெடி வைக்கிறது காங்கிரஸ்

அத்துனை போராட்டம், எதிர்ப்புகள், கோரிக்கைகளை மீறி பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகியோரது உயிரைப் பறிப்பதில் குறியாக காய் நகர்த்தி தான் நினைத்தப் பாதையிலேயே சென்று கொண்டிருக்கிறது காங்கிரஸ்.

ஆறுகோடி மக்கள் கெஞ்சி, கதறியும் ஈழத்தில் எதைப் பற்றியும் கவலைபடாமல் இரண்டுலட்ச மக்களை கொன்று குவித்ததோடு மட்டுமல்லாமல், இவர்கள் மூவரையும் தூக்கில் ஏற்றியே ஆகவேண்டும் என்ற வெறியோடு திட்டமிட்டு நடத்துகிறது இந்த அரசு.

ராஜீவ் காந்தி சாவிற்கு பழிவாங்குவது, லோக்பால் பிரச்னையை திசை திருப்புவது, மத்திய அரசுக்கு குடைச்சல் கொடுக்கும் தமிழக அரசுக்கு பிரச்னையை தருவது என்று ஒரே கல்லில் மூன்று மாங்காய் திட்டத்தில் இந்த மரணதண்டனையை நிறைவேற்ற துடிக்கிறது இந்த முட்டாள் காங்கிரஸ்.

இத்தனை திட்டங்களை போட்டு இந்திய இறையாண்மைக்கும், ஒருமைபாட்டிற்கும் வெடி வைப்பதாய் இருக்கும் என்பதை மறந்தோ அல்லது கவலைப்படமலோ செய்லப்டுத்தப் படுகிறது இந்த தண்டனை.

ஈழ அழிவிற்கும், இந்த மூவரது உயிர் பறிப்பிர்க்கும் இந்த காங்கிரசும், இந்திய அரசாங்கமும், இந்திய மக்களும் பதில்சொல்லியே தீரவேண்டும்.

அதுவரை தமிழனுக்கு இழைக்கப் பட்ட துரோகத்திற்கு இந்திய அரசும், இலங்கை அரசும் பதில் சொல்லும்காலம் விரைவில் வரும். ஒவ்வொரு உயிர்களுக்கும் சம அளவில் இழப்புகளை சந்திக்கவேண்டி இருக்கும். ஜனநாயகம், சமத்துவம் என்று நடித்துக்கொண்டு சுயநல அதிகார ஆட்சி நடத்தும் இந்த அரசியல்வாதிகளுக்கு முடிவு விரைவில் வந்து தெளிவு படுத்தும்.

காவிரி பிரச்சனை,
முல்லைபெரியாறு பிரச்சனை,
கிருஷ்ணா நதிநீர் பிரச்சனை,
ஒக்கேனக்கள் திட்ட பிரச்சனை,
சேதுசமுத்திர திட்டம்,
கச்சத்தீவை தாரைவார்த்துக் கொடுத்தது,
தமிழகமீனவர் பிரச்சனை,
ஈழப் பிரச்சனை
இப்பொழுது இந்த தூக்குதண்டனை என்று
அனைத்திலுமே இந்திய அரசாங்கம் தமிழனுக்கும் துரோகமே இழைத்துள்ளது

இவை அனைத்திற்குமான விடை வை.கோ சொல்வதுபோல் இந்திய வரைபடத்தை திருத்தி அமைப்பதைத் தவிர வேறுஒரு வழியும் இல்லை.இலங்கைக்கு இந்தியா பயப்படுகிறதா?பாராளுமன்றத்தில் நடத்தப்பட்ட இலங்கைத்தமிழர் பற்றிய விவகாரத்தில் வெளியுறவுத்துறை மந்திரி எஸ்.எம். கிருஷ்ணா அளித்திருக்கும் பதில்கள் தமிழருக்கு செய்யும் துரோகமாகவும், இலங்கைக்கு இந்தியா பயப்படுகிறது என்பதும் வெட்ட வெளிச்சமாக தெரிகிறது.

ஆறுகோடி மக்களின் கோரிக்கையை கவனத்தில் எடுத்துக்கொள்ள முடியவில்லை, சீனா என்னும் பூதத்தைகாட்டி பயமுறுத்திவரும் ஒரு சிறு நாட்டை அடக்கி கையாள தெரியவில்லை இவர்கள் நாட்டை வல்லரசாக்கப் போகிறார்களாம்? என்ன ஒரு பிழைப்பு இது?

கச்சத்தீவு இலங்கையின் எல்லையில்தான் உள்ளதாம். அதனால் தமிழக மீனவர்கள் போகக்கூடாதாம். இந்தியா - இலங்கை ஒப்பந்தப்படி அது இரு நாடுகளுக்கும் பொதுவானதாகவே இருக்க வேண்டும் என்றும், இருநாட்டு மீனவர்களும் அங்கு மீன் பிடித்துக் கொள்ளலாம் என்று இருப்பதுகூட தெரியாத ஒரு வெளியுறவு மந்திரி இருக்கிறார் என்றால் இந்தியாவின் தலையெழுத்தை நாம் என்னவென்று சொல்வது?

மதத்தின் பெயரால் சீனாவுடன் ஒருமனதாய் ஒன்றுபட்டு நிற்கும் அந்த நாட்டிற்கு ஒரு சிறு தீவை தாரைவார்த்துகொடுத்து தன்வசப்படுத்திக் கொள்ளலாம் என்று நினைக்கும் ராஜ தந்திரத்தின் மதிப்பை எப்படி எடைபோடுவது?


சொந்தநாட்டு மக்களுக்கு துரோகம் செய்து, இலங்கையில் இனப்படுகொலைக்கு உதவிசெய்து, உலகமே அவர்களை எதிர்த்துக்குரல் கொடுக்கும் பொழுது. இந்தியாமட்டும் முட்டுக்கட்டையாக இருப்பது எதற்கு? அரசியல் தந்திரமா? இல்லை பயமா?


இலங்கையுடனான உறவு அவ்வளவு முக்கியமா? ஏன்? அந்த உறவை வைத்துக்கொண்டு என்ன செய்யப் முடியும் என்று நினைக்கிறார்கள் இந்த உலகமாக புத்திசாலிகள் என்றுதான் தெரியவில்லை? பிறகு ஏன் பாக்கிஸ்த்தானுடன் மட்டும் அப்படி முடியவில்லை?

தமிழக மீனவர்கள் கொல்லப்படுவதும், காணமல் போவதும் குறைந்துள்ளதாம் இதை சொல்வது ஒரு வெளியுறவுத்துறை மந்திரி வெக்கமாயில்லை? இதில் தெற்காசியாவின் மிக்கபெரிய நாடு என்று பெருமைக்கு ஒன்றும் குறைச்சலில்லை.

காங்கிரசை இரண்டாக பிரிக்கலாம், இந்திராகாந்திக்கு முன் இந்திராகாந்திக்கு பின் என்று. இந்திரகந்திக்கு பிறகு இநதிய அரசியலில் திறமையான ஒரு நாடாளும் தொலைதுரப் பார்வைகொண்ட துணிச்சலான சூத்திரதாரி இல்லை என்றே கூறலாம். இலங்கை மட்டுமல்ல சீனாவே கண்டு பயப்படும் அளவிற்கு துணிச்சலான பல முடிவுகளை எடுத்தவர் அவர். அப்படி ஒரு தலைவர் காங்கிரசில் மட்டுமல்ல இந்தியவிலேயே இதுவரை எவருமில்லை.

இப்பொழுதைய காங்கிரஸ் தலைவர்களிடம் பயமும், பழிவாங்கும் உணர்ச்சியும், அண்டிப்பிழைக்கும் புத்தியும் மட்டுமே காண முடிகிறது. இந்தியாவின் ஜனநாயகம் பற்றியோ? இந்தியாவின் இறையாண்மையை பற்றியோ யோசிப்பதாய் தெரியவில்லை.

மதம், இனம், மொழி இவற்றை வைத்து அரசியல் செய்தவர்யாரும் நிலையை இருந்ததில்லை. அவ்வளவு சிறந்த பிரதமரை திகழ்ந்த இந்திராகாந்தியை வீழ்த்தியது மதத்தை தொட்டதன் விளைவு. ராஜீவ்காந்தியை வீழ்த்தியது இனத்தை தொட்டதன் விளைவு.

இவ்வளவு வரலாறு தெரிந்தும் மீண்டும் மீண்டும் அவற்றை தொட்டு அரசியல் செய்யும் இதுபோன்ற தலைவர்களாலும் அவர்களின் கேடுகெட்ட செய்லகளாலும் உலக அரங்கில் இந்தியாவின் பெருமையும், சிறப்பும் சிதரிக்கொண்டிருக்கிறது, சிறுது சிறுதாக இந்தியா தனது தனித்தன்மையை இழந்துவருகிறது என்பது மறைக்க முடியாத உண்மை, நாம் மீண்டும் யாருக்கோ மறைமுகமாக அடிமையாகிக் கொண்டிருக்கிறோம் என்பதும் கண்ணிற்கு புலப்படாத உண்மை.

Friday, August 26, 2011

ஓட்டைகள் நிறைந்தக் குடை

உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாட்டின் சட்ட திட்டங்கள், வரைமுறைகள் அனைத்தும் மிக அருமை என்று சொன்னால் என்னால் மட்டுமல்ல உண்மை விரும்பிகள் யாராலும் ஏற்றுக்கொள்ள முடியாது.


சட்டம் என்றால் என்ன? எந்த ஒரு தனிமனிதனும் தவறு செய்துவிடக் கூடாது. அதிலும் மக்கள் நலன் பாதிப்பு, பண்பாடு மற்றும் கலாச்சார சீரழிவு, தனிமனித ஆளுமை, தனிமனித சுரண்டல், ஒழுக்க மீறல் போன்ற விசயங்கள் முதன்மையாகும். சரி அப்படி செய்துவிட்டால்? விசாரணை தண்டனை. இவையணைத்தும் சரியாக நடக்கிறது என்றால் ஏன் தவறுக்க மீண்டும் மீண்டும் நடக்கிறது? அப்படி தவறுகள் நடக்கிறது என்றால் சட்டம் சரியில்லை என்றுதானே அர்த்தம். சட்டம் இங்கு ஒரு ஓட்டைகள் நிறைந்த குடையகத்தான் காட்சியளிக்கிறது எனக்கு.ஐம்பது ரூபாய் திருடியவனும், ஐநூறு கோடி ரூபாய் திருடியவனும் ஒரே முறையில் விசாரிக்கப் படுவதில்லை. உண்மையில் யாரை அதிகமாக அடித்து விசாரிக்க வேண்டும்? குறைந்தபணம் திருடியவனையா? அல்லது அதிக பணம் திருடியவனையா? ஆனால் இங்கு எல்லாமே தலைகீழாக நடக்கிறது. பிறகு ஏன் இந்த சட்டம் நமக்கு?

கிரிமினல் பீனல் கோட் என்னும் பிரித்தானியரின் இந்திய அரசியல் சட்டத்திலிருந்து பெயர்த்து உருவாக்கப் பட்டதுதான் இந்தியன் பீனல் கோட் என்று சொல்லப்படும் இந்த இந்திய அரசியல் அமைப்புச் சட்டம்.

இதன் அடிப்படி தத்துவம் என்ன வென்றால்? நூறு குற்றவாளிகள் தப்பிக்கலாம், அனால் ஒரு நிரபராதி தண்டிக்கப் படக் கூடாதாம். என்ன ஒரு முட்டாள் தனம் இது? நிரபராதி யார் குற்றவளி யார் என்று தெரியாத, கண்டுபிடிக்க முடியாத ஒரு சட்டம், நூறு குற்றவாளிகள் தப்பிக்கும் அளவிற்கு ஓட்டையுள்ள சட்டம் மாற்றப்பட வேண்டும் என்பதுதான் தீர்வாய் இருக்கும். சட்டத்திற்கு முன் அனைவரும் சமம் என்று சொல்லும் போது விசாரணையில் ஏன் இந்த வேறுபாடுகள்?

அது என்ன A Class, B Class, C Class சிறைவசதி யார் இந்த சட்டங்களை இயற்றியது? திருடனோ, கொலைகாரனோ, அரசியல்வாதியோ, போராட்டக்காரனோ, விசாரணைக் கைதியோ, தண்டனை கைதியோ யாராய் இருப்பினும் என்ன? சிறை அனைவருக்கும் ஒரே விதமாய்த்தானே இருக்க வேண்டும். அதில் என்ன வகுப்புப் பிரிவுகள்?.

இதுபரவாயில்லை தவறு செய்பவர்களை கண்டிக்கவும், கண்டுபிடிக்கவும் நீதிமன்றத்தில் ஒப்படைத்து தண்டனை வாங்கித்தரவும் நியமிக்கப் பட்டதுதான் காவல்துறை, புலனாய்வுத்துறை, ஆனால் இவை இரண்டியும் கட்டுபாட்டிற்க்குள் வைத்திருப்பது அதே தவறு செய்பவர்கள்தான். இதைத்தான் "திருடன் கையில் சாவி கொடுப்பது என்பார்களோ" என்று தெரியவில்லை,


அதிகாரத்தை தவறாக பயன்படுத்துபவர்களுக்கு என்ன தண்டனை என்று யாருக்குமே புரியவில்லை.

என்னைப் பொறுத்தவரை ஜன லோக்பால் திட்டத்துடன். இன்னும் சேர்த்துக்கொள்ளலாம்.
அதாவது விசாரணை செய்யும் காவல் துறையையும், புலன்விசாரணைத் துறையும், சட்டதிட்டங்கள் அனைத்தையும் உச்சநீதிமன்றத்தின் கீழ் கொண்டுவர வேண்டும்.

இவை இரண்டும் நீதிமன்றத்தை தவிர வேறு எந்த ஒரு அரசியல்வாதிக்கு கீழும் இயங்காமல் செய்துவிட்டாலே நாட்டில் முக்கால்வாசி பிரச்சனைகள் தீர்க்கப் பட்டுவிடும்.

நீதித்துறையை சார்ந்த இந்த இரு பிரிவுகளும் நீதிமன்றத்தின் கட்டுபாட்டில் இயங்கவேண்டும் என்பதுதானே நியதி. எந்த ஒரு அரசியல்வாதியும், அரசாங்க அதிகாரிகளும் இவை இரண்டையும் கட்டுப்படுத்த இயலாத முறையை இயற்ற விடும்.

ஆனால் அவையும் ஒரு குறிப்பிட்ட பொதுஅமைப்பின் கீழ் இயங்க வேண்டும். அது உச்சநீதி மன்றமாய் இருந்தால் இன்னும் பாதுகாப்பாய் இருக்கும்
.

இதுபோல் சட்டத்தை தனக்கு சாதகமாக அவர்கள் வளைக்க முயற்ச்சிக்கும் அத்துனை ஓட்டைகளும் அடைக்கப்பட வேண்டும்.

அனைவருக்கும் சமமான விசாரணை, சமமான நீதி, சரியான தண்டனை என்று கிடக்க வழி செய்கிறோமோ ஆண்டுதான் தவறுகள் குறையும். இல்லையெனில் தவறுகள் பெருகப் பெருக ஓட்டை சட்டப் புத்தகத்தின் பக்கங்கள் மட்டுமே பெருகுமே ஒழிய. நன்மையெதும் விளையாது.

இந்திய அரசியல் சட்டத்தின் அடிப்படை தத்துவத்தை மாற்றியமைப்போம்

"ஒரு நிரபராதியும் தண்டிக்கப்படக் கூடாது

ஒரு குற்றவாளியும் தப்பிவிடக் கூடாது"

Wednesday, August 24, 2011

பத்திரிகைகளுக்கு ஒரு வேண்டுகோள்ஒருநாட்டின் வளமான வாழ்விற்கு தேவை இரண்டு. ஒன்று வாள்முனை, இன்னொன்று பேனாமுனை. இதில் இரண்டுமே கூர்மையுடன் இருக்கவேண்டும். எது ஒன்று கூர் மழுங்கினாலும் அந்த நாட்டின் எதிர்காலம் கேள்விக்குறியாகும் என்பது மறுக்க இயலாத உண்மை.

இவை இரண்டும் எப்பொழுதும் நேரான பார்வைகொண்டும், இலக்கை நோக்கி மாறாத பாதைகொண்டும் இருக்க வேண்டும். எதுவொன்று தன இயல்பை இழந்தாலும் அந்நாட்டு மக்களுக்கு வாழ்வாதாரம் காணமல் போகும்.

இவற்றில் வாள்முனையை விட பேனாமுனைக்கு வலிமை அதிகம் என்பது மறுக்கப்படாத ஒன்று. அதை நிருபித்த சரித்திர சான்றுகள் பல. இப்படி ஒரு வலிமைவாய்ந்த ஆயுதம், இன்று நம்நாட்டில் உண்மையில் கூர்மையுடந்தான் இருக்கிறதா? இல்லை குறைந்தபட்சம் உயிருடனாவது இருக்கிறதா? என்ற சந்தேகம் இருந்துகொண்டே இருக்கிறது.

உண்மைகளை மக்களிடம் கொண்டு சேர்த்து விழிப்புணர்வை ஏற்ப்படுத்தும் அற்ப்புத பணியை இன்றைய நம் நாட்டு பத்திரிகைகள் செய்கிறதா? என்று கேட்டால் இல்லை என்றே கூறமுடியும்.

இன்றும் பத்திரிகைகளில் உண்மை செய்திகள்தான் வெளிவருகின்றன ஆனால் அவையனைத்தும் வக்கிரத்தின் உண்மைகள், ஆபாசத்தின் உண்மைகள், கேவலத்தின் உண்மைகள்.

இதுவா சிறப்பான பணி? இதுவா உண்மையான ஒரு பத்திரிக்கையின் அழகு? இல்லை இல்லவே இல்லை. சாதிகளுக்கு, மதங்களுக்கு என்று பிரிவினைவாதம் செய்யும் பத்திரிகைகள், ஆளும் கட்சிக்கும், எதிர்கட்சிக்கும் என்று அவர்கள் புகழ்பாட அடுத்தவரை இகழ என்று ஒரு பத்திரிகைகள், காசுபார்ப்பதர்க்கு மட்டுமே என்ற நோக்கில் செய்லபடும் பத்திரிகைகள் என்ற இவைஅனைத்தும் ஒரு நாட்டின் வளர்ச்சிக்கு புற்றுநோய் போன்று நாட்டை, நாட்டின் மக்களை, நாட்டின் வளர்ச்சியை கொஞ்சம் கொஞ்சமாக அரித்து பாழாக்கிக் கொண்டிருப்பவை.

கொலை, கொள்ளை, கற்பழிப்பு, திருட்டு, கள்ளக் காதல் போன்ற வக்கிர செய்திகளுக்கே முக்கியத்துவம் கொடுப்பது ஏன்? விளையாட்டு, ஆன்மீகம், கலை, வர்த்தகம், அறிவியல் சாதனைகள் போன்ற செய்திகளை பின்னுக்கு தள்ளுவதேன். அப்படி அவற்றில் எதாவது ஒன்று நிகழ்ந்தாலும் தனக்கு வேண்டியவர், வேண்டாதவர் என்ற பாகுபாடு, காழ்ப்புணர்ச்சி என்பவற்றை பொறுத்தே அமைகிறது ஏன்?

கடமை என்று சொல்லி அடுத்தவரது அந்தரங்களை பதிக்கும் நீங்கள் உங்கள் அந்தரங்கள் பிறரால் அறியப்படுவதை விரும்புவீர்களா? இல்லை உங்களுக்கு அந்தரங்கம் என்பதே கிடையாதா? இல்லை நீங்கள் அவ்வளவு தூயவர்களா? நீங்கள் பதிக்கும் விசயங்கள் உங்கள் வீட்டு பிள்ளைகளையும் பாதிக்கும் என்பதை உணராத அளவிற்கு முட்டாள்களா நீங்கள்? இப்படி பட்ட முட்டாள்களின் கையிலா பேனா சிக்கியிருக்கிறது. என்னே நம் நாட்டிற்க்கு வந்த சாபக்கேடு?

பிறர்க்கு செய்தி அறிவிப்பதென்றால், கற்பழித்தவனுக்கு தண்டனை கிடைத்தது என்று இருந்தாலே போதுமே? கற்பழிப்பை விளக்க வேண்டிய அவசியமென்ன? உங்கள் இரண்டு ருபாய் செய்தித்தாள் விற்க வேண்டும் என்பதற்காக எதை வேண்டுமானாலும் செய்வீர்களா? தவறு செய்தவர்களை மக்கள்முன் நிறுத்துவது உங்கள் கடமை என்றால் நீங்கள் தவறுசெய்யாமல் இருக்க வேண்டுமே! நீங்களும் தவறுசெய்தால் உங்களை யார் தடுப்பது?

உங்கள் வருமானத்தை மட்டும் கவனத்தில் கொள்ளாதீர்கள், நாட்டின் வளர்ச்சியை மட்டும் மனதில் வைத்து தவறான செய்திகளையோ, ஒருதலை பட்சமான செய்திகளையோ பிரசுரிக்காதீர்கள். நன்மைகளை விளைவிக்கும் செய்திகளை, நாட்டை வளமாக்கும் செய்திகளை தலைப்பு பகுதியில் இடம்பெறச் செய்யுங்கள். விளையாட்டு, வர்த்தகம், தொழில்துறை, அறிவியல் போன்றவற்றை தொடர்ந்து வரச்செய்யுங்கள் வையுங்கள்.

விபத்து, வக்கிரம், கவர்ச்சி விளம்பரம், கொலை கொள்ளை ஆகியவற்றை தனிப்பகுதியாக்கி, தனித்திரியாக்கி தலைப்பிட்டு சினிமாவுடன் இருதிபக்கங்களாக மாற்றிவிடுங்கள்.

நாட்டை செழுமையாக்குவதும், மன்னாக்குவதும், எதுவாக செய்வதாய் இருந்தாலும் சரி உங்களுக்கு பெரும் பங்கு உண்டு என்பதையும், உங்களால் சமூகத்தில் ஏற்ப்படும் நல்லதோ, கெட்டதோ எதுவாகினும் அது உங்கள் குடும்பத்தையும், குழந்தைகளையும் பாதிக்கும் என்பதையும், நீங்களும் உங்கள் குடும்பமும் இந்த சமூகத்தில் ஒரு அங்கம் என்பதையும் தயவுசெய்து மறக்க வேண்டாம்.

மக்களுக்கு ஒரு வேண்டுகோள் - இதுபோன்ற மட்டமான, கீழ்த்தரமான, வக்கிரமான செய்திகளுக்கு ஆர்வம் காட்ட வேண்டாம். எரிகிற கொள்ளியை எடுத்துவிட்டால் கொதிப்பது அடங்கிவிடும்.

அரசுக்கு ஒரு வேண்டுகோள் - பத்திரிக்கைகளுக்கு வழிமுறைப் படுத்தப்பட்ட இன்னும் கடுமையான சட்டங்கள் இயற்றப் பட வேண்டும். எதிர்மறையான பதிப்புகளை ஏற்ப்படுத்தும் செய்திகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படக்கூடாது. வன்மையும், கொடூரங்களும், தனிப் பகுதிகளாக்கப் பட்டு இறுதியாக இணைக்க வேண்டும்.


இயற்றலும் ஈட்டலுங் காத்தலும் காத்த
வகுத்தலும் வல்ல தரசுTuesday, August 23, 2011

தனித்திரு.... விழித்திரு....

உலக முன்னோடிகளின் முதன்மையாய் இருந்து உலகுக்கு பண்பாடு, அறம், மறம் கற்றுத்தந்து மனிதனை மனிதனாய் காட்டிய நம் திராவிட இனம் இன்று கிடப்பது எங்கே என்றுகூட தெரியவில்லை?

பார்ப்பனியரின் சதியில் சிக்குண்டு, சாதியில் விழுந்து சகட்டுமேனிக்கு புரண்டு இன்றும் எழமுடியாமல் இருக்கிறோம். போதும் இந்த வேறுபாடுகள், வேண்டாம் இந்த ஒற்றுமையின்மை. களைவோம் வேறுபாடுகளை, அழிக்க நினைப்போருக்கு காண்பிப்போம் நம் இனத்தின் வலிமையை.

தன்மானத்தை இழந்துவிடாதே, தன்மானத்தை இழந்தால் தமிழனே இல்லை என்று அர்த்தம்.

"தமிழன் என்றொரு இனமுண்டு
தனியே அவனுக்கொரு குணமுண்டு"

என்னும் கூற்று பொய்யாய் போய்விடாமல் காப்பது நமதுகடமை.

காசுக்காக தன்மானத்தை இழக்க வேண்டாம், தன்மானம் காத்து தலைநிமிர்ந்து நின்றால் பணம் உன்னைத் தேடிவரும், உழைத்தல் மட்டும் போதும் உயிர்வாழலாம், தன்மானம் இழந்து, உரிமையிழந்து, அடையாளம் இழந்து உயிர்வாழ்ந்தால் பலன் என்ன?

இலவசங்கள தவிர்ப்போம், இங்கு எதுவுமே இலவசம் இல்லை. கொடுக்கும் பொருள்கள் அனைத்திற்கும் கடன்சுமை நம் தலைமீதே மறக்க வேண்டாம்.

கல்வி, அரிசி, மருத்துவ வசதி, நிலம் இவற்றைதவிர வேறு எதுவொன்றும் இலவசமாக கிடைத்தாலும் உதறித்தள்ளுங்கள். உழைக்காமல் வரும் பொருள்கள் அனைத்திலும் கண்ணுக்குத்தெரியாத அடிமைத்தனம் ஒளிந்திருக்கும்.

தமிழன் என்றுமே உலகில் தனித்திருப்பவன் என்பதை உலகுக்கு உணர்த்துவோம். நம்மை நாமே குறைத்து மதிப்பிட வேண்டாம். நம்பிக்கை வேண்டுமா?

இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் கட்டப்பட்ட கல்லணையை கவனியுங்கள். எப்படி சாத்தியமாயிற்று? ஆயிரத்தைனூறு ஆண்டுகளுக்கு முன்னுள்ள பல்லவ குகைக்கோயில்களை, சிற்ப்பங்களை பாருங்கள் எதனால் முடிந்தது இது? ஆயிரம் ஆண்டுகள் நம் இனத்தின் பெருமையாய், நமது திறமையின் செழுமையாய் இருக்கும் தஞ்சை பெரியகோயிலை, கங்கைகொண்ட சோழபுர கோயில்களைப் பாருங்கள், மதுரை மீனாட்சி அம்மன் கோயிலைப் பாருங்கள், ராமேசுவர கோயில்களைப் பாருங்கள். எப்படி இவைஅனைத்தும் சாத்தியம்? தன்னம்பிக்கையும் தன்மானமும் இல்லாமல் இப்படி ஒரு சரித்திரம் நிகழுமா?

இது அனைத்தும் இலவசங்களா இல்லை உழைப்பின் சன்மானமா? இலவசம் கொடுத்தால் இளிச்சவாயனாகிவிடுவான் தமிழன் என்ற நினைப்பை உடைத்தெறிவோம், அறிவு வளர்க்கும் கல்வியை, திறமை வளர்க்கும் சிறுதொழில் பயிற்ச்சியை இலவசமாக தாருங்கள் என்றுமட்டும் சொல்லுவோம். அனாவசிய ஆடம்பர இல்லவசங்கள் என்றும் அழிவையே தரும் என்பதனை உணர்வோம்.

சமமான கல்வி, திறமைக்கு வேலைவாய்ப்பு, சிறு தொழில், கைத்தொழில் வளர்ப்பு இருந்தால் போதுமே! இட ஒதுக்கீடு என்பதே தேவையில்லை. இடஒதுக்கீடு இல்லையெனில் சாதி என்பதே மறைந்துபோகும்.

சாதிகள் மறந்தும் மறைந்தும்போனால், சாதிக்கட்சிகள் காற்றில் கரைந்துபோகும், தமிழினம் இங்கே ஒன்றுபடும், மீண்டும் பொற்க்காலம் உருவாகும். மூட நம்பிக்கை ஒழிக்கப்பட்டுபோகும், அதை வைத்து நசுக்கப் பார்க்கும் கூட்டம் குலைந்து கலைந்துபோகும்.

தமிழர்கள் மீண்டும் தலையெடுப்போம், நேர்மையையும் நெறியையும் உலகுக்கு எடுத்துரைப்போம், எதிர்கால சந்ததியினரின் வாழ்வை வளமாக்குவோம்.

இந்த சாபங்களும், கேடுகளும் நம்மோடு போகட்டும், தன்மானத்தை தலைநிருத்த பன்பாடு தெரியாத பார்ப்பன கூட்டத்தின் சதிகளை உணர்ந்துகொள்வோம்.

இலவசங்கள் வேண்டாம் என்போம்,

தினமலர், தினமணி, துக்ளக் போன்ற பத்திரிக்கைகளை ஒதுக்கித்தள்ளுவோம்.

தைத்திருநாளே தமிழர் ஆண்டின் முதல்நாள் என்று கொண்டாடுவோம்

பொங்கல்திருநாளே தமிழரின் உண்மை பண்டிகை என்றுணர்வோம்

சூரியனே தமிழரின் கடவுள் எனக் கொள்வோம்

வந்தவரை வாழவைப்போம்

நம் மக்களை ஆள்வது நாமாகவே இருப்போம்

வளம்காண்போம், இனம்காண்போம், தரணியில் புகழ்காண்போம்
இல்லாமை, கல்லாமை, இயலாமை, பொறாமை என்பனவற்றை இல்லாமல் செய்வோம்

தரணியில் தனித்திருப்போம் ................. என்றும் விழித்திருப்போம்

Sunday, August 21, 2011

தமிழனை பழிவாங்க துடிக்கும் காங்கிரஸ்

இலங்கையில் ருத்ர தாண்டவம் ஆடியது போதாதென்று, இரத்த ருசிகொண்ட இந்த காங்கிரஸ் என்னும் பேய் இன்னும் தாகம் அடங்காமல் ராஜிவ்காந்தி கொலை வழக்கில் கைதுசெய்யப் பட்ட பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகிய மூவரையும் தூக்கில் ஏற்றிவிட்டு அவர்கள் ரத்தத்தையும் குடித்த பிறகுதான் அடங்குவது என்று திரிந்துகொண்டிருக்கிறது.

அடுத்தமுறை நிச்சயம் காங்கிரஸ் ஆட்சிக்கு வரப்போவதில்லை என்பது தொண்ணூற்றியொன்பது சதவிகிதம் அவர்களுக்கே தெரிந்துவிட்டதால் இந்த ஆட்ச்சிகலத்திலேயே முடிந்தவரை தமிழர்களை பழிவாங்கி வேண்டும் என்றுதான் இந்த கருணை மனு நிராகரிப்பு என்னும் சதிவேலையை அரங்கேற்றியிருக்கிறது.

இந்தமுறை காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தவுடன் தமிழக மக்களுக்கு பல இலவசங்கள் கொடுத்தபொழுதே நன்கு உணரப் பட்டது. வாயில் இனிப்பை வைத்து கழுத்தை அறுக்கப்போகும் செயலில் இறங்கும் என்று. அறுத்ததுமட்டும் போதாதென்று ரத்தம் குடிக்கவும் தொடங்கியிருக்கிறது அந்த ஈனப் பிறவிகள்.

தூக்கு தண்டனையிலிருந்து தமிழனைக் காப்பாற்ற போராட்டங்கள் நடத்தி, பேரணிகள் செய்துவரும் நம் தமிழனை கைது செய்ய சொல்லியும், அவர் நடத்தும் பேரணிகள் போராட்டங்களை தடை செய்ய சொல்லியும், தமிழ்நாடு இளைங்கர் காங்கிரஸ் என்று சொல்லிக்கொள்ளும் ஒட்டுண்ணிகள், பணத்திற்காக நிறம் மாறும் பச்சோந்திகள், தான் மட்டும் பிழைக்க தன் இனத்தையே காட்டிக்கொடுக்கும் கயவர்கள் காவல்துறையிடம் கோரிக்கை கொடுத்துள்ளனர்.

இதுபோன்ற கோட்டான்கள் நாளை இந்தியாவை மட்டும் எப்படி காப்பாற்றுவார்கள்? இனப்பற்று இல்லாத ஒருவன் எப்படி நாட்டுப் பற்றை மட்டும் எப்படி காத்திட முடியும்?

நாங்கள் இந்தியர்கள் என்று சொல்லிக்கொள்ளும் அந்த திருட்டுகும்பல் பிறகு ஏன் தமிழக மக்களின் வாக்கை கேட்டு அவர்கள் வீட்டு வாசலில் நாக்கை தொங்கபோட்டு நிற்கிறார்கள் என்றுதான் தெரியவில்லை.

காங்கிரசின் உண்மை வாரிசு என்று சொல்லிகொள்ளும் இவர்கள் ராஜீவ்காந்தி இறந்தவுடன் இவர்களும் சாக வேண்டித்தானே ஏன் சாகவில்லை? சரி தமிழர்கள் தான் அதற்க்கு காரணம் என்றால் பிறகு ஏன்? அவர்கள் தமிழ்நாட்டில் இருக்கிறார்கள் என்று எனக்கு புரியவில்லை.

புலிகளின் பாதை தவறானது என்று வியாக்கியானம் பேசும் இவர்கள், மாவோயிஸ்டுகளிடம் என்ன செய்துகொண்டிருக்கிறார்கள்? இனப்படுகொலைக்கு உடந்தையாய் இருந்ததை என்ன சொல்லுவார்கள்? உலக அரசியல் என்றா?
ஈழத்தமிழரின் நிலமையைகாண செல்வதாய் சொல்லி, ராஜபக்சேயுடன் விருந்து உண்டு வந்தவர்களை என்ன சொல்வது?

தமிழனை முட்டாளாய் நினைத்திருந்தவர்களுக்கு சரியான பாடம் கடந்த தேர்தலில் கற்ப்பிக்கப் பட்ட பிறகும் இன்னும் திருந்தாமல் இருக்கும் இதுபோன்ற கோடரிக் காம்புகள் இருக்கும் வரை தமிழ்நாடும் ஒருநாள் ஈழம்போல் மாறினாலும் ஆச்சர்யபட ஒன்றுமில்லை

Thursday, August 18, 2011

காணவில்லை கூத்தாடிகளை

நல்ல கருத்துகளை சுவைகுன்றாமல் களிப்போடு கொண்டு சேர்க்க பயன்படுத்தப்பட்டது நாடகமும், திரைத்துறையும். அதில் அவ்வப்போது களிப்பிற்காக சேர்க்கப்பட்ட ஆபாச, நகைச்சுவை, வன்முறை போன்றவற்றை இன்று முதன்மையாக எடுத்துக்கொண்டு நல்லவிசயங்களை பேருக்காக இணைத்துக்கொள்ளும் வியாபார சாக்கடையாகிக் கிடக்கிறது திரைத்துறை.

தடி எடுத்தவனெல்லாம் தண்டல்காரன் என்பதுபோல் கதாநாயகனாக நடிப்பவநெல்லாம் நல்லவன் என்றாகிவிட்ட இந்த நிலையில், வெளிநாட்டுப் பொருள்களின் வர்த்தகத்திற்கும் விளம்பரத்திற்கும், பண்பாட்டு சீரழிவிற்கும் கலாச்சார கேடு விளைவிப்பதர்க்கும், வரியிட்டால் கொடிபிடித்து கூச்சல் போடுவதற்கும் முன்னிற்கும் கலைக் கூத்தாடிகளே எங்கே போய்விட்டீர்கள்?.

அரசியல் கட்சிகளின் விளம்பரத்திற்கும், தேர்தல் கூட்ட சொர்ப்போழிவுகளுக்கும் மக்களை ஏமாற்ற விளம்பரம் செய்யும் சமூக ஆர்வல கூத்தாடிகளே எங்கே இருக்குறீர்கள்?

தனிமனிதனால் ஒரு போராட்டம் வலுபெற்று நாடே களத்தில் இருக்கும்போது தேவையில்லாமல் கூட்டம் சேர்க்க குத்தாட்டம் போடும் கலைச் சேவகர்களே எங்கே ஓடிவிட்டீர்கள்?

இன்று ஊழல் ஒழிப்பிற்காக போராட்டம் செய்தால், நாளை கறுப்புப்பண ஒழிப்பிற்காக போராடவேண்டி வருமே என்று அமைதியாய் இருக்குறீர்களோ?
கறுப்புப்பண ஒழிப்பு வந்தால் கையும் களவுமாக பிடிபடுவோம் என்று பதுங்கி இருக்குறீர்களோ?

எங்கு சென்று ஒளிந்தாலும் சரி, எங்கு வைத்து மறைத்தாலும் சரி, உப்புத்தின்னவன் தண்ணீர் குடித்தே ஆகவேண்டும், தப்பு செய்தவன் தண்டனை அனுபவித்தே ஆகவேண்டும். மக்களை முட்டாளாய் நினைத்து ஏறிமிதிக்க நினைக்கும் கயவர்கூட்டம் காணமல் போவதென்பது உறுதி.

ஊழலை ஒழித்து, பதுக்கல் பணத்தை வெளிக்கொணர புரட்ச்சி புறப்பட்டுவிட்டது. ஓடி ஒளிந்து பலனில்லை வெளிவந்து போராடுங்கள், உங்கள் பாவங்களை நீங்களே கழுவிக்கொள்ளுங்கள், மக்களோடு மக்களாக நின்று ஒருமித்த குரல்கொடுங்கள்.

ஏழ்மையற்ற சமுதாயம் உருவாக்க பாடுபடுங்கள், அனைவரும் ஒன்றுகூடுவோம், முதலில் வீட்டை சுத்தப்படுத்துவோம் பிறகு அதனை அழகுபடுத்துவோம். அனைவரும் மகிழ்ச்சியாய் இருக்க, எல்லோரும் நல்வாழ்வுபெற, எதிர்கால இந்தியா ஒரு சிறப்பான நாடக உருவாக கைக்கோர்ப்போம்.

எந்த துறையாய் இருந்தாலும், மக்கள்நலன் யோசிப்போம், நன்மைக்கு மட்டுமே துணைநிர்ப்போம், தீமையை தகர்த்தேடுப்போம். இன்றே உருதிகொள்ளுங்கள். தனிமனிதனாய் பலன்தேட எண்ணவேண்டாம்.

மக்களிடம் தேவையான விழிப்புணர்வு வளர்ந்துவிட்டது, அவர்களை ஏமாற்ற நினைக்க வேண்டாம். மக்களோடு மக்களாய் மாறி மக்களே மக்களுக்காக ஒரு நல்ல ஆட்சி நடக்க சமுதாய புரட்சி செய்வோம். இந்தயாவில் ஒருவனுக்கு வீடில்லை, ஒருவேளை உணவில்லை, வாழவழியில்லை என்ற நிலைகளை மற்றியமைத்துவிட்டு இல்லாமை என்பதே இனி இல்லை என்னும் நிலையை உருவாக்கிவிட்டு பிறகு களிப்பில் திளைப்போம்.

செய்வோம் சமுதாயத்தொண்டு! வாழ்க சமுதாயம்! வாழ்க மக்கள்

Wednesday, August 17, 2011

தன்னிலை அறியாத் தமிழன்....

இரண்டாயிரம் ஆண்களுக்கு மேலாக இருந்துவரும் ஒரு பழமையான இனம். பனிஷியர் என்று சொல்லப்படும் பனையேறிகள் இனம் அதுவும் இப்பொழுது இத்தாலி துனிஷியா ஆகிய இனத்தின் முன்னோடிகள் திராவிட இனத்தை சார்ந்தவர்களே என்று கணிக்கப்படும் அளவிற்கு பழமையான இனம்.

பூமியில் நாகரிக வளர்ச்சி என்பது தொடங்குவதற்கு முன்னால் நாகரீகத்தின் உச்சியை எட்டிப்பிடித்து கட்டுப்பாடு, கண்ணியம், பண்பாடு, ஆட்சிமுறை, ராஜ தந்திரம், குடவோலை முறைத்தேர்தல், கட்டிடக்கலை, இசை, நாடகம், மொழிபயிர்ச்சி, தற்காப்பு, போர்க்கலை, வாணிபம், ஆராய்ச்சி, கல்வெட்டு, கடல்கடந்து பயணம், வெளிநாடுகளின் வர்த்தகம், ஏற்றுமதி, இறக்குமதி என்று அனைத்திலும் கொடிகட்டி பரந்த இனம்.

நட்போடு வந்தவரை தெய்வமாகவும், பகையோடு வந்தவரை துச்சமாகவும் மதித்து வாழ்ந்த ஒரு புகழ்பெற்ற இனம். இன்று இருக்கும் அவலம் என்ன? தமிழன் உண்மையில் தான் யாரென்று உணர்ந்திருக்கிறானா? இல்லை உணர மறுக்கிறான?

வந்தாரை வழவைத்தோம், ஆளவிட்டதில்லை, அனால் இன்று வந்தவர்கள் மட்டும் வாழ்கிறார்கள், கண்டவரெல்லாம் ஆள்கிறார்கள். ஏன் என்று கேக்கவும் நாதியில்லை, தட்டிக் கேக்கவும் தகுதியில்லை.

கலை வளர்த்தவன் கலைக்கே அடிமையா? ஒரு வகையில் ஆம் என்றால் வெக்கக்கேடு. அண்ணாவிற்கு பிறகு தமிழ்நாட்டை தமிழன் ஆளவில்லை. சரி அவன் திராவிடன் என்று கணக்கில் கொண்டாலும், வேறு எந்த மாநிலத்திலும் தமிழனை ஆள விட்டதாக தெரியவில்லை. இங்கு மட்டும் ஏன் இப்படி?

எந்த மாநிலத்திலும் இப்படி ஒரு அசிங்கம் நிகழ்வதில்லை. உண்மையில் தமிழனுக்கு ஆளத்தகுதி இல்லையா? இல்லை தமிழனுக்கு தமிழன் ஆள்வது பொருக்க வில்லையா? எதுதான் தடுக்கிறது உன்னை.

குழந்தையின் வலி பெற்றவனுக்குத்தான் தெரியும், பக்கத்துவீட்டுக்காரனுக்கும் திண்ணையில் படுத்து தூங்கிப்போக வந்தவனுக்கும் எப்படி தெரியும்?. ஏதோ அபூர்வமாக ஒரு மனிதன் இருந்துவிட்டான் என்பதற்காக அனைவரும் அப்படி இருந்துவிடுவார்கள் என்று நினைப்பது முட்டாள் தனம் இல்லையா?

எவனையாவது உட்கார வைத்து விடுவது? பிறகு அவன் அது செய்ய வில்லை இது செய்யவில்லை என்றால் யார்மீது தவறு? அக்கறையில்லாதவனை தேர்ந்தெடுத்தவர் மீதா? இல்லை அக்கறை இல்லாதவன் மீதா?

செய்வதெல்லாம் செய்துவிட்டு பின்பு குத்துகிறதே, குடைகிறதே என்றால் யார் என்ன செய்ய முடியும்?. ஒற்றுமை என்பதை நாம் காற்றில் பறக்க விட்டுவிட்டோமா? அதனால்தான் இன்று பிறரிடம் கையேந்தி நிற்கிறோமா? அசிங்கங்களை சகித்துக்கொள்ள பழகிவிட்டோமா? தன்மானத்தை இழந்து பணத்திற்கும் பகட்டு வாழ்க்கைக்கும் அடிபணிந்துவிட்டோமா?

தமிழனை கொல்லக்கூடதென்று போராடுகிறது ஒருகூட்டம்? மதிக்கவில்லை எவரும். தமிழனை தூக்கிலிடாதே என்று புறப்படுகிறது ஒரு கூட்டம், அதே இனத்தில் அவர்களை தடுத்து கைதுசெய்ய சொல்கிறது தன்மானமிழந்த ஒரு திருட்டு கூட்டம்.

எதற்காக நீ தடுக்கிறாய், உண்மையில் தேசப்பற்றா? இல்லை பணப்பற்று, காசுக்காக அந்த கட்சியை அண்டிப்பிழைக்கும் நீ இந்த நன்றி விசுவாசத்திலாவது தமிழன் என்று நிருபிக்கிறாயே அதுவரை மகிழ்ச்சி எமக்கு.

ஒன்று மட்டும் நினைவில்கொள் தமிழா, வந்தவனெல்லாம் ஆட்சி செய்தால் உன் இனம் அழிக்கப்படும் அதில் நீ மட்டும் எப்படி தப்புவாய்? பிறர் வாழக்கூடாது நான்மட்டும் வாழவேண்டும் என்று எண்ணாதே உன்னைவிட பலம்வாய்ந்தவன் அப்படி நினைத்தால் நீ காணாமல் போய்விடுவாய். நாம் வாழ்வோம் என்று நினை, அழிக்க வருவோரெல்லாம் காணமல் போவார்.

ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு. வாழ்வோ சாவோ நமக்கு நாமே என்று தீர்மானம் செய்.

உன்னினத்தை தலைநிமிரச்செய் வாழ்க்கை வளமாகும். நாடு செழிப்பாகும் நம்பிக்கை உழைப்பைத்தரும், உழைப்பு செல்வம் தரும். யாரையும் அண்டியிருக்க வேண்டிய அவசியமில்லை. தன்மானத்தோடு தரணியில் நடக்கலாம்.

Tuesday, August 16, 2011

மறைக்கப்படும் செம்மொழி.....

அப்படி.......... இப்படி......... என்று ஒருவழியாக சமச்சீர் கல்வி நடைமுறைப்படத் தொடங்கிவிட்டது. எம்மின மக்களுக்கு ஒரு நல்ல கல்விமுறையை வழங்குவதில்த்தான் எத்துனைப் போராட்டம்?. எத்தனை வழக்குகள்?, எத்தனை அறிக்கைகள்?. நினைத்துப் பார்க்கவே கேவலமாக இருந்தாலும். ஒருவழியாய் செயல்படுத்த தொடங்கியிருப்பது ஆறுதல்.

இருப்பினும் புயல்விட்டது மழைவிட்டபாடில்லை என்பதுபோல், கடந்த ஆட்சியில் இருந்தவரால் இயற்றப் பட்ட பாடல்கள் கிழிக்கப் பட்டாலும். தேவையில்லாமல் நிறைய பக்கங்களும் குறிப்புகளும் நீக்கப் பட்டுள்ளன.

அதற்கு அவர்கள் கூறும் காரணம் கடந்த ஆட்சியின் கொள்கைகளும், அவர்களின் கொடியின் வர்ணமும் இடம்பெற்று இருப்பதே என்று சொல்லப் படுகிறது. இந்த மானங்கெட்ட தனத்தை என்னவென்று சொல்வது?

இதுகூட பரவாயில்ல, ஒரு தனிமனிதனைப் பற்றியோ அல்லது மறைமுகமாக அவரது புகழையோ ஏற்றிறுக்கிறது என்று சமாதனப் படுத்திக் கொண்டாலும். கடந்த ஆட்சியில் நடத்தப் பட்டது என்கிற ஒரே காரணத்தினால் செம்மொழி மாநாட்டு அடையாளச்சின்னம் மறைக்கப் படுவது எவ்விதத்தில் ஞாயம்? அந்த அளவுக்கு மக்களை முட்டாள்கள் என்று நினைப்பவர்களா ஆட்சியில் இருக்கிறார்கள்? இவர்களை நாம் மீண்டும் மீண்டும் மாற்றியமைத்து உட்கார வைத்து அவதிப்பட தமிழனின் தலையெழுத்தென்ன அவ்வளவு மட்டமாகிவிட்டதா?

எத்தனை முறை பட்டாலும் திருந்துவதில்லை நாம் ஏன்?

எவ்வளவுதான் காழ்ப்புணர்ச்சி இருந்தாலும், இவர்கள் அரசியலில் விளையாட இதையும் விட்டு வைக்ககவில்லையே என்று நினைக்குபோது எரிமலையாகிறது நெஞ்சம்.

யார்தான் நடத்தியிருந்தால் என்ன? செம்மொழி மாநாடு என்பது நம் தமிழ்மொழிக்கு கிடைத்த பெருமையல்லவா? அதை இப்படி ஒட்டி மறைத்து அசிங்கப் படுத்துவதை எப்படி சகித்துக்கொள்வது. எதிர்கால சந்ததியினருக்கு தமிழ்மொழி ஒரு செம்மொழி என்பதை தெரியப்படுத்தக் கூடாது என்ற ஒரு மறைமுக கூட்டத்தின் நோக்கம் இவ்வாறெல்லாம் எதிரொலிக்கச் செய்கிறது.

தமிழனின் பெருமையை மறைக்கவும், தமிழன் மீண்டும் தலையெடுத்து விடக் கூடாதென்றும் அந்தக் கூட்டம் செய்யும், மறைமுக செயலுக்கு அளவில்லாமல் போகிறது.

எப்படிப் பட்டதாகினும், ஆயிரம் கைகள் மறைத்தாலும் ஆதவன் மறைவதில்லை என்பதுபோல். தமிழையோ தமிழனையோ அவனின் பெருமையையோ ஒன்டிப்பிழைக்க் வந்தக் கூட்டம் ஒருபோதும் அழித்துவிட முடியாதென்பது நிதர்சனமான உண்மையே

தனி மனிதனின் போராட்டம்.

இது இரண்டாம் சுதந்திரப் போராட்டம் என்பதில் சிறுதும் ஐய்யமில்லை. ஒரு தேசத்துக்காக மீண்டும் ஒரு காந்தியவாதியின் தியாகப் போராட்டம்.

அன்று ஆகிலேயனுக்கு எதிராக, இன்று சுரண்டும் அரசியல் வாதிகளுக்கு எதிராக.

அண்ணா ஹோசரே - ஊழலுக்கு எதிராக குரல் கொடுக்கும் காந்தியவாதி கைது. ஜனநாயகம் கொல்லப்படுகிறது. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு அரசாங்கம் மக்கள் நலனுக்காக போராடும் ஒரு மாமனிதனை அடக்கியாள முற்படுவது வன்மையாக கண்டிக்கத் தக்கது.

ஒரு சுதந்திரப் போராட்ட தியாகி பாடுபடுகிராறே தவிர, மக்களுக்கு தொண்டு செய்யவே நாங்கள் என்று கூறிக்கொண்டு கொள்ளையடிக்கும் அரசியல்வா(வியா)திகள் அறிக்கை விடுகிறார்களே தவிர. போராடவோ அல்லது அண்ணா ஹோசரேவை ஆதரித்து களம் காணவோ துணியவில்லை. ஏன்? அனைவரும் திருடர்கள் என்பதாலோ என்னவோ?

இன்றுமுதல் தொடங்கட்டும் மக்களை சுரண்டும் ஊழல் பெரிச்சாளிகளை ஒழிக்கும் இன்னொரு போராட்டம். மக்கள் நினைத்தால் நடவாதது ஒன்றுமில்லை. மக்களே வாருங்கள் அரசியல் சாக்கடையை சுத்தப் படுத்துவோம்.

திருடித் தின்று கொழுத்துக் கிடக்கும் ஊழல் பண்ணிகளை விரட்டியடிக்க இன்னொரு போராட்ட களம் காண்போம். அண்ணா ஹோசரேவை ஆதரிப்போம். இந்தப் போராட்டம் ஜனநாயக புரட்ச்சியாக வெடிக்கட்டும். அநியாயம் செய்யும் அரசியல் வாதிகளுக்கு பாடம் புகட்டப்படட்டும்.

ஒன்று கூடுங்கள், கண்டன் ஆர்ப்பாட்டங்கள் நடக்கட்டும். ஊர்வலங்கள் கிளம்பட்டும். வேலை நிறுத்தம் தொடங்கட்டும். ஊழலுக்கு எதிரான வலிமையான சட்ட மசோதா இயற்ற நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி போராடுவோம். இது காங்கிரசுக்கு மட்டுமல்ல. எந்த ஒரு அரசியல் கட்சி ஆட்ச்சிக்கு வந்தாலும் இது பாடமாக இருக்கட்டும். மக்களை முட்டாளாக நினைக்கும் பன்றிகளை விரட்டுவோம்.

இதில் உனக்கு எனக்கு, உன் கட்சி என் கட்சி, வட இந்தியா, தென்னிந்தியா, சாதி மத, இன வேறுபாடுகளைக் களைந்து ஒன்றுபட்டு போராடுவோம்.

எதிர்கால இந்தியாவை வளமானதாக செய்வோம். நாம் படும் துன்பங்கள் இனி வரும் தலை முறைகளுக்கு வேண்டாம். அவர்களாவது புண்ணிய பூமி இந்தியாவில் வாழட்டும். பாவப்பட்ட இந்த இந்தியா நம்மோடு போகட்டும்.

ஊழல் கட்சிகள் ஒழிக, வந்தே மாதரம், வந்தே மாதரம்

Monday, August 15, 2011

முதலில் ஒரு இந்தியன், பிறகு தமிழனா? (மீள் பதிவு)

நண்பா...

இது யாருடைய மனதையும் புண்படுத்துவதற்காக எழுதப்படவில்லை. உண்மை நிலமை என்னவோ அதை மட்டும் தான் கருத்தில் கொள்ளப்பட்டது. நீங்கள் கேள்வி பட்டதுண்டா ஒரு வாசகம்.

"வடக்கு வாழ்கிறது, தெற்கு தேய்கிறது" என்று

அது எவ்வளவு உண்மை என்று நமக்கே தெரியும். இருந்தும் நம்மை நாமே ஏமாற்றிக் கொள்கிறோம் ஏன்?

நமது வீடும், வயிறும் மட்டும் நிறைந்தால் போதுமா, அனைவரதும் நிறைய வேண்டாமா?

உங்கள் சித்தாந்தம் முதலில் ஒரு இந்தியன், பிறகு தமிழனா?

இந்தியன் என்பது ஒரு தேசப்பற்று தமிழன் என்பது இனப்பற்று,

1946 க்கு பிறகு பிறந்த இந்த இந்தியா பற்றிய தேசப்பற்று, 2000 வருடமாக இருக்கும் தமிழினப்பற்றை பின்னுக்கு தள்ளுகிறது இல்லையா? காரணம் பொருளாதாரம், வாழ்வமைப்பு, பாதுகாப்பு.

இப்பொழுது கேட்கிறேன் கிரிக்கெட், பாகிஸ்தான் இவை இரண்டைத் தவிர உங்கள் தேசப்பற்றை வேறெங்கு உங்களால் நிருபிக்க முடியும்.

காவிரி பிரச்சனையில்,
முல்லைப்பெரியாரில்,
கிருஷ்ணா நதிநீர்ப் பிரச்சனையில்,
தமிழக மீனவர் பிரச்சனையில்,
ஒக்கேனேக்கல் குடிநீத் திட்டத்தில்,
சேது சமுத்திரத் திட்டத்தில்,
எதில் தான் முடியும்,
தமிழக விவசாயத்தின் தலையெழுத்தை மற்ற முடியுமா?

சரி இவ்வளவு வேண்டாம், வடநாட்டில் சென்று ஒரு தொழில் தொடங்கி நடத்துங்கள் பார்க்கலாம்,

சரி கேரளாவில், கர்நாடகாவில், ஆந்த்ராவில் முடியாத? சரி எங்குதான் முடியும் உங்கள் உங்கள் தேசப்பற்றை வைத்துக்கொண்டு.

என்றாவது நீங்கள் நினைத்ததுண்டா ஏன் இந்தியா மொழிவாரியாக பிரிக்கப்பட்டது என்று? ஏன் பெரியார் சொன்னதுபோல் திராவிட நாடு என்று தென் இந்தியாவையும், வடநாடு என்று வடஇந்தியாவையும் இரண்டு மாநிலமாக பிரிக்கவில்லை என்று?

என்றாவது நினைத்ததுண்டா கர்நாடகாவில் அணை கட்ட அனுமதி அளித்தார்கள் என்று?

இல்லை ஏன் லச்சத்தீவை இலங்கைக்கு தாரைவார்த்துக் கொடுத்தார்கள் என்று யோசித்தீர்களா? சரி இது நடந்து முடிந்த கதை

அராபிய நாடுகளில் சென்று வேலை செய்து பாருங்கள் இல்லை இருப்பவர்களைக் கேளுங்கள் தெரியும் இந்தியாவின் ஒற்றுமையும் அதில் தமிழனுக்கு கிடைக்கும் மரியாதையும்.

என்னை பொருத்தவரை இந்தியன், தேசப்பற்று என்று சொல்லித்தரப்பட்ட சித்தாந்தங்கள் நமக்கு நாமே பூசிக்கொள்ளும் அரிகாரங்கள் நிச்சயம் ஓர்நாள் கலைந்துவிடும் அல்லது கலைத்ததுதான் ஆக வேண்டும்.

இவை தமிழ்நாட்டு மக்களுக்கு மட்டுமல்ல, என் ஈழ மக்களுக்கு ஆறுதல் சொல்லும் உரிமையும் கூட பறிப்பதனால் வந்த உண்மையின் தெளிவு.
தேசம் போனால் இன்னொரு தேசத்தை உருவாக்கிவிட முடியும் ஆனால் இனம்போனால்???????????????????????????

1947 ஆகஸ்ட் 15 மறக்கப்பட வேண்டிய தினம்...

1947 ஆகஸ்ட் 15 மறக்கப்பட வேண்டிய தினம்.

நாம் அடிமையாய் இருந்தோம்..... இருந்தோம்..... என்று சொல்லியே மனதளவில் இன்னும் அடிமைகளாகவே வாழ்கிறோம்.

அதன் விளைவுகள்தான், வெள்ளைக்காரனைக் கண்டால் இன்னமும் மண்டியிடுவது, மதிப்பளிப்பது. நம்மை நாமே தரக்குறைவாக நினைப்பது, நமது வழக்கங்களை மதிக்காமல் அவர்களது வழக்கங்களை பெரிதாக நினைப்பது.
அவர்களது பொருட்களை பெருமையாக எண்ணுவது போன்ற எண்ணங்களுக்கு காரணமே அந்த அடிமை புத்திதான்.

நான் சுதந்திரத்திற்கு முன்னும் வாழவில்லை, சுதந்திரம் வாங்கியபோதும் நான் இருக்கவில்லை ஆனால் எனக்கு எப்படி இந்த பாதிப்புகள் வந்தன.

அவர்கள் உலகத்தில் மற்ற நாடுகளை பிடித்தது திறமையினால் அறிவியலின் வளர்ச்சியினால் இருக்கலாம். ஆனால் என்னைப் பொறுத்தவரை அவைகள் நம் நாட்டை பிடிக்க முடிந்ததன் காரணம் நம்மிடம் இருந்த நல்ல குணமும், ஒற்றுமையின்மையும், அவர்களிடம் இருந்த திருட்டு புத்தியும் தான் என்று அடித்து சொல்லுவேன்.

இதைத்தான் இன்று நாம் திறமை என்றும், வியாபார தந்திரம் என்றும் பெருமையாக சொல்லிக் கொள்கிறோம் செய்கிறோம்.

என் நாடு, என் இனம், என் மதம், என் சாதி, என் குடும்பம் என்பதெல்லாம் போய் நான் என்பது மட்டும் மிஞ்சி நிற்கும்.

தன்மானமில்லாமல், தனிமனித உரிமை இல்லாமல் என்ன சுதந்திரம் இங்கு வாழ்கிறது. நம் மக்களை நாமே கொல்வதா சுதந்திரம்?. இல்லை நம் மக்களிடம் நாமே கொள்ளையடிப்பதா சுதந்திரம்?.

ஊழலுக்கு எதிராக ஒரு வலிமையான சட்டம் நிறைவேற்ற முடியவில்லை பிறகு என்ன சுதந்திர தினம் வேண்டி கிடக்கு நமக்கு?. அதைக் கொண்டாட என்ன அருகதை இருக்கு நமக்கு?.

உச்சநீதி மன்ற தீர்ப்பை மதிக்கவில்லை ஒரு மாநிலம், ஒரு மாநிலத்தின் மக்களின் கோரிக்கையை மதிக்க வில்லை மத்திய அரசு. ஒரு மாநிலத்தின் தனது மக்களை இன்றும் கொன்று குவிக்கிறது இதே மத்திய அரசு, என்ன சுதந்திரம்? என்ன ஜனநாயகம் இது? இதில் சுதந்திர தினக் கொண்டாட்டம் ஒரு கேடு.

பெரியார் சொன்னதுபோல் இதை ஓர் கறுப்புதினமாக அறிவிக்க வேண்டும். என்று ஊழலில்லாத, ஒற்றுமையான மக்களால் நல்லாட்சி நடத்தப் படுகிறதோ அன்றுதான் உண்மையான சுதந்திர தினம்.

அடிமை படுத்திய ஆங்கிலேயன் கூட காந்தியை பத்திரமாக வைத்திருந்தான். விடுதலை வாங்கி நாம் எத்தனை ஆண்டுகள் நம்மால் அவரை பாதுகாக்க முடிந்தது?.

சமச்சீர் கல்வியை கலைக்க ஒரு மறைமுக கும்பலின் சதி நடக்கிறது தடுக்க முடியவில்லை, தென்னிந்தியாவின் உண்மையான வரலாறு பெரும்பாலும் அழிக்கப்படுகிறது அதை நிறத்த முடியவில்லை, மறைமுக திணிப்பு செயல்படுத்தப் படுகிறது, ஒரு குறிப்பிட்ட இனம் ஒடுக்குக்கப் படுகிறது இவற்றை எல்லாம் ஒழிக்க முடியவில்லை பிறகு எதற்கு இந்த சுதந்திர தினம்?. தன நட்டு மக்களை தரக்குறைவாக பேசும் ஒரு வெளிநாட்டவனை கண்டிக்க இயலாத வக்கத்த அரசுக்கு ஒரு சுதந்திர தினக் கொண்டாட்டம்.

இந்தியாவில் வேண்டாம் தமிழகத்தின் வரலாறு எத்தனை பேருக்கு தெரியும் இந்த சுதந்திர நாட்டில்?. அசோகர் மரத்தை நட்டார், ராஜ ராஜ சோழன் பெரிய கோயிலை கட்டினார், இந்திய சுதந்திரப் போராட்டம் இதைத்தவிர வேறு என்ன தெரியும் நமக்கு?

நியாயமாய் நடப்பவர்க்கு வாழ வழியில்லை, அநியாயத்தை எதிர்ப்போருக்கு உயிருக்கு உத்திரவாதமில்லை.

வாழ்க பாரத தேசம்

Wednesday, August 10, 2011

என்று மாறுவோம் நாம்?

ஒவ்வொரு மனிதனுக்கும் அசை என்பது உண்டு, ஆனால் அது பேராசையாக இருத்தல் கூடாது. அதன் விளைவு பொறமை, பொறமை இருந்தால் ஒழுக்கம் கெடும். தனிமனித ஒழுக்கம் மறைந்தால் சமூகம் சீர்குழையும், நாட்டின் எதிர்காலம் கேள்விக்குரியாகும்.

நான் நல்லா இருக்கணும்னு நினைப்பது தவறில்லை, நான் மட்டும்தான் நல்ல இருக்கணும் என்று நினைப்பதுதான் தவறு. அதுதான் இன்று பெரும்பாலனோர் மனது.

ஒற்றுமை இல்லை, உணர்வு இல்லை, பற்று இல்லை இப்படி அனைத்து இல்லைகளுக்கும் கரணம் இதுவே. இப்படிப் பட்ட எண்ணங்களின் விளைவாக இவை அனைத்தும். பாமர மக்களாக இருந்தாலும் பரவாயில்லை, படித்தவர்கள் தான் அதிகம் இதுபோல் இருக்கிறோம் ஏன்?

இதுபோல் யார் எவ்வளவு சொன்னாலும் நாம் மாறுவதில்லை, இருந்தாலும் ஒரு இந்தியனாக, தமிழனாக எதிர்கால இந்தியாவை முன்னெடுத்து செல்லும் நோக்கத்தோடு இதைப் பதிக்கிறேன்.

உயர்ந்த எண்ணமும், ஆழ்ந்த அறிவும், தேசபக்தியும் கொண்ட அருமைத்தலைவர் நம் முன்னால் தலைமைக் குடிமகனாய் இருந்து அதுப்போல் வாழ்ந்தும் காட்டும் இனிய தலைவர் திரு.அப்துல் கலாமின் கடிதம் என்று ஒரு மின்னஞ்சல். இது உண்மையா இல்லையா என்று ஆராய முற்ப்பட்டாலும் அவரைத் தவிர வேறு யாரும் இப்பொழுது நாட்டில் இப்படி கூறுவது கிடையாது, மேலும் இது நமக்கு நிச்சயம் பயனுள்ளது என்னும் காரணத்தினாலும், ஏற்க்கனவே பலர் இதைப் பதித்திருந்தாலும் என் கடமையாக பலருக்கு கொண்டு சேர்க்கவும், இதன் மூலம் ஒருவராவது இதை உணர்வார் என்ற நப்பாசையினாலும் பதிக்கிறேன். நன்றி

ஏன் நமது ஆற்றலை அறிந்துகொள்ள மறுக்கிறோம்?

நம்நாடு சிறந்த நாடு. பல வெற்றிச் சரித்திரங்கள் நமக்குச் சொந்தம். இருந்தும் அவற்றை அடையாளம் காண மறுப்பது ஏன்?

Remote Sensing Satellite தொழில்நுட்பத்தில் சிறப்பாக இருக்கிறோம்.

பால் உற்பத்தியில் முதலிடம்.

அரிசி மற்றும் கோதுமை உற்பத்தியில் இரண்டாம் இடம்.

ஒருமுறை இஸ்ரேல் செய்தித்தாளை வாசித்துக் கொண்டிருந்தபோது குண்டுவீச்சினால் விளைந்த சேதங்களும், உயிரிழப்புகளும் கண்ணில்பட்டது. ஆனால். முதல்பக்கத்தில், ஐந்து வருடங்களுக்குள் தங்கள் நாட்டை வளப்படுத்திய மனிதரைப் பற்றிய செய்தி இடம்பெற்றிருந்தது. உத்வேகம் தரும் இந்தச் செய்தியால் மற்ற சேதங்கள், உயிர்ப்பலிகள் காணாமல் போயின. நமது நாட்டில் நாம் ஏன் எப்போதும் மரணம், நோய், தீவிரவாதம், குற்றம் இவைகளையே வாசித்துக் கொண்டிருக்கிறோம்?

மற்றொரு கேள்வி: நாம் ஏன் வெளிநாட்டுப் பொருட்களின்மீது அதிக மோகம் கொண்டவர்களாக இருக்கிறோம்? வெளிநாட்டுத் தொலைக்காட்சி, தொழில்நுட்பம், ஆடைகள் இவற்றை அதிகம் விரும்புகிறோம். தன்னம்பிக்கையே சுயமரியாதைக்கான காரணம் என்பதை நாம் உணரவில்லையா?

ஹைதராபாத்தில் இந்தச் சொற்பொழிவை நிகழ்த்திக் கொண்டிருக்கும்போது ஒரு சிறுமி என்னிடம் கையெழுத்து கேட்டாள். நான் அவளிடம் உனது இலட்சியம் என்ன என்றேன். அவள், வளர்ந்த இந்தியாவில் வாழ ஆசைப்படுகிறேன்” என்றாள். அவளுக்காக நீங்களும், நாமும் இந்தியாவை வளப்படுத்த வேண்டும். நமது நாடு வளர்ச்சியில் குறைந்ததல்ல; மிகுந்தது என்று நாம் அறிவிக்க வேண்டும்.

பொதுவாக நீங்கள் சொல்வது :

அரசாங்கம் செயலற்றது.

சட்டங்கள் பழமையானது.

மாநகராட்சி குப்பைகளை ஒழுங்காக அள்ளுவதில்லை.

தொலைபேசிகள் சரிவர இயங்குவதில்லை.

ரயில்வே நகைப்புக்குரியது.

நமது விமானசேவை உலகிலேயே மட்டமானது.

கடிதங்கள் உரிய இடத்தை அடைவதில்லை.

நீங்கள் சொல்கிறீர்கள், சொல்கிறீர்கள் மேலும் சொல்கிறீர்கள். இவற்றை மேம்படுத்த நீங்கள் மேற்கொள்ளும் முயற்சிகள் என்ன?

சிங்கப்பூர்வாசியாக உங்களைக் கற்பனை செய்து கொள்ளுங்கள். அங்கு நீங்கள் உங்கள் சிகரெட்துண்டை சாலையில் எறிவதில்லை. அல்லது தெருக்களில் உணவருந்துவதில்லை. மாலை 5 மணி முதல் 8 மணி வரை Orchard Road செல்வதற்கு 5 டாலர் (தோராயமாக 60 ரூபாய்) தருகிறீர்கள். உணவகங்களில் ஒதுக்கப்பட்ட நேரத்தைவிடக் கூடுதல் நேரம் இருந்தால் பார்க்கிங்கில் கூடுதல் கட்டணம் செலுத்துகிறீர்கள். சிங்கப்பூரில் நீங்கள் எதுவும் சொல்வதில்லை!

உங்களால் முடியுமா? நீங்கள் ரம்ஜான் தினத்தில், துபாயில் தெருக்களில் உணவருந்தத் துணிவதில்லை.

லண்டனில் தொலைபேசித்துறையில் பணிபுரியும் ஊழியருக்கு மாதம் 10 Pound லஞ்சம் தந்து எனது STD / ISD பில்லை வேறொருவருக்கு அனுப்பிவிடு என்று சொல்வதில்லை.

வாஷிங்டனில் 55 KM வேகத்துக்குமேல் சென்று போக்குவரத்துக் காவலரிடம் “நான் யாரென்று தெரியுமா? இன்னாரின் மகன். உனது லஞ்சத்தை வாங்கிக் கொண்டு வழிவிடு” என்று பேசுவதில்லை.

ஆஸ்திரேலியா அல்லது நியூஸிலாந்து கடற்கரைகளில் தேங்காயை அதற்குரிய தொட்டியில் போடாமல் கடற்கரையில் எறிவதில்லை.

ஏன் நீங்கள் டோக்கியோ தெருக்களில் புகையிலைத் துப்புவதில்லை?

பாஸ்டனில் நீங்கள் ஏன் போலிச் சான்றிதழ் வாங்க முயல்வதில்லை?

நாம் அதே ”நீங்களைப்” பற்றித்தான் இன்னும் பேசிக்கொண்டிருக்கிறோம்.

வெளிநாட்டு விதிமுறைகளைப் பின்பற்றும் நீங்கள் சொந்த நாட்டில் செய்வதில்லை.இந்தியாவில் இறங்கியதும் குப்பைகளைத் தெருக்களில் வீசுகிறீர்கள். வெளிநாட்டில் விதிகளை முறையாகப் பின்பற்றி நன்மதிப்புமிக்க குடிமகனாகத் திகழும் நீங்கள் ஏன் நமது இந்தியாவில் அவ்வாறு இருப்பதில்லை?

அரசாங்கத்தைத் தேர்ந்தெடுத்துவிட்டு பொறுப்புகளை மறந்துவிடுகிறோம். அரசே அனைத்தையும் செய்யும் என்று எதிர்பார்க்கிறோம். தெருவில் இருக்கும் குப்பையைத் தொட்டியில் போடாமல் அரசே சுத்தம் செய்யக் காத்திருக்கிறோம். கழிவறையை முறையாகப் பயன்படுத்தாமல் ரயில்வே சிறந்த கழிவறை வசதி தரவேண்டும் என்கிறோம்.

பெண்கள் சார்ந்த சமூகப் பிரச்சனைகளில் வரதட்சணையைப் பற்றி நமது வீடுகளில் உரக்கப் பேசிவிட்டு எதிர்மறையாக நடந்து கொள்கிறோம். இந்த அமைப்பை மாற்றப் போவது யார்?

அமைப்பு என்பது என்ன? நம்மைப் பொறுத்தவரை பிறர், அடுத்த வீடுகள், மற்ற நகரங்கள், மற்ற சமுதாயங்கள் மற்றும் அரசாங்கம் என்பது நமது வசதியான கருத்து. ஆனால் நிச்சயமாக நீங்களோ, நானோ அல்ல. சமூகத்திற்கு நமது பங்களிப்பு என்று வரும்போது நாம் நமது குடும்பத்தோடு பாதுகாப்பான இடத்தில் இருந்து கொண்டு, எங்கோ தூரதேசத்திலிருந்து தூதுவன் வந்து யாவற்றையும் சரிசெய்வான் என்று நம்புகிறோம். அல்லது நாட்டைவிட்டு ஓடுகிறோம்.

அமெரிக்காவுக்கு ஓடி அவர்கள் அமைப்பைப் புகழ்கிறோம். நியூயார்க் பாதுகாப்பில்லாத போது இங்கிலாந்துக்கு ஓடுகிறோம். இங்கிலாந்தில் வேலைவாய்ப்பில்லாத போது மத்திய கிழக்கு நாடுகளுக்குப் பறக்கிறோம். அங்கு போர் துவங்கினால், நம்மைப் பத்திரமாகக் காப்பாற்ற வேண்டும் என்று இந்திய அரசாங்கத்தை நிர்ப்பந்திக்கிறோம்.

ஒவ்வொருவரும் நாட்டைப் பழிக்கிறோம். இங்குள்ள அமைப்பை மேம்படுத்த யோசிப்பதில்லை. நமது மனசாட்சி பணத்திடம் அடகு வைக்கப்பட்டுள்ளது.

அன்புள்ள இந்தியர்களே, இந்தக் கட்டுரை நமது மனசாட்சியைச் சோதிப்பதற்கான வாய்ப்பு.

ஜான் கென்னடியின் வார்த்தைகளை இந்தியாவிற்குப் பொருத்துகிறேன்.

'ASK WHAT WE CAN DO FOR INDIA AND DO WHAT HAS TO BE DONE TO MAKE INDIA WHAT AMERICA AND OTHER WESTERN COUNTRIES ARE TODAY'

இந்தியாவிற்கு என்ன தேவையோ அதை நாம் செய்வோம்!

நன்றி,
Dr.அப்துல் கலாம்.

Tuesday, August 9, 2011

பொய் சிரிப்பு....

தோரணங்களுக்கு கீழே
ஊர்கூடி ஒன்றாய் அமர்ந்திருக்க
மண்டபம் கோலாகலமாய் நிறைந்திருக்க

இசைக்கச்சேரி ஒருபுறம்
ஓங்கி ஒலிக்கும் குழந்தை ஒருபுறம்
சிதறி ஓடிக்கொண்டிருக்கும் சிறுவர்கள்
எங்கும் சலசப்பாய் சிதறிவிழும் பேச்சுக்கள்

மல்லிகைப்பூ
சந்தனத்தோடு
பன்னீரின் வாசம்
காற்றோடு கலந்து வீச

அழைத்தவுடன்
அடித்துக்கொண்டோடும்
கூட்டத்தின் நடுவே
தெரிந்த முகங்கள் சில
தெரியாதவை பல
என்றாலும்
அனைத்திற்கும் பதிலாய்
முகத்தோடு ஒட்டப்பட்ட பொய் சிரிப்பு

நதியின் வழியே....

நீண்ட நெடுந்தொலைவாய் காண்கிறேன்
இந்த நதிக்கரையை

வளைவுகள் அதிகம் என்றாலும்
பஞ்சமில்லை அழகு
நீரில் தெளிவில்லை என்றாலும்
குறைவில்லை வேகம்

பயணித்துக்கொண்டிருக்கிறேன்
கரைமீதென்றாலும்
நினைவுகள் அனைத்தும் நீரின் மேலும்
அதன்மீது எழும் அலைகளின் மேலும்

நதியின் பிறப்பிடம் அறிவேன்
என் பயணத்தின் தொடக்கமும்
அதுவாகத்தான்

முடிவிடம் மட்டும் அறியேன்
என் பயணத்திற்கும்
இந்த நதிக்கரைக்கும்

Friday, August 5, 2011

என்னைப் பொருத்தே....


இதோ இருக்கிறேன் நான் என்று சொல்லப்படுகிறது
அனைத்திற்கும் தொடக்கமும்
முடிவுமாய் நானே

என்னுள் அனைத்தும்
என்னால் அனைத்தும்
என்று இறுதியாய் நம்பப்பட்டாலும்
என்னைக் கணக்கிட்டதாய் தெரியவில்லை

எனக்கென்று ஆதியுமில்லை
அந்தமுமில்லை
எதுவாய் இருக்கிறேன் என்பதும் புலப்படுவதுமில்லை

தொடக்கமென்பது உண்டா?
என்பது உறுதியில்லை
நடப்பவை அனைத்திற்கும்
அடையாளப்படுத்தப் படுகிறேன்
என்பது மட்டுமே உறுதி

நான் கடப்பதாய் சொன்னாலும்
என்னால் அனைத்தும் கடப்பதென்பது
பொருத்தமானது

அனைத்திற்கும் நானே கணக்கீட்டாலன்
அனைத்திற்கும் நானே காரண கார்த்தா

நிலையானதென்பது என்னிடம் இல்லை
நிலையில்லா நிலையில்
முடிவிலியாய்
நான் மட்டும் நிலைத்திருக்க

நிகழ்வு என்பதே நான் என்று இருக்க
ஒவ்வொரு நிகழ்வும் என்னைப் பொருத்தே
ஒவ்வொரு அமைப்பும் எனது நிகழ்வே