Monday, November 21, 2011

கி.மு................ கி.பி...


இது நான் எழுதும் முதல் புத்தக விமர்சானம். இதுவரை பல புத்தகங்களுக்கு விமர்சனம் எழுத முயன்றதுண்டு. ஆனால் அவைகளுக்கு இல்லாத அந்த முனைப்பு இந்த புத்தகத்தை பற்றி எழுதியே ஆகவேண்டும் என்று ஏற்ப்பட்டது ஏன் என்று தெரியவில்லை.


ஒரு நல்ல சித்திரக்காராகவும், விமர்சனகர்த்தாகவும் மட்டுமே எனக்கு தெரிந்திருந்த திரு.மதன் அவர்கள் ஒரு நல்ல எழுத்தாளராக எனக்கு தெரிந்தது "வந்தார்கள் வென்றார்கள்" என்னும் புத்தகத்திலிருந்துதான். அப்படி ஒரு சரித்திர புத்தகம் அது. உண்மையில் என்னை அந்த புத்தகம் கட்டிப் போட்டது என்று கூட சொல்லலாம். ஆனால் அப்படி ஒரு புத்தகத்திற்கு விமர்சனம் எழுதத் தோன்றாமல் போனதும் இந்த கி.மு கி.பி என்னும் புத்தகத்திற்கு எழுதத் தோன்றியதும் எனக்கு வியப்பாய்தான் இருக்கிறது.

இவரது புத்தகம் வார ஏடுகளில் தொடராய் வந்தபோது படிக்கமுடியாமல் போனது வருத்தம் தந்தாலும், இப்பொழுது முழு புத்தகமாய் கிடைத்திருப்பது மகிழ்ச்சியே!

கிமு கிபி:

இயற்கையின் அற்ப்புத படைப்பு இந்த மனிதன். ஆனால் இந்த மனிதனால் இன்றுவரை புரிந்துகொள்ள முடியாத விசயம் இந்த இயற்கைத்தான். அதுதான் இவனை உருவாக்கியது, அதுதான் இவனை கட்டுப்படுத்தியும் வைத்திருக்கிறது. அந்த இயற்கையை மட்டும் அவனால் வெல்லமுடியாது என்பது இன்றுவரை இருந்துவரும் நிதர்சன உண்மை.

இப்படி பட்ட ஒரு முடிச்சின் ஆரம்பப் புள்ளியில் (மனிதனின் அறிவுக்கு எட்டியவரை மட்டுமே) தொடங்குகிறது இந்த புத்தகத்தின் முதல் பாகம். முன்னுரையிலிருந்து இறுதி பக்கம் வரை ஒரு அனாசிய ஆர்வத்தை உண்டாக்குகிறது இந்த புத்தகம்.

ஆதிமனிதனின் முதல் தோன்றல் பெண் என்பதும் அவளது காலடித்தடம் கிடைக்கப்பெற்றது என்று அறியும்போது பற்றிக் கொள்கிறது ஆர்வப் பொறி பகீர் என்று.

முதல் ஆதி மனிதர்களில் பலவகையான மனிதர்கள் இருந்தார்கள் என்றும் அவை எல்லாம் அழிந்து மீதம் இருந்த இரண்டே இனம் நியண்டர்தால் மற்றும் க்ரோமேக்னன் மட்டும்தான். இதில் க்ரோமேக்னன் என்னும் இன்றைய மனிதர்களாகிய நம்மால் அழிக்கப்பட்டது நியண்டர்தால் இனம் என்று வரும்பொழுது எரிகிற ஆர்வத்தீயில் எண்ணையை ஊற்றுவது போல் ஆகிறது.

இப்படி பல வரலாற்று நிகழ்வுகள் அடுத்தடுத்து அடுக்கிவைத்து ஆச்சர்யத்தின் உச்சிகே நம்மை கொண்டுபோகிறார் மதன்.

இன்றைய ஆப்பிரிக்காவின் (அன்று ஆப்பிர்க்கா என்று ஒரு கண்டம் இல்லாமல் இருந்தபோது) மத்தியில் உருவாகிய இனம் உலகம் முழுதும் பறந்து விரிந்தபின்பு கண்டங்கள் பிரிந்ததும் நிரந்தரமாய் தங்கிய மனிதனின் நாகரீக வளர்ச்சி
அபரிமிதமாய் கற்பனைக்கு எட்டாத வண்ணம் இருக்கிறது என்று நிருபிக்கிறது இந்த புத்தகம்.

உலகின் அனைத்து பகுதிகளிலும் உருவாகிய நாகரீகம், அவற்றின் வளமை, அழிவு என்றும் முக்கியமாக இந்திய நாகரீகத்தை பற்றி கூறும் பொழுதும் ஒவ்வொரு வரியும், ஒவ்வொரு வார்த்தையும் மெய்சிலிர்க்கச் செய்கிறது.

பாரசீகம், ஏதென்ஸ், ரோமானியம், எகிப்த், பாபிலோன், இந்தியா என்று அனைத்து நாகரீக வரலாற்று பதிவுகளையும் முக்கிய கட்டங்களையும் சுவை குன்றாமல் காட்டிச் செல்கிறார். அதிலும் குறிப்பாக முக்கிய நிகழ்வுகளுக்கான சாட்சியங்களை, அடையாளங்களை குறிப்பிடுவதும், புகைப்படங்கள் இருப்பதும் ஆச்சர்யத்தையும் ஆர்வத்தையும் அதிகரிக்கவே செய்கிறது.

குறிப்பாக இந்தியாவை பற்றி அதுவும், ஆரிய கலாச்சரமதான் இந்தியாவின் முன்னோடி என்னும் கூற்றை உடைக்கும் அந்த வரலாறும், ஆதாரங்களும் அதை அவர் சொல்லும் விதமும் உண்மையில் அடக்கமுடியாத ஒரு உணர்வை வெளிப்படவே செய்கிறது.

அதில் உச்சகட்டமாக சிந்து நாகரீகத்தின் மொழி பண்டைய தமிழ் என்றும் அதை நிச்சயமாக கூறமுடியாவிட்டாலும் இதுவரையில் ஆராய்ச்சி சாத்திய கூறுகள் அனைத்தும் அவ்வாறே உள்ளன என்று அறியும்பொழுது பெருமைபடாமல் இருக்க முடியவில்லை.

அனைத்து நாகரீக வளர்ச்சி என்று பொதுவாக இல்லாமல் கலை, மொழி, இலக்கியம், சட்டம் அரசியல், போர் என்று அனைத்தும் தனித்தனியாக முக்கிய நிகழ்வுகளாக பிரித்து கொடுத்திருப்பது அருமை.

சாக்ரடீஸ், பிளாட்டோ, அரிஸ்ட்டாட்டில், அலக்ஸ்சான்டர், சாணக்கியர், சந்திரகுப்தர், அசோகர், "தெற்கே பண்டியநாடும், சோழநாடும் சுதந்திரநாடுகள்" என்ற அசோகரின் குறிப்பு, தமிழர்களுக்கும், யவனர்கள் என்று தமிழர்களால் அழைக்கப் பட்ட கிரேக்கர்களுக்கும் இருந்த தொடர்புடன், புதிய மில்லினிய தொடக்க காலகட்டத்தோடு புத்தகத்தை முடிக்கிறார்.

மொத்தத்தில் படித்து முடித்தவுடன் தலை முழுதும் பல செய்திகள் ஏறிவிட்டதுபோல் ஓர் உணர்வு. சரித்திர புத்தகத்தை படிக்கும்போது இப்படி பட்ட உணர்வு வரும் என்றால் அது ஆசிரியரின் சுவை குன்றாமல் கொண்டுசெல்லும் திறமையினால் மட்டுமே.

இப்படி ஒரு புத்தகம் தந்த திரு.மதன் அவர்களுக்கு நன்றி.

0 comments:

Post a Comment

உங்கள் கருத்தை நான் அறிய