Friday, October 7, 2011

தமிழ் வரலாற்றுப் படங்களுக்கு வரவேற்ப்பு கொடுப்போம்

இன்றைய தமிழனின் வாழ்க்கையில் திரைப்படம் பெரும் பகுதியை ஆக்கிரமித்துக் கொண்டது என்று சொன்னால் மிகையாகாது. அடிப்படையில் தமிழன் கலை ரசனையில் தமிழ் திரைப்படங்கள் அசுர வளர்ச்சி பெற்று விளங்கினாலும் அதனை நாம் சரியாக பயன்படுத்திக் கொள்கிறோமா? என்பது ஒரு பெரியக் கேள்விக் குறியாக நிற்கிறது.

அடிப்படைக் கல்வியில் இல்லாத பல விடயங்கள் பாமர மக்களையும் சென்று அடைவதற்கு ஊடகங்களே முதன்மை பங்கு வகிக்கின்றன. அத்தகைய ஊடங்களில் திரைப்படம் முதன்மையாக விளங்குகிறது. வெறும் பொழுது போக்கு அம்சமாகவும் வக்கிரங்களுக்கு தீனிபோடும் மசாலாகவும் மட்டும் இல்லாமல், நல்ல கருத்துக்களையும் வரலாற்று சிறப்புகளையும் எளிதில் மக்களிடம் எடுத்துசெல்லும் ஒரு சிறந்த ஆயுதமாக திரைப்படங்களை பயன்படுத்தலாம்.

மக்களிடம் கருத்துக்களை மிக விரைவில் கொண்டுசெல்ல மிகச் சிறந்த ஒரு ஊடகமாக திரைப்படம் இருக்கும் பொழுது, அதை ஏன் தமிழின வளர்ச்சிக்காக பயன்படுத்தக்கூடாது? என்னும் சிந்தனை எழுந்துகொண்டே இருக்கிறது.

மறைக்கப்பட்ட மற்றும் அழிக்கப்பட்ட தமிழனின் பெருமை இன்று தமிழர் பலர் அறியமாட்டார். எவன் ஒருவன் தன்னை குறைத்து மதிப்பிடுகிறானோ அவனால் என்றுமே சிறந்து விளங்க இயலாது என்பது உலகம் இதுவரை உணர்த்திய உண்மை. அதற்காக மிகைப்படுத்தி சொல்லப்பட வேண்டிய அவசியமில்லை, ஆனால் சொல்லப்படவேண்டிய உண்மைகளுக்கான சான்றுகள் பல நம்மிடம் இன்றும் உள்ளன.

ஒரு குறிப்பிட்ட கூட்டத்தால் அழிக்கப்பட்ட, அழிந்துகொண்டிருக்கிற தமிழனின் பெருமையையும், சிறப்பையும் வெளிக்கொணர்ந்து தமிழன் தன்னை யார் என்று உணர்துகொள்ள, இழந்த பெருமையையும், சிறப்பையும் மீட்டெடுக்க சரியான ஊடகம் இந்த திரைத்துறை என்பது சிறிதும் ஐயமில்லை.

வெறும் ஐநூறு, அறுநூறு ஆண்டுகள் வரலாற்றை கொண்ட நாடுகளே சிறந்த வரலாற்றுப் படங்களை கொடுக்கும் பொழுது, ஐயாயிரம் ஆண்டுகள் பழமையான தமிழ் வரலாற்றால் முடியாத என்ன?

நீண்ட நாட்களுக்கு பிறகு தமிழில் வெளிவந்த தமிழ் வரலாற்றுப் படமாகிய "ஆயிரத்தில் ஒருவன்" எதிர்பார்த்த அளவிற்கு வெற்றி பெறவில்லை என்றாலும் அந்த முயற்ச்சியை நிச்சயம் பாராட்டியே தீர வேண்டும் என்பது ஒவ்வொரு தமிழனின் தலையாயக் கடமை என்றே நினைக்கிறேன்.


தொழில்நுட்ப குறைகள் இருந்தாலும் முதல் படி சிறப்பாக அமைவது என்பது அனைவருக்கும் அனைத்து விடயத்திலும் இயலாத விடயம். என்னைப்பொறுத்தவரை "ஆயிரத்தில் ஒருவன்" என்னை திருப்திபட வைத்தது என்றே சொல்வேன்.

ஆயிரம் விடயங்கள் குறை சொன்னாலும் அது ஒரு தமிழனால் எடுக்கப்பட்ட தமிழனைப் பற்றிய வரலாற்றை தொட்டு செல்லும் கதை என்பதில் நான் பெருமை அடைகிறேன். என்னதான் சிறந்த கதையம்சங்களும், நடிப்புத் திறமையும் இருந்தாலும் நம்மிடம் தொழில்நுட்ப வசதி மேற்கத்திய நாடுகளை விட குறைவுதான். பிறகு நாம் அவர்களின் படங்களுக்கு இணையாக எடுத்த எடுப்பிலேயே எதிர் பார்ப்பது எந்த வகையில் ஞாயம்?.


இதுபோன்ற முதன்மை முயற்ச்சிகளை ஊக்குவிக்கும் போதே சிறப்பான வளர்ச்சியை நாம் அடைய முடியும் என்பதை அனைவரும் தெரிந்திருக்கும் பொழுது ஊக்குவிக்காமல் இருப்பது என்பது நம் வளர்ச்சிக்கு நாமே முட்டுக்கட்டை போடுவதுபோலாகுமே?.

இருமுறை எடுக்கமுயன்று கைவிடப் பட்ட "பொன்னியின் செல்வன்" கதை இன்றைய அளவிலும் கேள்வியாகவே உள்ளது. காரணம் அத்துனை செலவு செய்து படத்தினை மக்களிடம் வெற்றி பெற வைக்க முடியுமா? என்ற சந்தேகமே முக்கிய காரணம். இங்கு திரைத்துறை வர்த்தகரீதியாகவும் பார்க்கப்பட வேண்டியது என்பது ஒரு முக்கிய கண்ணோட்டமாகும்.

இப்பொழுதும் அதிக எதிர்பார்ப்போடு வரவிருக்கும் "7ம் அறிவு" "கரிகாலன்" போன்ற திரைப்படங்களின் வெற்றியைப் பொறுத்தே எதிர்கால தமிழ் வரலற்று படங்களின் வளர்ச்சி அமையும் என்பது துளியும் ஐய்யமில்லை. அத்தகைய படங்களை அதிகப் படியாக புகழ வேண்டாம் ஆனால் நிச்சயம் பாராட்டியே தீர வேண்டும் என்பது என்னுடைய வேண்டுகோள்.




எந்த ஒரு விடயத்திலும் நாம் நம்மவரை விட்டுக்கொடுக்க வேண்டாம். அதற்காக இல்லாத ஒன்றினை தேவையில்லாமல் உயர்த்தி புகழவும் வேண்டாம் என்பதே எனது தனிப்பட்டக் கருத்து.

பதிவர்களாகிய நாமும் சரி, மக்களும் சரி நமது பெருமை பறைசாற்றும் இதுபோன்ற வரலாற்றுப் படங்கள் வந்தால் நிச்சயம் ஊக்குவிக்க வேண்டியது நமது தலையைக் கடமை என்று எண்ணி செயல்படுவோம்.

0 comments:

Post a Comment

உங்கள் கருத்தை நான் அறிய