Showing posts with label (க)விதை. Show all posts
Showing posts with label (க)விதை. Show all posts

Monday, July 23, 2018

தழல்

கனியக்கனிய கனிவது காதல்,
 தனியத்தனிய தனியாதது காமம்.

என் எழுதுகோலும் உன்மேல் காதல் கொள்ளுமோ என்ற பயமெனக்கு உன் அழகை வர்ணித்தது நான் வார்த்தை வடிக்கையிலே.

புறம்பற்றியெரியும் எண்ணத்தின் தழல் தனிக்க புன்னகையள்ளி பூசிக்கொள்கிறேன் இருப்பினும் புன்னகையும் புகைந்தோடும்படி எரியூட்டப்படுகின்றது எண்ணங்கள். 

Thursday, December 1, 2016

எண்ணோட்டங்கள்....



தனிமை தணல் மூட்ட .....
எரியும் எண்ணத்தில் புகைந்து கொண்டிருக்கிறது நினைவுகள்!

தெறிக்கும் ஒவ்வொரு சாம்பலும் அதன் துகள்களும்
வலிகளா....? வேதனைகளா....? இல்லை சுகங்களா....? என்று
அறியும் முன்னமே சுட்டுவிடுகின்றன,

அதனை தணிக்க முடியாமல் தவிக்கின்றேன்
மீண்டும் மீண்டும் தனிமையில் ......




சாற்றை விரட்டுவிட்டு
சக்கையை சுமந்து திரியும் வாழ்வில்
கடவுளை கணியவைக்கும் நம்பிக்கை
பூனையை புலி என்றும்
புலியை எலி என்றும் .....



நான் செல்லும் சாலைகள் அனைத்தும்
தொடங்கிய இடத்திலேயே மீண்டும் மீண்டும் முடிகின்றன

ஆனால் ஒவ்வொரு முறையும்
ஒவ்வொரு சாலையிலும்
வேறு வேறு மரங்கள்  

Thursday, January 5, 2012

ஞானத்தின் விசாலம்...


அனைத்தும் அறிந்துவிட்டதாய்
துள்ளிக்குதிக்கிறது ஆணவம்
வக்கிரமும் வாஞ்சையும்
வரிசைகட்டி வந்து நிற்க

தேவையைமிஞ்ச தேடுகிறது ஆசை
அதனை மிஞ்சும் பேரசை
வன்மம் என்பதும் அதர்மம் என்பதும்
பிறப்பெடுக்கும் தருணம்
இதுவாகவே இருக்க
கோபம் பொறாமை கொடிகட்டி நிற்க

மனம் வாடி, துன்பம் தேடி
வாழ்க்கையை உணராமல் வாழ்வதற்கு

ஆறுக்கு
ம் குறைவே நலம்

Monday, January 2, 2012

இந்த இனம் எம் தமிழினம்...


காலப் பெருவெளியில்
பாதச்சுவடுகளை மட்டும் விட்டுச்சென்ற
இனங்களின் மத்தியில்
காலூன்றி நின்று போராடும்
என் தமிழினம்

கயவர்கள் பலரால்
காட்டிக் கொடுக்கப்பட்டபின்னும்
கண்டவர்கள் ஆண்டுவிட்டு
சுரண்டி எடுத்த  பின்னும்
சுயமாய் வாழத் துடிக்கும்
இனம் என் தமிழினம்

சதிகளின் மூலம் அழித்தெடுத்தது போக
நரிகளின் வேளையில் துடைத்தெடுத்தது போக
மீதம் இருக்கும் தன்மானம் தளராமல்
தழைக்க வழிதேடும் இனம் என் தமிழினமே

நாகரீகம் சொல்லிக்கொடுத்த எமக்கு
மோகம் பல பிறந்தாலும்
தமிழ் தாகம் தணியாமல்
தரணியில் இருக்கும் இந்த இனம்
என் தமிழினமே
      
உயிரை விட மானம் பெரிது
என்று மறம் கொண்டு வாழ்ந்த இனம்
மரபு கொஞ்சம் மாறியிருந்தாலும்
இன்னும் மறிக்கவில்லை இனம்
எம் தமிழினம்

ஒற்றுமைக்கு வழியில்லாமல் போக
வேற்றுமை தலைவிரித்தாட
சாதியம், மதம் என்னும்
அடிமை வாழ்வை தகர்த்து
தன் நிலைமையில் மீட்சி காண்கிறது
இந்த இனம் எம் தமிழினம்

மீண்டு வருவோம், மீண்டும் வருவோம்
என்னும் குரல் ஒலிக்கிறது ஓயாமல்
கணவாய் இருக்கும் அந்தக் குரல் இப்பொழுது
நிஜமாய் மாறுகிறது, மாற்றுகிறது

இந்த இனம் எம் தமிழினம்

காலச் சுழற்ச்சியில் நாம் மேலேறும் தருணம் இது
என்று தனைத்தானே உணர்ந்து
உயர்த்திக் கொள்கிறது இந்த இனம்
எம் தமிழினம் 

Sunday, January 1, 2012

என்று மெய்படும் அவன் கனவு?


கனவுகள் மெய்பட வேண்டும் என்றான் கவி

மெய்பட்டதா கனவு

இல்லை பொய்பட்டாத?

தினம் தினம் எத்தனை கனவு

அத்தனையும் பொய்யாய் போகுது!
என் தேசமே!!

நான் என்ன செய்வேன் ஏதுசெய்வேன்

வெந்தேன் எனை நானே நொந்தேன்

கனவு என்பது இடற்று பிழையால்

களவு என்பது ஆனது ஏனோ?
ஒழுக்கம் என்பது என் தேசத்தை விட்டு
போனது தானோ? ஏனோ?

மதவெறி இனவெறி பெருகியதிங்கே

மனு நெறிதான் போனது எங்கே?

காசை காணத் தெறியுது இங்கே

பாசம் நேசம் போனது எங்கே?

எதரி வந்தால் ஒற்றுமை காணுது

இல்லை என்றால் வேற்றுமை பேணுது

மாநிலம் முழுதும் சாதியில் வேற்றுமை

தேசம் முழுதும் இதில்தான் ஒற்றுமை

வேற்றுமை என்பது வார்த்தையில் இல்லை

ஒற்றுமை என்பது உள்ளத்தில்(உண்மையில்)இல்லை

எங்கோ போகுது தேசம்

இட்டுகட்டி போடுது பல வேசம்

தண்ணீர் கொடுக்க தரம்கெட்டு கிடக்குது

தாய்க்காவிரி அங்கே சிறைப்பட்டு கிடக்குது

உண்மயில் சொன்னால் வெட்க்கக்கேடு

என்று மறையும் இந்த சாபக்கேடு

விடிவு ஒருநாள் வருமா? என்றேன்

கனவுகள் மெய்பட வேண்டும்
என்றான் கவி

Thursday, December 29, 2011

கண்ணீரை விலைக்கொடு...


ஆசைகளால் அடுக்கப்பட்ட
வாழ்க்கையிது

முறிக்கப்படும் பொழுதோ!

பறிக்கப்படும் பொழுதோ!
துன்பம் தலைவிரித்தாடும்
துக்கம் தொண்டையடைக்கும்

கனவுகள் கசக்கப்பட்டு

காகிதமாய் குப்பையில்
வீசப்படும்

துயரம் உன்னைத் துரத்தும்

எதுவுமே! எவருமே வேண்டாம்
என்ற எண்ணம் ஊற்றெடுக்கும்

மெய்ஞானம் மெல்ல விடைகொடுப்பதுபோல்

நன்கு நடிக்கும்
சித்தாந்தம் சில நேரம்
தலைகாட்டிச் சிரித்துவிட்டு
சிதறிவிடும்

நமக்காக ஒருவருமில்லை

என்கிற எண்ணம் எழுந்து
மேலே நிற்கும்

அறுபட்ட காத்தாடியாய்

மனம் அலைக்கழிக்கும்
ஆழிப்பேரலையாய்
அத்திரம் ஆர்ப்பரிக்கும்

துள்ளியெழுந்து மேலும்

துயரப்பட்டுவிடாதே

கண்ணீரில் கண்களைக்

கழுவிவிடு சிவந்து போகட்டும்
நாவு வறண்டு போகட்டும்

கண்ணீரை விலைக்கொடுத்து

அமைதியை வாங்கு

ஒவ்வொரு சொட்டுக் கண்ணீரும்

ஆயிரம் ஆயிரம் நம்பிக்கையை
உருவாக்கும்...

Friday, December 23, 2011

பயணம் மட்டும் தொடரும்...


பாய்ந்தோடிய நீர்மத்தின்
நுண்மமாயிருன்தே
மற்றவைக்கு அறுதியிட்டு
போட்டியிட்டு
எல்லையோடி
எழும்பிவந்து
உயிர்ப்படைந்து
பிண்டமாகி
இருப்புக்கொண்டேன்
இருட்டினில்

காலம்

இழுத்துத் தள்ளியது
கண்ணீரில் கரைந்து
தொடர்ந்த பயணம்
இன்றும் தொடர
நானறியேன்
இலக்கு எதுவோ?

நிச்சயம் ஆகுவேன்

மீண்டும்
நீர்மமாகவோ
துகளாகவோ
காற்றாகவோ
கனலாகவோ
பயணம் மட்டும் தொடரும்...

Tuesday, December 20, 2011

உயிரம்புகள்...


ஒவ்வொரு முறையும் தாக்கப்படுகிறேன்

மிகமிகச் சரியாக மிகத்துல்லியமாக


தாக்கப்படும் ஒவ்வொருமுறையும்


வீழ்ச்சி காண்கிறேன் ரம்மியமாக


தாக்கிய அம்புகுவியல் மேல் நின்று


எண்ண முயல்கிறேன் அம்புகளை அல்ல


வீழ்ச்சிகளை மட்டும் தான்


சில அம்புகள் நீளமானவை


சில அம்புகள் அகலமானவை


சில கூரானவை, பல நேரானவை


மழுங்கியது சில, ஒடிந்தது சில


குருதிக்கரையுடன் சில அம்புகள்


பலரை தாக்கிய அடையாளம் தாங்கி


இவையணைத்தும் என்னைத் தாக்கிய


உயிரம்புகளே
...

 

Sunday, December 18, 2011

காகிதம்...













வெண்மையாய் இருந்த வெற்றுக் காகிதம்

ஆணிகளால் அரையப் பட்டிருந்தாலும்


அமைதி காத்தது அழகாகவே


தூரிகை துவலத்துவல நிறமேறியது


பச்சை வர்ணம் பளிச்சிட்டது


சிவப்பு வர்ணம் ஆங்காங்கே சிதறியது


நீல வர்ணம் நீண்டது


மஞ்சள் வர்ணம் மருகியது


கருப்பு வர்ணம் கனமின்றி பெருகியது


அங்கும் இங்கும் வர்ணக்கலவை


பெயரிட இயலா புதுப்புது வர்ணம்


காகிதத்தை காதலன் போல்


தொட்டு முடித்தது தூரிகை


அழகாய்த்தான் இருந்தது ஓவியம்


தனித்தன்மை இழந்தது காகிதம்


 

Thursday, December 15, 2011

அது மட்டுமே...


அது
அதுவாய் இருக்கிறது


அனைத்தும் அதற்க்குள்ளே
அனைத்தும் அதனாலே


அனைத்தும் அதற்கே
அதுவே அனைத்தும்


அதுவே ஆக்கம்
அதுவே ஆக்கும்
அதுவே அழிக்கும்


அதுவே மாறும்
அதுவே மாற்றும்

அதுவே நிலைக்கும்

அது நமக்கு நன்மை
அதுவே நமக்கு தீமை


அதுவே நமக்கு நேர்மறை
அதுவே நமக்கு எதிர்மறை
அதற்கு அல்ல நன்மை தீமை
அதற்கு அல்ல நேர்மறை எதிர்மறை


நாமும் அதாலே
நாமும் அதனுள்ளே
நாமும் அதுவாய்
அதுவாய் நாமும்


அது மட்டுமே உண்மை

Friday, December 9, 2011

முகமூடியோடு...

 
மூடி மறைத்த முகத்தோடு ஓடுகிறேன்
என் உண்மை முகத்தைத் தேடி
என்றாவது கண்டுப்பிடித்து விடுவேன்
என்ற முகமூடியோடு
----------------------------------------






கடவுளாய் இருக்க முயற்ச்சித்தேன்
கயவன் என்றது உலகம்


பதறி ஓடினேன்
பைத்தியக்காரன் என்றது அதே உலகம்


எதுவும் தடுக்கவில்லை என் கருணையை
காசைத்தவிர
-----------------------------------------



இறந்தகால நினைவுகளை இழுத்து
நிகழ்காலத்தை இறக்கச் செய்யும்
என் தனிமை
-----------------------------------------




எந்திர வாழ்க்கையில்
சிக்கி சிதையும் பூக்களாய்
மகிழ்ச்சி




நன்றி - படங்கள் Google

Friday, December 2, 2011

மருந்தாகியது... (மீள்பதிவு)

அறியா மனது
மண்டியிட்டக் கால்கள்

செய்யாத் தவறு
அடிவாங்கியக் கைகள்

கோணாத மனம்
குட்டுப்பட்டத் தலை

காதல் வலி
கதறிய நெஞ்சம்

தோல்வியின் தொடர்ச்சி
கலங்கியக் கண்கள்

வெற்றியில் வீழ்ச்சி
ஏங்கிய நெஞ்சம்

உணர்வின் ஏக்கம்
கசிந்தக் கண்ணீர்

அழிந்த இனம்
நரக வேதனை

புரிந்த மனம்
பொய்யான சோதனை

மறைந்த உறவு
உறைந்த தாக்கம்

குலைந்த நட்பு
 விளைந்த நோக்கம்

மருந்தாகியது காலம்...


Saturday, November 26, 2011

உணர்வே மிச்சமென...


புதைக்கப்பட்டவை உடல்கள் அல்ல
வீரத்தின் விதைகள்

ஒவ்வொரு துளி செந்நீரும்
விடுதலைக்கு வீறுகொண்டு மீண்டுவரும்

செய்த தியாகம் தரணியெங்கும்
செழித்தோங்கும்
ஒவ்வொருவருக்கும் ஆயுதம் 
ஒவ்வொருவரும் ஆயுதம் 
மானம் காக்க உயிரை துச்சமென
உணர்வே மிச்சமென......



நன்றி: google

"புலிகள்" எங்கள் ராணுவம்...



எங்கள் தலைவா

தமிழ்த் தாயின் தலைமகன் நீ
எங்களின் வீரத் திருமகன் நீ
அடிமை விலங்கை அடித்துடைத்தாய்
தமிழனின் அவமானம் துடைத்தெடுத்தாய்

கொடுமைகள் கண்டு கோபம் கொண்டாய்
வீரத்தின் விளைநிலம் நாமே என்று வீருகொண்டாய்
நாடே வீடென்று காடு புகுந்தாய்
களமே கதியென்று ஆயுதம் கொண்டாய்
சமரே சரி என்று சரித்திரம் படைத்தாய்

தனிமனிதனாய் எழுந்தாய்
தாயகம் கொணர்ந்திட அழைத்தாய்
அமைப்பினை வளர்த்தாய்
நரிகளை அழித்தாய் 


வீரமற்ற விவேகம் கோழைத்தனம்
விவேகமற்ற வீரம் முட்டாள்தனம்

அரசியல் பங்கு படைத்தாய்
மரபுவழியில் சமர் செய்தாய்  

கரும்புலி கடமைசெய்தது
கடற்ப்புலி கோலோச்சியது
வான்புலி வானளாவியது
ஒன்றுபட்டு விடுதலைப்புலி
வீரம் பேசியது

மானம் காக்க
இனம் காக்க
அறம் நிற்க
மறம் உரைக்க
மாசற்ற மாவீரனாய்
தரணிக்கு தமிழனின்
அடையாளமாய்
சின்னமாய்
செயலாய்
எண்ணமாய்
எழுந்து நின்றாய்

இருபதாம் நூற்றாண்டின்
இணையற்ற வீரனே
தமிழனை உலகுக்கு
அறிமுகப் படுத்தியவானே   
                  
தமிழன் என்றாய்
தனிநாடு வென்றாய்
ஈழம் அமைத்தாய்


நிகரில்லாதவரே
நெஞ்சை விட்டு நீங்காதவரே
துரோகம் உம்மை வீழ்த்தி விட்டதாய்
கொக்கரிக்கலாம்
நரிகளின் நயவஞ்சகம்
உம்மை மிஞ்சிவிட்டதாய்
நெஞ்சு புடைக்கலாம்

ஆனால் கடைசி உண்மைத் தமிழன்
ஒருவனாவது இருக்கும் வரை
உனக்கும் உமது கொள்கைக்கும்
மறைவென்பதே இல்லை


"புலிகள்" எங்கள் ராணுவம்
"பிரபாகரன்" எங்களுக்கு ஒரு மந்திரச்சொல்
"தமிழ் ஈழம்" எங்கள் தாரக மந்திரம்


தமிழீழ தாகம் இன்றுதான் தணியாத தாகம்

என்றுமே தணியாமல் இருக்கப் போவதில்லை
தணியும் வரை விடப்போவதும் இல்லை

   

Thursday, November 17, 2011

பிழைத்துப்போ தமிழே!


பிழைத்துப்போ தமிழே! பிழைத்துப்போ!

உன்னை அழிக்க ஆயிரம் அரிவாள்!

அதனை எவர் இங்கே அறிவார்!

ஆயிரம் ஆண்டுகள் கடந்தவள் நீ!

காவிரிக் கரையில் வளர்ந்தவள் நீ!

உன்னை அழிக்க வந்தவர் எவரும்!

பிழைத்ததில்லை என்பதை உலகம் அறியும்!

பிழைத்துப்போ தமிழே! பிழைத்துப்போ!

இன்னும் ஆயிரம் ஆயிரம் ஆண்டுகள்
தழைத்துப்போ!

நம்மினத்தை அழைத்துப்போ!

Saturday, October 22, 2011

அப்பாற்ப்பட்டவன்...

எண்ணமும் எழுத்தும்
சங்கமமாய் சமுத்திரம் படைக்கும்
இயற்கையும் காதலும்
அலைகளாய் ஆடிடத்துடிக்கும்

முத்துக்களாய் பிறந்துவிட்ட
வார்த்தை வடிப்புகள்
மாலைகளாய் மாறினாலும்
எங்கோ எதுவொன்றோ
குறையும்

தாயைக் கண்டுவிட்ட பசுக்கன்றாய்
சிலநேரம்
மழைமேகம் கண்டுவிட்ட மயிலாய்
சிலநேரம்
பலநாள் கழித்து
பழையதைக் கண்டுவிட்ட பிச்சைக்காரனாய்
சிலநேரம்
என்று சில்லிடும் மகிழ்ச்சியது
கோடையில் விழும் மழைத்துளியாய்
மறைந்து போகும் எங்கோ

பதம்பார்த்து விதைக்கக் காத்திருப்பவனுக்கு
மழை வேண்டும்
பதமாய் பெயர்த்தெடுத்த ஈரப்பானைக்கு
வெய்யில் வேண்டும்
அறுத்துவிட்டு கதிரடிக்க காத்திருப்பவனுக்கு
விரைவாய் வீசும் காற்று வேண்டும்

ஒவ்வொரு வடிமைப்பும் ஒவ்வொரு தேவை பொறுத்தே
என்றாலும் ஒவ்வொன்றும் வக்குக்கப்பட்டது ஒவ்வொரு காலம் பொறுத்தே

அவனுக்கு சூரவெளியும் வேண்டும்
அதனூடே சுரம் மீட்டும் தென்றலும் வேண்டும்
சுட்டெரிக்கும் வெய்யிலும் வேண்டும்
உறையவைக்கும் பனியும் வேண்டும்
சிலநேரம் இறைவனும் வேண்டும்
சிலநேரம் மிருகமும் வேண்டும்
காதலிலும் களிப்படைவான்
காமத்திலும் புலப்படுவான்
கள்ளும் நஞ்சும் கலந்தே வேண்டும் என்பான்

கல்லைக் காணும்போது கடவுள் இல்லை
கடவுளை காணும்போது கல்லில்லை

அவற்றிற்கு அப்பாற்ப்பட்டவன்.....

Sunday, October 9, 2011

கண்டனம் ஒன்றாவது கூறுங்கலேன்..... (மீள்பதிவு)

இது ஓர் ஆண்டுக்கு முன்பு நான் எழுதியது, இன்னும் எத்துனை நாள் மீள் பதிவுக்கு உயிர்ப்புடன் இருக்குமோ என்று தெரியவில்லை, இந்தக் கொடுமைக்கு முற்றுப்புள்ளியும் புலப்படவில்லை. இந்தியன் என்பதில் பெருமைகொள்ளும் தமிழர் ஒருவராவது உணர்ந்துகொண்டால் போதும்.


வங்கக்கடல்தான் வருந்துதம்மா!

அரபிக்கடலும் அழுகுதம்மா!

குமரியும்தான் குமுறுதம்மா!

பரதவர் கொடுமை நடக்குதம்மா!

பாரதம் வேடிக்கை பார்க்குதம்மா!

கடற்ப்படைகொடுமை தொடருதம்மா!

கயவர் கைதான் படருதம்மா!


வலைக்களும்தான் அங்கே அருபடுது!

மீன்களும்தான் கொள்ளை இடுபடுது!

உயிர்பலிதான் நித்தம் நடைபெருது!

மானம்தான் கடலிலும் இழிபடுது!

கடலிலும் சிங்களர் கொடிதானோ?

நரிகளின் நாட்டமை ஏனோ?


தமிழன் என்றுதான் தனிக்கவேண்டம்!

இந்தியன் என்றாவது இறங்குகலேன்?

உயிரையும், உரிமையையும் தாருங்கலேன்?

கண்டனம் ஒன்றாவது கூறுங்கலேன்?

Friday, September 9, 2011

பிடிக்காதவளாகவே இருந்துவிட்டுப் போ...

உன் தங்கை வயிற்று தவப் புதல்வர்கள்
உன்னால் வாழ்வில் வளம்பெற்று
உன்னையே இழிவாய் பேசும்போது
பயனற்றுப் போகிறது என் கோபம்
பழகிய பழக்கத்தால்

உன்னை போற்றும் நான்
அடுத்தவன் உடமையை கொண்டு
உயிர்வாழ்கிறேன் என்று கூறியபோது
உணர்வற்று உயிரிழக்கிறேன் உள்ளத்தால்

கலையாய் கற்றுக்கொண்டு காசுபார்ப்பதற்க்கும்
உணர்வை விட்டுக்கொடுக்க முடியால்
உள்ளே உருகி தேய்வதற்கும்
வித்தியாசம் தெரியாத வீணர்கள் மத்தியில்
செத்துப் பிழைக்கிறேன் ஒவ்வொரு முறையும்

பிறரும் உன்னை போற்றி வாழ்ந்தகாலம் போய்
இருப்பவரும் உன்னை இழிவுபடுத்தும்
நிலைமையில் கையாலாகாத கைதியாய்
கட்டுண்டு கிடக்கிறேன்

பொறாமையில் பேசி
என்னைக் காயப்படுத்தி
உன்னை அழிக்கவும்
அவமதிக்கவும்
ஒரு கூட்டமிங்கே ஓயாமல் போராடுகிறது
கண்ணில் படாத கிருமியாய்
பயிரை வீணாக்கும் களையாய்
ஒட்டி உருஞ்சும் ஒட்டுண்ணியாய்
எனக்கது புலப்படுகிறது

உன்பெருமை அவர்களுக்கு ஏன் எரிகிறது?
எனக்கு தெரியும்
எம்மக்களுக்கு தெரியும்
உன் புகழ்பாட
போற்றி உனைக்காக்க
இன்றும் உனக்காய் உயிர் துறக்க
ஆயிரம் ஆயிரம் பிள்ளைகள் நங்கள்

இன்னும் இன்னும் உனக்கு பெருமைதான்
உன்னால் வாழும்
அவர்களுக்கு நீ பிடிக்காதவளாகவே இருந்துவிட்டுப் போ....

Tuesday, August 9, 2011

பொய் சிரிப்பு....

தோரணங்களுக்கு கீழே
ஊர்கூடி ஒன்றாய் அமர்ந்திருக்க
மண்டபம் கோலாகலமாய் நிறைந்திருக்க

இசைக்கச்சேரி ஒருபுறம்
ஓங்கி ஒலிக்கும் குழந்தை ஒருபுறம்
சிதறி ஓடிக்கொண்டிருக்கும் சிறுவர்கள்
எங்கும் சலசப்பாய் சிதறிவிழும் பேச்சுக்கள்

மல்லிகைப்பூ
சந்தனத்தோடு
பன்னீரின் வாசம்
காற்றோடு கலந்து வீச

அழைத்தவுடன்
அடித்துக்கொண்டோடும்
கூட்டத்தின் நடுவே
தெரிந்த முகங்கள் சில
தெரியாதவை பல
என்றாலும்
அனைத்திற்கும் பதிலாய்
முகத்தோடு ஒட்டப்பட்ட பொய் சிரிப்பு

நதியின் வழியே....

நீண்ட நெடுந்தொலைவாய் காண்கிறேன்
இந்த நதிக்கரையை

வளைவுகள் அதிகம் என்றாலும்
பஞ்சமில்லை அழகு
நீரில் தெளிவில்லை என்றாலும்
குறைவில்லை வேகம்

பயணித்துக்கொண்டிருக்கிறேன்
கரைமீதென்றாலும்
நினைவுகள் அனைத்தும் நீரின் மேலும்
அதன்மீது எழும் அலைகளின் மேலும்

நதியின் பிறப்பிடம் அறிவேன்
என் பயணத்தின் தொடக்கமும்
அதுவாகத்தான்

முடிவிடம் மட்டும் அறியேன்
என் பயணத்திற்கும்
இந்த நதிக்கரைக்கும்