தன்மானம் என்பதை உயிர்மூச்சை கொண்டவன், வீரத்தில் சிறந்தவன், பண்பிலே திகழ்ந்தவன், கலைகளில் வித்தகன், அரசியலில் ஆழ்ந்தவன், உழைப்பில் உயந்தவன் என்று இன்னும் எத்தனை எத்தனை பெருமைகளை இழக்கப் போகிறாய் தமிழா?
சேர, சோழ, பாண்டிய, பல்லவனாய் இருந்தபோது ஒற்றுமை இல்லை ஆனால் உலகில் சிறந்து விளங்கினாய், இன்று சோழ, சேர, பாண்டிய, பல்லவ நாடு இல்லை, ஒற்றுமையும் இல்லை, சிறப்பும் இல்லை ஏன்? தனியாய் இருந்தபோது இருந்த தன்மை ஒன்றாய் ஆகியதும் சிறந்திருக்க வேண்டும் அல்லவா? அது இன்று இல்லையே ஏன்? ஒரு வேலை தமிழனுக்கு தமிழனே எதிரியாய் இருந்தால்தான் உன்னால் வீரம் காண முடியுமோ? இல்லை உன்னை யாரென்று நீ உணர முடியுமோ?
தன்மானம் இழந்து, நமது உரிமையை காக்க, நமது இனத்தை காக்க எவன் எவனையெல்லாம் நம்பிக் கிடக்கப் போகிறாய், கண்டவனிடம் கையேந்தும் நிலைமை ஏன்? சிந்திப்பாயா தமிழா?
பல்லவன் முதல், பிரபாகரன் வரை யாரும் நாடு பிடிக்கும் ஆசையில் போர் தொடங்க வில்லை, தமிழனுக்கு எங்கெல்லாம் அநீதி இழைக்கப்பட்டத்தோ அங்குதான் படைஎடுத்தான் பாடம் புகட்டினான். ஆங்கிலேயன் போல் தமிழன் கொள்ளையடிக்க ஆசைப் பட்டிருந்தால் இன்று உலகப் பொதுமொழி ஆங்கிலமாய் இருந்திருக்காது, தமிழாய்த்தான் இருந்திருக்கும்.
தன்னம்பிக்கை இல்லையா? தன்மானம் இல்லையா? இன்று ஈழத்தை அழித்தவன் நாளை தமிழகத்தை அழிக்க மாட்டான் என்பது என்ன நிச்சயம்? குடிக்க தண்ணீர் தராதவன், நிம்மதியாய் வாழ வழி செய்யாதவன், சொந்த நாட்டு மக்களின் கோரிக்கையை உதாசீனப் படுத்துபவனிடம் இன்னும் எத்தனை எத்தனை நாள் அடிமையாய் இருக்கப் போகிறாய்? தமிழ்நாடு தனிமைபட்டுவிடுமோ என்றுதான் நினைத்து ஈழம் அழித்தானோ? இல்லை தமிழன் தன்மானத்தை தொலைத்துவிட்டான் என்று நம்பி அழித்தொழித்தனோ? முற்றிலுமாய் சிதைத்துவிட்டான் என்பதுமட்டும் உண்மை, நம் சொந்தங்கள் அழிந்துவிட்டன என்பது உண்மையிலும் உண்மை.
கதறினோம் கூப்பாடு போட்டோம், எழுதினோம், போராடினோம் இப்பொழுது தீபாவளி கொண்டாடுகிறோம், திரையரங்கில் பொழுதை கழிக்கிறோம். எந்த தைரியத்தில் நமக்கு இந்த அலச்சியம்? பெரிய தேசத்துடன் அண்டிப் பிழைக்கிறோம் என்றா? இல்லை நமக்கு எதுவும் நடக்காது என்றா?
இந்தியாவில் இரண்டு அணுஉலைகளை கொண்ட ஒரே மாநிலம்,
மூன்று முக்கிய நதிகளில் தண்ணீருக்காக மூன்று மாநிலத்திடம் பிச்சை எடுக்கும் மாநிலம்
சொந்த பகுதியில் குடிநீர்த் திட்டம் தொடங்க அடுத்த மாநிலத்தவன் செய்யும் பிரச்னைக்கு பயந்து திட்டத்தை கைவிட்ட மாநிலம்
சொந்த நாட்டு மீனவர்களின் சாவின் எண்ணிக்கையை உக்காந்து எண்ணிக் கொண்டிருக்கும் மாநிலம்
ஆகா எத்தனை எத்தனை பெருமை உலகின் தலைசிறந்த இந்த தமிழனுக்கு?
நாம் இறந்தாலும் தமிழ் நாட்டில் நம் இனம் இருக்கிறது என்ற நம்பிக்கையில் ஒரு ஈழத்தமிழனாவது, மகிழ்ச்சியாய் உயிரை விட்டிருப்பான், இங்கு அவ்வாறு நடந்தால் நாம் யாரை நினைத்து மகிழப் போகிறோம்? புலம் பெயர்ந்த தமிழர்களை நினைத்தா?
தமிழா இதற்குமேலும் நீ சிந்திக்காவிடில், லெமூரிய கண்டம் போல் ஆகிவிடும் தமிழ்நாடு, தமிழினம் என்று ஒன்று இருந்தது என்பது கல்வெட்டுகளில் மட்டும் இடம்பெறும்.
உணர்ந்துகொள், விழித்தெழு, மாயைகளை உடைத்தெறி, வீறுகொள், ஒற்றுமையாய் இரு, அடிமையாய் இராதே, தமிழனை விட்டுக் கொடுக்காதே, இலவசங்களில் மயங்காதே, சாதிமத பேதம் தவிர், சென்னை முதல் ஈழம் வரை ஒரே இனம், ஒரே மக்கள் என்னும் எண்ணம் கொள், புல்லுருவிகளை அடையலாம் காண், களைகளை பிடிங்கி எறி, நாம் யாரையும் அழிக்க வேண்டாம், ஆனால் நம்மை நாமே கத்துக் கொள்வோம், பிறரிடம் கையேந்த வேண்டாம். தன்மானம் தழைத்தோங்கட்டும்.
0 comments:
Post a Comment
உங்கள் கருத்தை நான் அறிய