ஒருநாட்டின் வளமான வாழ்விற்கு தேவை இரண்டு. ஒன்று வாள்முனை, இன்னொன்று பேனாமுனை. இதில் இரண்டுமே கூர்மையுடன் இருக்கவேண்டும். எது ஒன்று கூர் மழுங்கினாலும் அந்த நாட்டின் எதிர்காலம் கேள்விக்குறியாகும் என்பது மறுக்க இயலாத உண்மை.
இவை இரண்டும் எப்பொழுதும் நேரான பார்வைகொண்டும், இலக்கை நோக்கி மாறாத பாதைகொண்டும் இருக்க வேண்டும். எதுவொன்று தன இயல்பை இழந்தாலும் அந்நாட்டு மக்களுக்கு வாழ்வாதாரம் காணமல் போகும்.
இவற்றில் வாள்முனையை விட பேனாமுனைக்கு வலிமை அதிகம் என்பது மறுக்கப்படாத ஒன்று. அதை நிருபித்த சரித்திர சான்றுகள் பல. இப்படி ஒரு வலிமைவாய்ந்த ஆயுதம், இன்று நம்நாட்டில் உண்மையில் கூர்மையுடந்தான் இருக்கிறதா? இல்லை குறைந்தபட்சம் உயிருடனாவது இருக்கிறதா? என்ற சந்தேகம் இருந்துகொண்டே இருக்கிறது.
உண்மைகளை மக்களிடம் கொண்டு சேர்த்து விழிப்புணர்வை ஏற்ப்படுத்தும் அற்ப்புத பணியை இன்றைய நம் நாட்டு பத்திரிகைகள் செய்கிறதா? என்று கேட்டால் இல்லை என்றே கூறமுடியும்.
இன்றும் பத்திரிகைகளில் உண்மை செய்திகள்தான் வெளிவருகின்றன ஆனால் அவையனைத்தும் வக்கிரத்தின் உண்மைகள், ஆபாசத்தின் உண்மைகள், கேவலத்தின் உண்மைகள்.
இதுவா சிறப்பான பணி? இதுவா உண்மையான ஒரு பத்திரிக்கையின் அழகு? இல்லை இல்லவே இல்லை. சாதிகளுக்கு, மதங்களுக்கு என்று பிரிவினைவாதம் செய்யும் பத்திரிகைகள், ஆளும் கட்சிக்கும், எதிர்கட்சிக்கும் என்று அவர்கள் புகழ்பாட அடுத்தவரை இகழ என்று ஒரு பத்திரிகைகள், காசுபார்ப்பதர்க்கு மட்டுமே என்ற நோக்கில் செய்லபடும் பத்திரிகைகள் என்ற இவைஅனைத்தும் ஒரு நாட்டின் வளர்ச்சிக்கு புற்றுநோய் போன்று நாட்டை, நாட்டின் மக்களை, நாட்டின் வளர்ச்சியை கொஞ்சம் கொஞ்சமாக அரித்து பாழாக்கிக் கொண்டிருப்பவை.
கொலை, கொள்ளை, கற்பழிப்பு, திருட்டு, கள்ளக் காதல் போன்ற வக்கிர செய்திகளுக்கே முக்கியத்துவம் கொடுப்பது ஏன்? விளையாட்டு, ஆன்மீகம், கலை, வர்த்தகம், அறிவியல் சாதனைகள் போன்ற செய்திகளை பின்னுக்கு தள்ளுவதேன். அப்படி அவற்றில் எதாவது ஒன்று நிகழ்ந்தாலும் தனக்கு வேண்டியவர், வேண்டாதவர் என்ற பாகுபாடு, காழ்ப்புணர்ச்சி என்பவற்றை பொறுத்தே அமைகிறது ஏன்?
கடமை என்று சொல்லி அடுத்தவரது அந்தரங்களை பதிக்கும் நீங்கள் உங்கள் அந்தரங்கள் பிறரால் அறியப்படுவதை விரும்புவீர்களா? இல்லை உங்களுக்கு அந்தரங்கம் என்பதே கிடையாதா? இல்லை நீங்கள் அவ்வளவு தூயவர்களா? நீங்கள் பதிக்கும் விசயங்கள் உங்கள் வீட்டு பிள்ளைகளையும் பாதிக்கும் என்பதை உணராத அளவிற்கு முட்டாள்களா நீங்கள்? இப்படி பட்ட முட்டாள்களின் கையிலா பேனா சிக்கியிருக்கிறது. என்னே நம் நாட்டிற்க்கு வந்த சாபக்கேடு?
பிறர்க்கு செய்தி அறிவிப்பதென்றால், கற்பழித்தவனுக்கு தண்டனை கிடைத்தது என்று இருந்தாலே போதுமே? கற்பழிப்பை விளக்க வேண்டிய அவசியமென்ன? உங்கள் இரண்டு ருபாய் செய்தித்தாள் விற்க வேண்டும் என்பதற்காக எதை வேண்டுமானாலும் செய்வீர்களா? தவறு செய்தவர்களை மக்கள்முன் நிறுத்துவது உங்கள் கடமை என்றால் நீங்கள் தவறுசெய்யாமல் இருக்க வேண்டுமே! நீங்களும் தவறுசெய்தால் உங்களை யார் தடுப்பது?
உங்கள் வருமானத்தை மட்டும் கவனத்தில் கொள்ளாதீர்கள், நாட்டின் வளர்ச்சியை மட்டும் மனதில் வைத்து தவறான செய்திகளையோ, ஒருதலை பட்சமான செய்திகளையோ பிரசுரிக்காதீர்கள். நன்மைகளை விளைவிக்கும் செய்திகளை, நாட்டை வளமாக்கும் செய்திகளை தலைப்பு பகுதியில் இடம்பெறச் செய்யுங்கள். விளையாட்டு, வர்த்தகம், தொழில்துறை, அறிவியல் போன்றவற்றை தொடர்ந்து வரச்செய்யுங்கள் வையுங்கள்.
விபத்து, வக்கிரம், கவர்ச்சி விளம்பரம், கொலை கொள்ளை ஆகியவற்றை தனிப்பகுதியாக்கி, தனித்திரியாக்கி தலைப்பிட்டு சினிமாவுடன் இருதிபக்கங்களாக மாற்றிவிடுங்கள்.
நாட்டை செழுமையாக்குவதும், மன்னாக்குவதும், எதுவாக செய்வதாய் இருந்தாலும் சரி உங்களுக்கு பெரும் பங்கு உண்டு என்பதையும், உங்களால் சமூகத்தில் ஏற்ப்படும் நல்லதோ, கெட்டதோ எதுவாகினும் அது உங்கள் குடும்பத்தையும், குழந்தைகளையும் பாதிக்கும் என்பதையும், நீங்களும் உங்கள் குடும்பமும் இந்த சமூகத்தில் ஒரு அங்கம் என்பதையும் தயவுசெய்து மறக்க வேண்டாம்.
மக்களுக்கு ஒரு வேண்டுகோள் - இதுபோன்ற மட்டமான, கீழ்த்தரமான, வக்கிரமான செய்திகளுக்கு ஆர்வம் காட்ட வேண்டாம். எரிகிற கொள்ளியை எடுத்துவிட்டால் கொதிப்பது அடங்கிவிடும்.
அரசுக்கு ஒரு வேண்டுகோள் - பத்திரிக்கைகளுக்கு வழிமுறைப் படுத்தப்பட்ட இன்னும் கடுமையான சட்டங்கள் இயற்றப் பட வேண்டும். எதிர்மறையான பதிப்புகளை ஏற்ப்படுத்தும் செய்திகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படக்கூடாது. வன்மையும், கொடூரங்களும், தனிப் பகுதிகளாக்கப் பட்டு இறுதியாக இணைக்க வேண்டும்.
இயற்றலும் ஈட்டலுங் காத்தலும் காத்த
வகுத்தலும் வல்ல தரசு
0 comments:
Post a Comment
உங்கள் கருத்தை நான் அறிய