Tuesday, October 18, 2011

நெஞ்சம் பொறுக்குதில்லையே

"ஒவ்வொரு மனிதனுக்கு ஒரு குணமுண்டு, அவனுக்கென்று தனியே ஒரு மனமுண்டு" இந்த கூற்று எவ்வளவுக்கு எவ்வளவு உண்மையோ, அவ்வளவிற்கு உண்மை இனத்திற்க்கான பண்பும் பரிவும்.

சாதி, மதம், நிறம் ஆகியவற்றிற்கு அப்பாற்ப்பட்டது இந்த இனம் என்னும் உணர்வு. இந்தியாவில் மட்டுமோ அல்லது தமிழ்நாட்டிலும், ஈழ்ப்பிரச்சனையில் மட்டுமோ இல்லை. உலகம் முழுதும் இனப் பற்று உண்டு என்பது மறுக்க இயலாத உண்மை.

வேறு எந்த நாட்டவரோ, எந்த மாநிலத்தவரோ அல்லது எந்த இனத்தவரோ தங்கள் இனத்தவரை காட்டிக் கொடுப்பதும் இல்லை, அவர்கள் செய்யும் தவறை மற்றவர்முன் ஒப்புக் கொள்வதும் இல்லை, தமிழனைத் தவிர.

இது ஒன்றுதான் எனக்கு புரியவில்லை, ஏன் நம்மவர் மட்டும் இப்படி? ஏன் நமக்கு மட்டும் இந்த எண்ணம்? எப்படி தோன்றுகிறது நம்மவர்க்கு என்று இதுநாள் வரையிலும் எனக்கு புரியவில்லை. இந்திய இதிகாசத்தையும், கூடுவிட்டு கூடுபாயும் கூற்றையும் கருவாய் கொண்டு படம் எடுத்த அமெரிக்கர் இந்திய இதிகாசங்களுக்கு நன்றி என்று படத்தில் போடவில்லை அதற்காக எந்த அமெரிக்கனும் கண்டனம் தெரிவிக்கவில்லை. ஆனால் நம்மவர் ஒருவர் ஆங்கிலப் படத்தை காப்பியடித்துவிட்டார் என்று நம்மவரே கண்டித்ததோடு மட்டுமல்லாமல் குறிப்பிட்ட பட நிறுவனத்திற்கு மின் அஞ்சல் அனுப்பி புகாரும் செய்துள்ளார்.

ஆங்கிலயேன் வந்து கொள்ளையடித்ததும் அவனது இனத்தை வளப்படுத்தவே, இன்று அமெரிக்க ஏகாதிபத்தியமும் அவனது இனத்திற்காகவே மேலை நாட்டு மோகத்தை ஏற்றுக் கொள்ளும் நாம், அவர்கள் பழக்க வழக்கங்களை பெரிதென்று மதித்து அவற்றை பழகிக்கொண்டு நமது பழக்கவழக்க வழக்கங்களையும், பண்பாட்டையும் வீணடிக்கும் நாம் இப்படி பட்ட இன உணர்வை மட்டும் அவர்களிடம் இருந்து உணர்வதில்லையே ஏன்?

உண்மையில் நாம் உணரவில்லையா? இல்லை என்னை இதுபோல் எழுதத் தூண்டியவர்கள் நம் இனத்தவர் இல்லையா?

போபால் விச வாயு பிரச்சனையில் பல உயிர்கள் போக காரணமாய் இருந்த "ஆண்டர்ச்சனை" அமெரிக்கா பத்திரமாக காப்பாற்றிக் கொண்டது இதுவரையில் அந்த வழக்கிற்கு ஒரு தீர்வுகாண இயலவில்லை, ஆனால் நம்மவர் மூவரை சரியான தீர்வு இல்லாமல் வழக்கை நடத்தி தூக்கு தண்டனை விதித்ததை எதிர்த்து நம் நாடு முழுவதும் போராட்டம் நடத்தி காப்பாற்ற முயன்றால் அதை நம் இனத்தவரே தவறு என்று பேசுகிறார்கள், இவர்கள் எல்லாம் சிந்திக்கவே மாட்டார்களா?

நான் இந்தியன் என்று சொல்லிக்கொள்ளும் இவர்கள் காவரியில் அணையை திறந்து தண்ணீர் கொண்டுவர முடியுமா? சரி அதாவது கர்நாடகாவில் இருக்கிறது அது மாநிலப் பிரச்சனை, ஒகேனைக்கள் குடிநீர் திட்டத்தையாவது நிறைவேற்ற முடியுமா, அது தமிழ்நாட்டில்தானே இருக்கிறது இல்லை அதுவும் வேறு மாநிலமா?

இதைவிட கொடுமை அமெரிக்க பெண்மணி ஒருவர் தமிழர் அழுக்கானவர்கள், சுத்தமிள்ளதவர்கள், அசிங்கமானவர்கள் என்று புகழ்மாலை சூட்டினாரே அதற்க்கு என்ன எதிர்ப்பு தெரிவித்தார்கள்?

முத்துக்குமரன், செங்கொடி போன்றவர்கள் உயிர்த்தியாகத்தை கேவலப் படுத்தும்படி பேசும் இவர்கள் உன்மைத் தமிழர்கள்தானா? ஆயிரம் ஆயிரம் மக்கள் உயிர் பயத்தில், தங்கள் குழந்தைகள், உடைமைகள், தொழில்கள் பதிக்கப் படுமே என்று பயந்து அமைதியான முறையில் அறவழிப்போரட்டம் நடத்தி தங்கள் வாழ்வாதாரத்தை காப்பற்றிக்கொள்ள முயல்வதை சுயநலம், அரசியல், அறியாமை என்று பேசி பதிவிட்டு தங்களது அறிவுத் திறமையையும், இந்தியன் என்ற உணர்வையும் வெளிப்படுத்துவதாய் எண்ணி செயல்படும் இவர்கள் எப்படி பட்டவர்கள் என்று நாம் சொல்வது.

இந்த ஒரு அணுமின் நிலையம் இல்லாவிட்டால் இந்தியாவே இருளில் மூழ்கிப் போய்விடும் என்பதுபோலவும், இதற்க்கான செலவு இந்திய பொருளாதாரத்தையே புரட்டி கீழே தள்ளிவிடும் என்ன்பதுபோலவும் நினைக்கும், சித்தரிக்க முயலும் வல்லுனர்களே, உங்களால் இதுவரை நடந்த ஊழல்களில் ஒன்றுக்காவது விடைகாண முடிந்ததா, முடிவுகட்ட முடிந்ததா இல்லை அந்தப் பணத்தை திரும்பப் பெற முடிந்ததா?

உண்மைதான் நம் வீடு, நம் பிள்ளைகள் என்று மட்டும் வாழ்க்கையில் இருப்பதுதான் புத்திசாலித்தனம் என்றும், ஒற்றுமை, இனம், நம்மவரை விட்டுக்கொடுக்காமை, போராட்டம், தன்மானம் என்று இருப்பவரெல்லாம் முட்டாள்கள் என்று நினைத்து நாம் குடியிருக்கும் நமது தெருவைப் பற்றிகூட கவலைப் படாமல் குப்பை கொட்டும், எச்சில் துப்பும் எண்ணம் உள்ளவர்களிடம் இன உணர்வை எதிர்ப் பார்ப்பது முட்டாள் தனம் தான்.

ஒவ்வொரு பொதுப் பிரச்சனைப் பற்றி பொது இடங்களில் பேசும் பொழுதும் உங்கள் எண்ணங்களை கூறும் உங்கள் வாழ்க்கையும் பொருளாதரத்தையும் சொந்த விடயங்களையும் வைத்து பேசக் கூடாது, அவர்கள் நிலைமையில் நின்று யோசித்துவிட்டு பிறகு பேச வேண்டும். நீதி, நியாயம் என்று சொல்வோருக்கு ஒரே பதில்தான், தமிழனுக்கு அடுத்தவனை பொறுத்தவரை மட்டும் அவற்றை எடுத்துக்கொள்வோம், தமிழனுக்கு தமிழனே பங்கம் விளைவிக்க எதற்கு இந்த நீதி நியாயம், அனைவரும் இதைத்தான் செய்கிறார்கள். தமிழன் இதனால்தான் தன்னைத்தானே அழித்துக் கொள்கிறான்.

புத்திசாலித்தனம் என்று நினைத்துக்கொண்டு நீங்கள் இருந்து நீங்கள் நினைப்பதுதான் சரி என்று பிறரிடம் திணிக்க முயல்வது உங்களை நீங்களே ஏமாற்றிக் கொல்வதுபோலகும். பிறகு அவர் அவர் வெளியில் கட்டிக்கொள்ளாமல் இனப்பற்றோடு செயல்பட நீங்களும் உங்கள் சந்ததியும் பாதிக்க கூடும்.

ஆங்கிலம் படித்துவிட்டு இங்கிலாந்தில் போய் நீங்கள் இருந்தாலும் உங்களை அவன் ஆகிலேயன் என்று ஒத்துக்கொள்ள மாட்டான். அதுதான் இனப் பற்று நினைவில் கொள்ளுங்கள்.

உங்களுக்கு உணர்வில்லை என்றாலும் பரவாயில்லை, ஒதுங்கி இருந்து பாருங்கள் உணர்வுள்ள நாங்கள் உங்களுக்காகவும் போராடுவோம். ஆனால் புத்திசாலிகள் என்று நினைத்துகொண்டு உணர்வோடு போராடுபவரை காயப்படுத்தாதீர்கள். ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு. தமிழன் என்று ஒரு இனமுண்டு, தனியே அவனுக்கு ஒரு குணமுண்டு.

தனித்திருப்போம் விழித்திருப்போம்.

0 comments:

Post a Comment

உங்கள் கருத்தை நான் அறிய