Saturday, September 24, 2011

திரு தொல்.திருமாவளவன் அவர்களுக்கு ஒரு கடிதம்

திரு தொல்.திருமாவளவன் அவர்களுக்கு,

நான் உலகில் தமிழினத் தலைவர் யாவரையும் மதிப்பவன் ஏனெனில் அது தமிழர் பண்பாடு. அது எனக்கும் உண்டு என்பதன் மூலம் நானும் தூய தமிழன் என்பதை நன்கு உணர்வீர்கள் என்று நம்புகிறேன்.

உங்களைப் பற்றியும் உங்கள் கட்சியை பற்றியும் மக்களிடம் உங்களுக்கு இருக்கும் செல்வாக்கை பற்றியும் நான் அறிவேன். உங்கள் உணர்வுபூர்வமான பேச்சுகளும், எழுத்துக்களும் என்னை மிகவும் கவர்ந்தவை. தமிழின மக்களுக்காவும், ஈழப் பிரச்சனைக்காகவும் தமிழரரின் தன்மானம் காக்கவும் நீங்கள் நடத்திய போராட்டங்கள் நான் மட்டும் அல்ல இந்த நாடே
அறியும் இதுபோல் பல பாராட்டு கடிதங்களும் மக்கள் வாழ்த்துக்களும் உங்களுக்கு புதிதல்ல என்பதும் எனக்கு தெரியும். இருப்பினும் எதற்காக இந்த கடிதம் என்றால்? ஒரே ஒரு வேண்டுகோள் விடுப்பதற்காக மட்டுமே.

தாழ்த்தப்பட்டவர்கள் என்று சொல்லப்படும் இனத்திலிருந்து முளைத்த பல விடிவெள்ளிகளில் இருக்கும் சிறந்த விடிவெள்ளியாகவும், தமிழ் பற்று மிக்க தலைவனாகவும், இனத்தின் விழிப்புணர்வுக்காக போராடும் சிறந்த சிந்தனையலராகவும் இருக்கும் உங்களிடம் ஒரு வேண்டுகோள்.

வெகு நாட்களாக என்மனதில் உருத்திக்கொண்டிருக்கும் ஒரு சிந்தனை இப்பொழுது உங்கள் மனதிலும் அனைத்து தமிழினத்தலைவர்கள் மனத்திலும் முளைவிடத் தொடங்கி இருக்கிறது.

தமிழனைப் பொறுத்தவரை தமிழுக்காகவும் தமிழர்க்காகவும் குரல் கொடுப்பவர் தமிழர் இல்லாவிடினும் அவரை தமிழராகவே கொள்வான், தமிழினத்திற்கு துரோகம் விளைவிப்பவர் பிறப்பால் ஒரு தமிழனாக இருந்தாலும் அவனை தமிழினம் ஒரு போதும் தமிழனகவே ஏற்றுக்கொள்ளாது என்பதை வலிமையாக நம்புபவன் நான், இதே நம்பிக்கை உங்களுக்கும் இருக்கும் என்று முழுமனதாய் நம்புகிறேன்.

எனது நம்பிக்கை பொய்காவிடில் உங்களிடம் நான் கேட்கும் ஒரு கேள்வி இவ்வளவு பெருமையுடைய உங்கள் கட்சி, உங்களுக்கு என்று ஒதுக்கப்பட்ட தனித்தொகுதியான காட்டுமன்னார்கோவிலில் தோல்வியை தழுவியது ஏன் என்று உங்களுக்குத் தெரியும் என்று நினைக்கிறன்?

நீங்க இப்பொழுது சொன்னதுபோல் அப்பொழுதே திமுகவும் அதிமுகவும் தமிழ் மக்கள் துரோகக் கட்சிகள் என்று சொல்லி விலகி இருந்தால் கண்டிப்பாக நீங்கள் போட்டியிட அனைத்து தொகுதிகளிலும் வெற்றி பெற்றிருக்கலாம். இப்பொழுதும் ஒன்றும் குறைந்துவிடவில்லை, உங்களுக்கு தமிழ்நாட்டு மக்களிடம் எப்பொழுதும் ஒரு நல்ல மதிப்பு இருக்கும் என்பதை யாரும் மறுத்துவிட முடியாது.

தமிழர்க்கு துரோகம் செய்த திமுகவிலும்சரி செய்துகொண்டிருக்கும் அதிமுகவிலும் சரி இப்பொழுது இருப்பவர்கள் யாரும் அந்த கட்சி ஆரம்பிக்க காரணமாக இருந்தவர்களோ இல்லை அந்த கொள்கைபிடிப்புள்ள, தமிழ் மக்களுக்காக தன் உயிரையும் கொடுக்கத் துணிந்த தலைவர்கள் இல்லை.

இப்பொழுது இருப்பவை வெறும் கூடுகள் மட்டும்தான். அவற்றை வைத்துக்கொண்டுதான் நாம் ஒவ்வொரு முறையும் மீண்டும் மீண்டும் முட்டாள் தனம் செய்கிறோம். தமிழ் தமிழ் என்று சொல்லி தமிழ்மக்களுக்கு துரோகம் செய்த திமுகவும்வேண்டாம், முக்குலத்தோர் கட்சி என்று பெயரளவில் சொல்லி ஏமாற்றிக் கொண்டு தமிழரிடம் சாதிப் பிளவை தூண்டிவிடும் பார்ப்பனஆதிக்க கட்சியான அதிமுகவும் வேண்டாம். தமிழகத்தில் புதிதாக ஒரு தமிழர் இயக்கம் வெளிப்பட வழி செய்யுங்கள். அனைத்து சாதிகளையும் ஒதுக்கி வைத்துவிட்டு சாதிக் கட்சிகளை முன்னிறுத்தாமல் பொதுவாக தமிழ் மக்கள் இயக்கம் என்று எந்த ஒரு வேறுபடும் இல்லாமல் தமிழர் தமிழருக்காக என்று முதலில் மாற்றுங்கள்.

இத்துனை சாதிக் கட்சிகள் இருக்கும்போது இதை உங்களிடம் ஏன் சொல்கிறேன் என நினைக்குரீர்களா? அதற்கு காரணம் உங்களுக்கு மக்களிடம் இருக்கும் செல்வாக்குத்தான். திரு வைகோ அவர்களும் திரு ராமதாஸ் அவர்களும் ஏர்க்கனவே அந்த முடிவுக்கு வந்துவிட்டார்கள். இப்பொழுது நீங்களும் இதே முடிவுக்கு வந்துவிட்டதால் அனைவரும் ஒன்றாய் இணைந்து ஒருமயமாய் இயக்கம் ஒன்றை உருவாக்கி. சாதி மத வேறுபாடில்லாமல் தமிழர் என்ற ஒரே நோக்கத்தோடு தமிழரும் அவர் வாழ்வும் தன்மானத்தோடு தலை சிறக்க வழிவகை செய்யுங்கள். பார்ப்பனர் ஆதிக்கமும், தமிழின துரோகிகளும் இனி தலையெடுக்கா வண்ணம் தமிழகத்தை தழைத்தோங்க செய்யுங்கள்.

இப்படிக்கு

தமிழரின் வாழ்வு மங்காவாழ்வாய் இருக்க சங்காய் முழங்கும் தமிழன்

0 comments:

Post a Comment

உங்கள் கருத்தை நான் அறிய