ஒரு இருபது வருஷத்துக்கு முன்னாடி கருணாநிதி தப்பு பண்ணாருன்னு இந்த அம்மாவை உக்கார வச்சு, அவர புத்திசாலித்தனமா தண்டிச்சுட்டதா நெனச்சோம், அப்புறம் அந்த அம்மா தப்பு பண்ண அடுத்த அஞ்சு வருஷம் கழிச்சு (கந்தலான அப்புறம் தான்) கருணாநிதிய உக்கார வச்சு பெரும பட்டுகிட்டோம். அடுத்த அஞ்சுவருசம் (ரொம்ப இல்ல) கழிச்சு மறுபடியும் அந்த அம்மா அடுத்து அஞ்சு வருஷம், அப்புறம் மறுபடியும் அவரு, இப்போ மறுபடியும் அம்மா அடுத்த அஞ்சு வருஷம்... (என்னால முடியல...)
இத நாம நம்மோட புத்திசாலிதனம்னும், தப்புபன்னவங்கள தண்டிச்சுட்டதாவும் சொல்றோம், நினைக்கிறோம். உண்மையிலேயே இங்க யாரு புத்திசாலி, யாரு முட்டாளு? (அது தெரிஞ்சாதான் நம்ப நாடு எப்பவோ முன்னேறி இருக்குமே!)
இல்ல நான் தெரியாமத்தான் கேட்கிறேன் அவரு கொள்ளையடிச்சாரு, இந்த அம்மா விலை ஏத்திட்டாங்கன்னு கூப்பாடு போடுறோமே, நமக்கு என்ன அருகதை இருக்கு அதை கேட்க?
இலவசம் கொடுத்துட்டு இப்போ விலைய ஏத்திட்டாங்கன்னு சொன்னா உங்கள யாரு இலவசங்கள வாங்க சொன்னது? டிவி, மிக்சி, மாடு, சைக்கிளு, லேப்ட்டாப்புன்னு வாங்கும்போது வலிக்காம வாங்குனோமே இப்போ இந்த விலைவாசியவும் இலவசமா குடுத்துருக்காங்க அதே சந்தோசத்தோட வாங்கிக்க வேண்டித்தானே.
தேர்தல் பிரச்சாரத்தின் போதே என் வலையில் "யாரு அதிக இலவசம் தராங்க..." என்று பதிவிட்டிருந்தேன், அதில் இருப்பவை உண்மைதானே, பிறகு நமக்கு ஏது அருகதை, அரசியல் வாதிகளையும், அரசாங்கத்தையும் குறைசொல்ல?
நம்மில் எத்தனை பேர் உண்மையாக இருக்கிறோம்? கருப்புப்பணம் பதுக்காமல் முறையாய் வரி செலுத்துகிறோம், வாங்கும் நிலத்திற்கு உண்மையான மதிப்பில் பத்திரம் பதிவு செய்கிறோம், கோடி... கோடியாய் இருந்தால்தான் கருப்பு பணமா?
நமது வீட்டில் வந்து மீட்டர் அளவை பார்க்காமல் போனமாதம் கட்டிய தொகையை மின்சார வாரியம் வசூளித்தபோது எத்தனை பேர் நாம் உண்மையான தொகையை கட்டினோம். நம்மில் எத்தனை பேர் லஞ்சம் வாங்காமல், கொடுக்காமல் இருக்கிறோம்?
இதையெல்லாம் விட்டுவிட்டு அரசியல் வாதிகளையும் அரசாங்க அதிகாரிகளையும் குறை சொல்லிக் கொண்டே இருக்கிறோம் (சிக்கி விட்டான் சீதகாதி...).
இந்த அரசியல்வாதிகளும், அரசாங்க அதிகாரிகளும் வானத்திலிருந்து குதித்தவர்கள் இல்லை, அவர்களும் இந்த மக்களில் இருந்து வந்தவர்கள்தான், நீங்களும் நானும்தான் அது. அடுத்தவன் காசு ஐந்துருபாய் உழைக்காமல் கிடக்கும் என்றால் நாக்கை தொங்கப் போட்டுக் கொண்டு ஓடுகிறோம் நம்மிடம் கோடிக்கணக்கில் சிக்கினால் விடுவோமா என்ன? அவன் தான் அரசியல்வாதி, நமக்கு என்றால் முக்கியம் அடுத்தவனுக்கு என்றால் அலச்சியம் என்று இருக்கும் நாம் தான் அந்த அரசாங்க அரசாங்க அதிகாரி.
அவரவர் கடமையை நாம் ஒழுங்காக செய்வதில்லை, உலகத்தில் எங்காவது இந்தியனை அசிங்கப் படுத்தினால், அவனை யார் அங்கு போகசொன்னது? என்று கேட்கிறோம், இந்தியாவில் தமிழனை அசிங்கப் படுத்தினால் நாம் இந்தியன் என்கிறோம்? சென்னையில் பிரச்சனை என்றால் நான் கன்னியாகுமரி எனக்கென்ன? என்கிறோம் கன்னியாகுமரியில் பிரச்சனை என்றால் நான் சென்னை அதனால் எனக்கென்ன? என்று சொல்கிறோம். இன்னும் பக்கத்துக்கு ஊர், பக்கத்து தெரு, பக்கத்துவீடு அதனால் எனக்கென்ன? எனக்கென்ன? (அஜித் போல...) என்று சொல்லிக்கொண்டே போனால் உங்களுக்கு என்று யார் வருவார்கள்? ஒற்றுமை என்றால் கிலோ என்ன விலை என்று கேட்கும் அளவிற்கு வாழ்கிறோம் பிறகு நமக்கென தகுதி இருக்கிறது?
எவனாவது சாகட்டும் நான் வாழ்ந்தால் போதும் என்று நினைத்தால், நம்மை சாகவிட்டு அவன் வாழ நினைக்க மாட்டனா? சுயநலமாய் வாழ்ந்து வாழ்ந்து என்னத்தைதான் சாதித்தோம் என்றுதான் தெரியவில்லை? நம்நாடு தானே அதை சுத்தமாக வைத்திருப்போம் என்று நினைப்பதில்லை? பிறகு அவன் எப்படி நினைப்பான் நம் மக்கள் பணம்தானே திருடாமல் இருப்போம் என்று?
ஒவ்வொரு வினைக்கும் எதிர்வினை உண்டு என்பது இதுதான், ஜனநாயகம், சுதந்திர வாழ்க்கை என்பது இந்த விதியில் தான் இயங்குகிறது.
இந்த ஜனநாயம், மக்களாட்சி என்பதெல்லாம் முன்னே போனால் கடிக்கும், பின்னே போனால் உதைக்கும். இல்லையென்றால் அதன் கூடவே சமமாய் செல்லவேண்டும் அப்போதுதான் சுகமாய் சவாரி செய்யலாம்.
படங்கள் அனைத்தும் கூகிள் உதவி: நன்றி
0 comments:
Post a Comment
உங்கள் கருத்தை நான் அறிய