Monday, July 11, 2011

தவிர்க்க நினைக்கும் கணங்கள்....

கணப்பொழுதில் கவர்ந்துவிட்ட இனமொன்று

சலனம் காட்டி சட்டென்று கடந்து சென்றுவிட

பதிந்துவிட்டது பசுமரத்து ஆணியைப்போல்
பற்றிக்கொண்டது பகீரென்று பரவசம்

எங்கிருந்தோ எரிபொருளை ஏற்றிவந்து
தெளித்துவிட்டு போனது வளைவின் நினைவுகள்

ஆனந்தம் கொடுத்தாலும் அனலாய் வீசியது
சுவாலை சுட்டெரித்தது, கனலாய் கழிந்தது கணங்கள்

நினைவுகளை திருப்பமுயன்றும் கலைக்க முயன்றும்
தொட்டுவிட்டது தோல்வியைத்தான் தவிர
வேறொன்றும் இல்லை

ஆட்டிவைத்ததை அணைக்கத்தான் முடியவில்லை
அடக்கவாவது முடிவு செய்து முயன்று

இயற்கையின் கீறல் வழி தெளித்துவைத்து
தணிக்க முயன்று தணித்ததாய் தோன்றினாலும்

எப்பொழுது வேண்டுமானாலும் பற்றிக்கொள்ளும்
பக்குவத்தோடு பயமுறுத்தி வருகிறது

தவிர்க்க நினைக்கும் கணங்கள்

கருப்பு

" எலேய்... எங்கெடா கருப்ப பத்தி தெரியும்ல.....எங்கெடா ஒரு எகுரு எகுருன்னா... உங்கெடாக்கு கொட சரிச்சுரும்டா...." கழண்டு வரும் கால்சட்டையை பிடித்துக்கொண்டும், சரிந்து விழும் பள்ளிக்கூடப்பையை சரிசெய்தவாறு கூறினான் முத்துராசு

"ஆமா.... இவுரு கெடா... பெரிய்ய..... கருப்பசாமி குதுர..... போனவாரம் எங்கைய்யா சந்தைலேர்ந்து வாங்கியாந்த கெடாவ பாத்தேன்னு....... வைய்யி ..... உன்கெடா காணாம போயிரும்டா... அரிசிமூட்ட " என்று அவனை உசுப்பேத்தினான் மாடசாமி.

"ஏலேய்......... கருக்காபல்லா அபடீன்னா உங்கெடாய்க்கும் எங்கெடாய்கும் சோடி போட்டுக்குவோம் தம்பியாரே.... உங்கெடா செயிச்சா பத்து சிலேட்டு குச்சி, கைப்புடி கொடுக்காபுளி, கார்ருவாய்க்கு நாவபழம் தாரேன் அதே எங்கெடா எங்கெடா செயிச்சா... நீ தாரியா?" என்று வீராவேசமாய் கேட்டான் முத்துராசு

"நாளைக்கு சாயங்காலம் மரக்காயர் களத்துல சோடி போடலாம் தம்பியரே நீ உங்கிடாய கூடியா நானும் எங்கிடாய கொண்டாரேன்" என்றவன்

யோசித்தவாறே "பத்து சிலேட்டு குச்சி, கொடுக்காபுளி சரி, ஆனா நவபழம் கார்ருவைக்கு முடியாது தம்பியாரே... வேண்னா... பத்துகசுக்கு வாக்கித்தாரேன்" என்றான் மாடசாமி குரலை தாழ்த்தியவாரே.

"சரி நாளைக்கு சாயங்காலம் மரக்காயர் களத்துல சோடி போட்டுகாலாம். பந்தயம் ஒப்புத்துகிரேன்னு
கருப்பசாமி மேல சத்தியம் பண்ணு " என்று இருவரும் சத்யம் செய்து உள்ளங்கையில் கிள்ளிக்கொண்டு வீடு திரும்ப.

வாசலில் தண்ணீர் தெளித்துக் கொண்டிருந்த முத்துராசு அம்மா "ஏய்யா?..... ராசா....... முத்துராசு.... பள்ளிக்கூடத்லேருந்து வர இம்புட்டு நேரமா ராசா? ஆத்தா காப்பித்தண்ணி கலந்து வச்சிருக்கேன் எடுத்துக்குடி... ஐயா இப்ப வந்துருவாக.." என்ற அவள் வார்த்தைகளை காதில் வாங்காமல் வீட்டுக்குள் ஓடிய முத்துராசு திண்ணையில் பையை வீசி எறிந்துவிட்டு கொள்ளபுரம் நோக்கி ஓடினான்.

அங்கு கட்டப்பட்டு கம்பீரமாய் நின்றது அவனது கிடா கருப்பு. அதுவும் இவனை கண்டவுடன் கட்டப்பட்டிருந்த மரத்தை சுத்தி சுத்தி வந்தது, வலுக்கட்டாயமாக இழுத்து கட்டினை அவிழ்க்க முற்ப்பட, அதற்குள் முத்துராசு ஓடி கருப்பை அனைத்துக் கொண்டான்.

மெல்ல கருப்பின் கொம்புகளையும், கால் கொளும்புகளையும் மெல்ல வருடினான், தன் மடியில் கருப்பை படுக்க வைத்து தடவிக் கொடுத்துகொண்டே "எலேய் கருப்பு... நாளைக்கு அந்த கருக்காபல்லனோட கெடாய ஒரே முட்ட முட்டி தள்ளிபுடு என்ன? கொண்டுபுடாத பாவம்" என்றான்.

"ராமதேவநல்லூர்ல கெடா வெட்டாம் எல்லாக் கெடாயையும் வாங்கிட்டு போயிட்டானுக ஊர்ல கெடாவே கெடைக்கலியாம் நம்ப கருப்ப கூட நல்ல வேலைக்கு கேட்டானுக நாந்தேன் முடியாதுன்னுடேன் " என்று மனைவியிடம் பேசியவாறாய் உள்ளே நுழைந்தார் முத்துராசுவின் அப்பா.

அப்பாவை பார்த்தவுடம் "ஐய்....கருப்பு......... ஐயா.... வத்துட்டாக" என்று எழுந்து ஓடிச்சென்று அப்பாவை கட்டிகொண்டான் முத்துராசு. அவர் தனது சட்டைப் பையில் வைத்திருந்த பொட்டலம் ஒன்றை எடுத்து முத்துராசுவிடம் கொடுக்க "ஐய்.... குருவிரொட்டி" என்று ஆசையோடு வாங்கி ஓடிசென்று அதை பிரித்து எண்ணத்தொடங்கினான்.

இரவு முத்துராசுவுக்கு திடீரெண்டு காய்ச்சல் வந்தது, அவனால் எழுந்திருக்க முடியவில்லை "ஆத்தா .....ஆத்தா ........." என்று முனகிகொண்டே இருந்தான். காய்ச்சல் அணலாய் வீச முகத்தில் வலதுபக்க கன்னம் வீங்கிக்கொண்டே வந்தது.

"இது பொன்னுக்கு வீங்கி தாயி, ஒன்னும் பயப்படாத நல்ல இள ஆட்டுக்கறியா இருந்தா சொவரொட்டிய சுட்டுக்கொடு, கொழுப்பையும், காலையும் போட்டு சூப்பு வச்சுக் குடு ஆத்தா பொன்னுக்கு வீங்கி காணாமப் போயிடும்" என்று வைத்தியம் சொன்னாள் வெள்ளசீலகிழவி.

"ஐயா..... முத்துராசு....... எழுந்திரு..... செல்லம்" என்று அவனை எழுப்பி "இந்தா ...ராசா.... இந்த சூப்பகுடி ஒடம்பி சரியாயிரும் கண்ணு" என்று அம்மா தந்த சூப்பு டம்ப்ளரூடு வந்து கொள்ளபுற அறிகாப்படியில் அமர்ந்தான்.

இப்போது கருப்பு கட்டப்பட்டிருந்த மரத்தில் வெறும் கயிறு மட்டும் கட்டியிருப்பதை கண்டான். கையில் இருக்கும் அந்த டம்ப்ளரையும் அனாதையாய் கிடந்த கயிறையும் மாறி மாறிப் பார்த்தான். துக்கம் தொனடியடைக்க தூக்கி வீசினான் டம்ப்ளரை. அழுகையும் ஆத்திரமும் பொத்துக்கொண்டு வர கண்ணீர் வெடித்துச் சிதறியது அவனுக்கு. கருப்பு................என்று கதறினான்.

மரண அவஸ்த்தை....

சமபந்தியாய் சமர்ப்பணம்
ஒரே நாளில் பலருக்கு
ஒரே பந்தியில்
அதே இலையில்
மீண்டும் மீண்டும்

பக்குவமில்லா பரிமாற்றங்கள்
ஈடுபாடில்லாத
கற்பனை கதகளி
அரங்கேறியது அமைதியாய்
பல ஊமை நாடகம்

வெறி ஒருபுறம்
வெறுமை ஒருபுறம்
புனிதம் மட்டும்
வாசல்புறமே

கலைந்தது சடுதியில்
அவிழ்ந்ததை மறந்து
தொலைந்தது கலாச்சாரம்
கண்ணியம் காற்றோடு

கருணையில்லை
கண்ணீரில்லை
வலியிருந்தபோதும்
வராத வருத்தம்

கைநீட்டி
காசு வாங்கும்
போதும் மட்டும்

மரண அவஸ்த்தை

நிலாச்சோறு

பார்வை
தொட்டுவிடும்
தூரத்தில்தான்

ஆனால்
எட்டிப்பிடிக்க
முயன்று
ஏமாற்றம்
மட்டும் ஏனோ?

தொட முயன்ற
தருணமெல்லாம்
தேய்பிறையாகி
காணாமல் போக

விலகும்போது
வளர்பிறையாகி
கண்களுக்கு மட்டும்
முழுநிலவாய்

அழகிய அம்புலியை
அடைந்துவிட
அழுது புரண்டாலும்
கனவில் மட்டுமே
கைக்கெட்டும்
நினைவில் அன்று

என்றுணர்ந்து
தேற்றிக் கொண்டாலும்

இன்றுவரை எனக்கு காதல்
ஒரு நிலாச்சோறு மட்டுமே

யாரு அதிக இலவசம் தராங்க.....

யாரு அதிக இலவசம் தராங்களோ அந்தக் கட்சி ஜெயிக்குது ஏன்?

இலவசம் தரதுன்னால மக்கள் வாங்குதா? இல்ல மக்கள் வாங்கர்துனால அவங்க தராங்களா?. பொருள் வங்குரவன் விரும்பி வாங்குனாதான கடைக்கார விப்பான். யாரும் வாங்காம இருந்தா? கடைய மூடிட்டு போய்டுவான் இல்லியா?

இப்போ தப்பு யார்கிட்ட இருக்கு? அரசியல் வாதி கிட்டயா? இல்ல மக்கள் கிட்டயா?

நாம உண்மையா சிந்திக்கிறதா இருந்தா யார மாத்தணும்? யாரா குறைசொல்லனும்? அவன் குடுக்குறான், அவன் கெடுக்குரான்னு சொல்லி சொல்லி எல்லாத்தையும் வாங்கிட்டு. எதாவது ஒரு கட்ச்சிக்கு ஓட்ட போட்டுட்டு வேலைபாக்க போய்டறது.

என்ன அரசியல் நடக்குது இங்க? ஒன்னும் மட்டும் நல்ல தெருஞ்சுக்குங்க எதுவுமே இலவசம் இல்ல. நீங்க வாங்குற ஒவ்வொரு பொருளுக்கும், எப்டியாவது ஒரு வழியில நீங்க பணம் குடுத்துதான் ஆகணும்.

அடுத்தது விலை வாசி- பெட்ரோல் வில 50 - 60 ரூபாய்க்கு உயர்ந்துட்டா, உடனே எல்லா பொருளோட விளையும் ஏறும் சரி, வில கொறஞ்சா எத்தனப் பேரூ விளைய குறைக்கிறாங்க சொல்லுங்க?. இதுக்கும் அரசியல்வாதி காரணமா? மக்களோட பேராசக் காரணமா? இல்ல ஒரு பொருளை பதுக்கல் பண்ணி விலையேற்றம் ஆகவைத்து பிறகு சந்தைக்கு அதிக விலைக்கு கொண்டு வாராங்களே, அதுவும் அரசியல் வாதியா?

நீங்க வேண்டாம்னு சொன்னா யாரும் உங்கள மிரட்டப்போவதில்லை? மிரட்டவும் முடியாது?

அது என்ன? எல்லாரும் கலைங்கர மட்டும் குறை சொல்றீங்க, போன தேர்தல்ல யாருதான் அறிவிக்கல. எப்படியும் எல்லாரும் அறிவிக்கப் போறாங்க, அதுல யாராவது கண்டிப்பா வரப்போறாங்க, இதுல என்ன ஒருத்தர மட்டும் எல்லாரும் குறை சொல்றது. என்னமோ இப்போ கலைங்கரத் தவிர மத்தவங்க எல்லாம் காமராஜர் மாதிரி?

நான் கலைங்கருக்கு சப்போர்ட் பண்றதா யாரும் நினைக்க வேண்டாம், இதுவே MGR கொடுத்தப்ப பொன்மனச் செம்மல் அப்படீன்னு சொன்னது ஏன்? எனக்கு புரியல?

இன்னொன்னு நல்ல தெரிஞ்சுக்குங்க எல்லாரும் பேசும்போது, அவங்களையும் அவங்க பொருளாதரத்தையும் மனசுல வச்சு மட்டும் பேசக் கூடாது. இன்னமும் ஒரு கிலோ ஒரு ரூபாய் அரிசிய நாம்பி நெறைய குடும்பங்கள் இருக்கு, காப்பீட்டுத் திட்டத்த வச்சு ஒருவேள மாத்திர வாங்க வழியில்லாதவன் எத்தனையோ மக்கள் நல்ல குனமடைஞ்சு இருக்காங்க. அறிவிச் அல்லது நிறைவேத்துன திட்டம் பத்துல நாலு தப்பா அத புறந்தள்ளுங்க, ஆறு சரியா? அதப் பாராட்டுங்க? எல்லாமே தப்பா? ஆட்ச்சிய மாத்தி ஓட்டுப் போடுங்க.

எல்லாரும் அவங்க நெனைக்கிற கட்சி ஜெயிக்கனும், அவங்க நெனைக்கிற தலைமை இருக்கணும். இதுதான் அவுங்க அவுங்க ஆசை.