Monday, July 11, 2011

கருப்பு

" எலேய்... எங்கெடா கருப்ப பத்தி தெரியும்ல.....எங்கெடா ஒரு எகுரு எகுருன்னா... உங்கெடாக்கு கொட சரிச்சுரும்டா...." கழண்டு வரும் கால்சட்டையை பிடித்துக்கொண்டும், சரிந்து விழும் பள்ளிக்கூடப்பையை சரிசெய்தவாறு கூறினான் முத்துராசு

"ஆமா.... இவுரு கெடா... பெரிய்ய..... கருப்பசாமி குதுர..... போனவாரம் எங்கைய்யா சந்தைலேர்ந்து வாங்கியாந்த கெடாவ பாத்தேன்னு....... வைய்யி ..... உன்கெடா காணாம போயிரும்டா... அரிசிமூட்ட " என்று அவனை உசுப்பேத்தினான் மாடசாமி.

"ஏலேய்......... கருக்காபல்லா அபடீன்னா உங்கெடாய்க்கும் எங்கெடாய்கும் சோடி போட்டுக்குவோம் தம்பியாரே.... உங்கெடா செயிச்சா பத்து சிலேட்டு குச்சி, கைப்புடி கொடுக்காபுளி, கார்ருவாய்க்கு நாவபழம் தாரேன் அதே எங்கெடா எங்கெடா செயிச்சா... நீ தாரியா?" என்று வீராவேசமாய் கேட்டான் முத்துராசு

"நாளைக்கு சாயங்காலம் மரக்காயர் களத்துல சோடி போடலாம் தம்பியரே நீ உங்கிடாய கூடியா நானும் எங்கிடாய கொண்டாரேன்" என்றவன்

யோசித்தவாறே "பத்து சிலேட்டு குச்சி, கொடுக்காபுளி சரி, ஆனா நவபழம் கார்ருவைக்கு முடியாது தம்பியாரே... வேண்னா... பத்துகசுக்கு வாக்கித்தாரேன்" என்றான் மாடசாமி குரலை தாழ்த்தியவாரே.

"சரி நாளைக்கு சாயங்காலம் மரக்காயர் களத்துல சோடி போட்டுகாலாம். பந்தயம் ஒப்புத்துகிரேன்னு
கருப்பசாமி மேல சத்தியம் பண்ணு " என்று இருவரும் சத்யம் செய்து உள்ளங்கையில் கிள்ளிக்கொண்டு வீடு திரும்ப.

வாசலில் தண்ணீர் தெளித்துக் கொண்டிருந்த முத்துராசு அம்மா "ஏய்யா?..... ராசா....... முத்துராசு.... பள்ளிக்கூடத்லேருந்து வர இம்புட்டு நேரமா ராசா? ஆத்தா காப்பித்தண்ணி கலந்து வச்சிருக்கேன் எடுத்துக்குடி... ஐயா இப்ப வந்துருவாக.." என்ற அவள் வார்த்தைகளை காதில் வாங்காமல் வீட்டுக்குள் ஓடிய முத்துராசு திண்ணையில் பையை வீசி எறிந்துவிட்டு கொள்ளபுரம் நோக்கி ஓடினான்.

அங்கு கட்டப்பட்டு கம்பீரமாய் நின்றது அவனது கிடா கருப்பு. அதுவும் இவனை கண்டவுடன் கட்டப்பட்டிருந்த மரத்தை சுத்தி சுத்தி வந்தது, வலுக்கட்டாயமாக இழுத்து கட்டினை அவிழ்க்க முற்ப்பட, அதற்குள் முத்துராசு ஓடி கருப்பை அனைத்துக் கொண்டான்.

மெல்ல கருப்பின் கொம்புகளையும், கால் கொளும்புகளையும் மெல்ல வருடினான், தன் மடியில் கருப்பை படுக்க வைத்து தடவிக் கொடுத்துகொண்டே "எலேய் கருப்பு... நாளைக்கு அந்த கருக்காபல்லனோட கெடாய ஒரே முட்ட முட்டி தள்ளிபுடு என்ன? கொண்டுபுடாத பாவம்" என்றான்.

"ராமதேவநல்லூர்ல கெடா வெட்டாம் எல்லாக் கெடாயையும் வாங்கிட்டு போயிட்டானுக ஊர்ல கெடாவே கெடைக்கலியாம் நம்ப கருப்ப கூட நல்ல வேலைக்கு கேட்டானுக நாந்தேன் முடியாதுன்னுடேன் " என்று மனைவியிடம் பேசியவாறாய் உள்ளே நுழைந்தார் முத்துராசுவின் அப்பா.

அப்பாவை பார்த்தவுடம் "ஐய்....கருப்பு......... ஐயா.... வத்துட்டாக" என்று எழுந்து ஓடிச்சென்று அப்பாவை கட்டிகொண்டான் முத்துராசு. அவர் தனது சட்டைப் பையில் வைத்திருந்த பொட்டலம் ஒன்றை எடுத்து முத்துராசுவிடம் கொடுக்க "ஐய்.... குருவிரொட்டி" என்று ஆசையோடு வாங்கி ஓடிசென்று அதை பிரித்து எண்ணத்தொடங்கினான்.

இரவு முத்துராசுவுக்கு திடீரெண்டு காய்ச்சல் வந்தது, அவனால் எழுந்திருக்க முடியவில்லை "ஆத்தா .....ஆத்தா ........." என்று முனகிகொண்டே இருந்தான். காய்ச்சல் அணலாய் வீச முகத்தில் வலதுபக்க கன்னம் வீங்கிக்கொண்டே வந்தது.

"இது பொன்னுக்கு வீங்கி தாயி, ஒன்னும் பயப்படாத நல்ல இள ஆட்டுக்கறியா இருந்தா சொவரொட்டிய சுட்டுக்கொடு, கொழுப்பையும், காலையும் போட்டு சூப்பு வச்சுக் குடு ஆத்தா பொன்னுக்கு வீங்கி காணாமப் போயிடும்" என்று வைத்தியம் சொன்னாள் வெள்ளசீலகிழவி.

"ஐயா..... முத்துராசு....... எழுந்திரு..... செல்லம்" என்று அவனை எழுப்பி "இந்தா ...ராசா.... இந்த சூப்பகுடி ஒடம்பி சரியாயிரும் கண்ணு" என்று அம்மா தந்த சூப்பு டம்ப்ளரூடு வந்து கொள்ளபுற அறிகாப்படியில் அமர்ந்தான்.

இப்போது கருப்பு கட்டப்பட்டிருந்த மரத்தில் வெறும் கயிறு மட்டும் கட்டியிருப்பதை கண்டான். கையில் இருக்கும் அந்த டம்ப்ளரையும் அனாதையாய் கிடந்த கயிறையும் மாறி மாறிப் பார்த்தான். துக்கம் தொனடியடைக்க தூக்கி வீசினான் டம்ப்ளரை. அழுகையும் ஆத்திரமும் பொத்துக்கொண்டு வர கண்ணீர் வெடித்துச் சிதறியது அவனுக்கு. கருப்பு................என்று கதறினான்.

0 comments:

Post a Comment

உங்கள் கருத்தை நான் அறிய