Saturday, February 19, 2011

விடுதலை வேட்கை…..

சாலையெங்கும் மக்கள் வெள்ளம், ஆங்காங்கே சிறு சிறு சலசலப்பு, சில ஆரவாரம். சிறைச்சாலை வாயிலில் இருந்து அரண்மனை வாசல் வரை கடலென திரண்டிருந்த மக்கள் கூட்டத்தின் மத்தியில் ஊர்ந்துச் சென்றது ஒரு மாட்டுவண்டி அனைவரது கண்களும் அவன்மேல்.

வண்டியின் மத்தியில் நடப்பட்டக் கம்பத்தில் கட்டப்பட்ட நிலையில் ஓர் இளைஞன், தினவெடுத்த தோள்கள், அகன்ற மார்பு, அழகிய முகம், முறுக்கிய மீசை, உடலெங்கும் காயத்தழும்புகள் அவன் வீரத்தைப் பறைசாற்ற, கோபத்தால் சிவந்த கண்களின் வெறித்தப்பர்வை மட்டும் அரண்மனையை நோக்கியபடியே.

விசாரணை மன்றம் முழுதும் மக்கள் கூட்டம் நிரம்பி வழிந்தது, அரசன் பலபீமனும், முதல் மந்திரியாரும் ஆலோசனையில் இருக்க, பிற மந்திரிகளும் மக்களும் தங்களுக்குள் பேசிக் கொண்டதால் மன்றமெங்கும் இளமாறன், இளமாறன் என்ற சலசலப்பு நிறைந்தே இருந்தது.

“இழுத்துவரச் சொல்லுங்கள் இளமாறனை”

என்ற முதல் மந்திரியரின் குரல் அனைவரது பேச்சிக்கும் முற்றுப்புள்ளி வைக்க எங்கும் அமைதி.

இழுத்துவரப்பட்டான் இளமாறன், அவன்தான் முன்பு கம்பத்துடன் கட்டப்பட்டு, வீதி ஊர்வலம் கொணரப் பட்டவன், இதோ இங்கே இரும்புச் சங்கிலியால் கைகள் பிணைக்கப்பட்டு இழுத்து வரப்படுபவனும் அவன்தான், அதே இளமாறன் தான்.

நிசப்த்தம், எங்கும் நிசப்த்தம் அனைவரது முகமும் ஒரே நிலையில், அனைவரது பார்வையும் அவன்மீதே,

“மன்னருக்கு மரியாதையை செய்”

என்ற மந்திரியின் குரல் இம்முறை அமைதியைக் குலைத்தது
இதழோரம் ஓர் அலட்சியப் புன்னகையை உதிரவிட்டான் இளமாறன்.

அதைக் கண்டும் காணாதது போல் பேசினான் மன்னன் பலபீமன்

"நீ ஏன் இப்படி இங்கு நிறுத்தப்பட்டுல்லாய், தெரியுமா உனக்கு?"

"அதைத் தாங்களே சொல்லிவிடலாமே!" என்றான் இளமாறன்

“கலகம் செய்தாய், அரசுக்கு எதிராக மக்களை தூண்டினாய், புரட்சி செய்ய முயன்றாய்”

என்று இளமாறன் மீது குற்றங்களை அடிக்கினார் முதல் மந்திரி

“என்ன கலகம் செய்தேன்?”

“வரி கொடுக்க முடியாது என்றாய்”

“எம்மினத்தவர் மட்டும் மும்மடங்கு வரி கொடுக்க இயலாது என்றேன்”

"உங்கள் மொழியை மட்டும் ஆட்சி மொழியாக அறிவிக்கச் சொன்னாய்"

"எங்கள் மொழியையும் அறிவிக்கச் சொன்னேன், எங்கள் மொழியை மட்டுமல்ல"

"மன்னருக்கு எதிராக மக்களைத் தூண்டினாய்"

"மக்களைத் தூண்டவில்லை, முறையிட்டேன். மக்களுக்காகத்தான் மன்னன் அந்த மன்னனே உதாசீனப் படுத்தும் பொழுது, மக்களிடம்தான் செல்ல முடியும், அவர்களிடம்தான் முறையிட முடியும்"

"நீ என்ன காரணங்கள் கூறினாலும் சரி உனக்கு தண்டனை உறுதி"

“மரணத்தைப் பற்றி கவலை கொள்ளவில்லை நான், என் கவலையெல்லாம், இந்த நாட்டைப் பற்றித்தான், நட்டுமக்களைப் பற்றித்தான், கேள்விக் குறியாய் இருக்கும் அவர்கள் எதிர்காலம் பற்றித்தான். இனி என்ன? நான் இப்பொழதும் கேட்கிறேன்? கூடியிருக்கும் மக்களே, சகோதரர்களே, நாம் அனைவரும் ஒன்றுதான் மொழியால் இனத்தால் வேருபட்டபோதும் நாமும் மக்கள்தான், உழைக்கும் மக்களின் வர்க்கம் ஒன்றுதான், உழைப்பை உறிஞ்சும்போது வரும் வலி ஒன்றுதான். இப்பொழுது கூறுங்கள் நான் கேட்பது தவறா?, உரிமைகள் மறுக்கப்படுவது அடுக்குமா?, மக்களை அடிமைப் படுத்துவது முறையா? இனத்தை அழிக்க நினைப்பது செயலா? நீங்கள் கூறுங்கள், தீர்ப்பை நீங்களே கூறுங்கள், இப்பொழுதே கூறுங்கள், மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பென்று எண்ணி உயிர்த்துரக்கிறேன் நான்"

"வேண்டாம் வேண்டாம்" என்றது சில குரல்

"இளமாறனை விடுதலை செய்"

"இளமாறன் கோரிக்கைகளை நிறைவேற்று"

"இளமாறனை விடுதலை செய்,
இளமாறனை விடுதலை செய்,
இளமாறனை விடுதலை செய்,....................."
"விடுதலை, விடுதலை........................ "

எங்கும் எழுந்த அந்த ஒலி மன்றம் முழுதும் ஒலித்தது, அரண்மனை முழுதும் ஒலித்தது

இந்த ஒலிகளின் நடுவே, திடீர் என்று கதவுகள் திறக்கப்படும் சப்தம் கேட்க்கவே திடுக்கிட்டு விழித்தான் இளமாறன்.

கருங்கல் உத்திரம், குறைந்த வெளிச்சம் நான் இன்னும் சிறைச்சாலையில்தான் இருக்கிறேன், அவையனைத்தும் கனவா?

என்று இளமாறன் நினைக்கையில் மீண்டும் கதவுகள் திறக்கப்படும் சப்தம்

இதோ வந்துவிட்டனர் நீதிமன்றம் அழைத்துச்செல்ல இல்லை இல்லை விசாரணை மன்றம், நீதி கிடைத்தால்தானே நீதி மன்றம்?.

இளமாறன் சிறைக்குள் நுழைந்த வீரர்களில் ஒருவன்

"இம் எழுந்திரு செல்லலாம்" என்று கட்டளையிட்டான்.

எழுந்த நின்ற இளமாறன் சங்கிலிகளால் பிணைக்கப்பட்டு, கைகளில் விலங்குகளால் பூட்டப்பட்டான். இறுதியாக ஒருவன் அவன் கண்களைக் கட்டினான்.

"எதற்கு கண்களை கட்டுகிறாய்?" என்றான் இளமாறன்

"மன்னர் உத்தரவு" என்றான் இளமாறன் கண்களைக் கட்டியவன்.

“நான் கண்ட கனவு நினைவாகப் போகிறது, எம்மினத்திற்கு விடுதலை வெகு தொலைவில் இல்லை, மக்களிடம் முறையிடப்போகிறேன் மக்கள் புரட்சி துளிர்க்கும், நான் நினைத்த முடிவுகள் கிடைக்கும், கண்கள் கட்டப்பட்டால் என்ன? மூடர்களே என் சிந்தனையை கட்டிவிட முடியாதே?, கரங்கள் கட்டப்பட்டால் என்ன? நெஞ்சின் உரம் கட்டுப்பட்டு விடாதே?, இளமாறன் யாரென்று அறியாதவர்கள் அறிந்து கொள்ளட்டும், என்னை இதுவரை தெரியாத மக்கள் தெரிந்து கொள்ளட்டும், என் புரட்ச்சியை புரியாத இந்த அரசு புரிந்து கொள்ளட்டும்”

என்று அவர்களுடன் நடக்கலானான். அவன் சிந்தை முழுதும் விசாரணை மன்றம், பலபீமன், முதல் மந்திரி, மக்கள் என்றே சுழன்றது.

"நில்" என்றது ஒரு குரல் திடீர் என்று

"ஏன்?" என்றான் இளமாறன், பதிலேதும் இல்லை.

இளமாறன் கண்கட்டு அவிழ்க்கப் பட்டது,

கண்களை மெல்லத் திறந்தான், அதிர்ச்சியில் உறைந்தே போனான்.

நீதி மன்றமும் இல்லை, மக்கள் கூட்டமும் இல்லை, மன்னரும் இல்லை, மந்திரியுமில்லை அவன் நின்றது கொலைக்களம்

"உனக்கு மரணதண்டனை விதிக்கப் பட்டுவிட்டது
மரியாதையாக மண்டியிடு" என்றான் ஒருவன்

பதறினான் இளமாறன், தவித்தான், துடித்தான்

"அநியாயம், அநீதி அநீதி விசாரணை இல்லாமல் தண்டனையா? கொடுமை, கொடுமை, கொடுமையிலும் கொடுமை......."

அவன் முடிக்கும் முன் அவன் உயிரைக் குடித்தது
ஒரு கொடியவனின் வாள் முனை. மெல்ல மெல்ல அடங்கியது அவன் உயிர் மட்டுமல்ல, அவன் கொண்ட சிந்தனையும், விடுதலையின் வேட்கையும் தான்.

0 comments:

Post a Comment

உங்கள் கருத்தை நான் அறிய