Saturday, February 26, 2011

ஆறவிடாமல்...

என் மனமென்னும் கரையினில்
உன் நினைவுகளாய் பதிந்துவிட்ட
காலடி தடங்களை காத்துவருகிறேன்
களைந்து போகாமல்

உன்னுடன் உருகிய நேரத்தை
நிறுத்தி வைத்துள்ளேன் என்
மனக் கடிகாரத்தின் மணித்துளியில்
கடந்து போகாமல்

உன் இதழ் வழி உதிர்ந்த
வார்த்தைகளை அள்ளி மாலையாக்கி
மாட்டி வைத்தேன் மனக்கிடங்கில்
காய்ந்து போகாமல்

நாம் பரிமாறிக்கொண்ட பரிவர்த்தனைகளை
பட்டியலிட்டு எண்ணி என்னி
பார்க்கிறேன் எதுவொன்றும்
குறைந்து விடாமல்

இவற்றோடு இழத்து இழைத்து
இன்னும் இன்னும் கீறிக்கொள்கிறேன்
நீ தந்துவிட்டு போன காயங்களை
ஆறவிடாமல்.....

Tuesday, February 22, 2011

என்னைத் தேடி....

ஞானம் தேடி
ஞானியை அடைந்தேன்
நீ யாரென? கேட்டார் ஞானி

பெயரை சொன்னேன்
அது உன் பெயர்
நீ யார்? என்றார்

ஊரைச் சொன்னேன்
அது உன் ஊர்
நீ யார்? என்றார்

தொழிலை சொன்னேன்
அது உன் தொழில்
நீ யார்? என்றார் மீண்டும்

தெரியவில்லை என்றேன்
அதைத் தேடு என்றார்

திரும்பி வந்தேன்
என்னைத் தேடி.....

விடுப்பு.......

நீண்ட நேரம்
தூக்கம்

சிறிது நேரம்
தொலைகாட்சி

காலை உணவு

தொலைபேசி

மீண்டும் தூக்கம்

மதிய உணவு

திரைப்படம்

தேனீர்

கடற்க்கரை

காற்று கொஞ்சம்
கவனிப்பு கொஞ்சம்

மதுக்கடை
கோப்பை மது

இரவு உணவு

இறுதி நாள்
ஏக்கம்
தூக்கம்

நாளை முதல்
ஐந்து நாள்
விடுப்பு

விடுமுறைக்கு...

Sunday, February 20, 2011

இல்லை என்பது மட்டுமே.....

வாழ்க்கையின் தொடக்கம்

இல்லை என்பது மட்டுமே

காலம் நகர நகர

அவன் வருவான்,

அவள் வருவாள்,

அவர்கள் வருவார்கள்,

அது வரும், அவை வரும்

மீண்டும் காலத்தால்

அவள் இல்லை

அவன் இல்லை

அவர்கள் இல்லை

அது இல்லை

அவை இல்லை

நீயும் இல்லை


இல்லை இல்லை என்பது மட்டுமே
இருப்பாய் இருக்கும்.....

Saturday, February 19, 2011

கண்டனம் ஒன்றாவது கூறுங்கலேன்.....

வங்கக்கடல்தான் வருந்துதம்மா!

அரபிக்கடலும் அழுகுதம்மா!

குமரியும்தான் குமுறுதம்மா!

பரதவர் கொடுமை நடக்குதம்மா!

பாரதம் வேடிக்கை பார்க்குதம்மா!

கடற்ப்படைகொடுமை தொடருதம்மா!

கயவர் கைதான் படருதம்மா!


வலைக்களும்தான் அங்கே அருபடுது!

மீன்களும்தான் கொள்ளை இடுபடுது!

உயிர்பலிதான் நித்தம் நடைபெருது!

மானம்தான் கடலிலும் இழிபடுது!

கடலிலும் சிங்களர் கொடிதானோ?

நரிகளின் நாட்டமை ஏனோ?


தமிழன் என்றுதான் தனிக்கவேண்டம்!

இந்தியன் என்றாவது இறங்குகலேன்?

உயிரையும், உரிமையையும் தாருங்கலேன்?

கண்டனம் ஒன்றாவது கூறுங்கலேன்?

உளி...

கனவுகளோடு கட்டப்பட்ட வாழ்க்கையை
சுமந்து சுமந்து கூனிக் குறுகிப் போகும்
தருணமெல்லாம் நம்பிக்கையை என்னுள்
விதைத்தது அவமானங்கள்

வெற்றி விரைவில் வந்து சேரும்
என்னும் செய்தியை விரைந்து வந்து
சொன்னது தோல்விகள்

இதயம் இறுகிப்போய்
கனத்து கனத்து ஒடிந்துவிழ முயலும்
ஒவ்வொரு சமயமும் இளகச் செய்தது
இழிச்சொற்கள்

இப்படி என்னை சிறுது சிறுதாய்
செதுக்கி சிற்பமாய் செய்தது
சமுதாயம்...

கண்ணீரை விலைக்கொடு....

ஆசைகளால் அடுக்கப்பட்ட
வாழ்க்கையிது

முறிக்கப்ப்படும் பொழுதோ
பறிக்கப்படும் பொழுதோ
துன்பம் தலைவிரித்தாடும்
துக்கம் தொண்டையடைக்கும்

கனவுகள் கசக்கப்பட்டு
காகிதமாய் குப்பையில்
வீசப்படும்

துயரம் உன்னைத் துரத்தும்
எதுவுமே எவருமே வேண்டாம்
என்ற எண்ணம் ஊற்றெடுக்கும்

மெய்ஞானம் மெல்ல விடைகொடுப்பதுபோல்
நன்கு நடிக்கும்
சித்தாந்தம் சில நேரம்
தலைகாட்டிச் சிரித்துவிட்டு
சிதறிவிடும்

நமக்காக ஒருவருமில்லை
என்கிற எண்ணம் எழுந்து
மேலே நிற்கும்

அறுபட்ட காத்தாடியாய்
மனம் அலைக்கழிக்கும்
ஆழிப்பேரலையாய்
அத்திரம் ஆர்ப்பரிக்கும்

துள்ளியெழுந்து மேலும்
துயரப்பட்டுவிடாதே

கண்ணீரில் கண்களைக்
கழுவிவிடு சிவந்து போகட்டும்
நாவு வறண்டு போகட்டும்

கண்ணீரை விலைக்கொடுத்து
அமைதியை வாங்கு

ஒவ்வொரு சொட்டுக் கண்ணீரும்
ஆயிரம் ஆயிரம் நம்பிக்கையை
உருவாக்கும்.....

பயணம் மட்டும் தொடரும்....

பாய்ந்தோடிய நீர்மத்தின்
நுண்மமாயிருன்தே
மற்றவைக்கு அறுதியிட்டு
போட்டியிட்டு
எல்லையோடி
எழும்பிவந்து
உயிர்ப்படைந்து
பிண்டமாகி
இருப்புக்கொண்டேன்
இருட்டினில்

காலம்
இழுத்துத் தள்ளியது
கண்ணீரில் கரைந்து
தொடர்ந்த பயணம்
இன்றும் தொடர
நானறியேன்
இலக்கு எதுவோ?

நிச்சயம் ஆகுவேன்
மீண்டும்
நீர்மமாகவோ
துகளாகவோ
காற்றாகவோ
கனலாகவோ
பயணம் மட்டும் தொடரும்....

முதலில் ஒரு இந்தியன், பிறகு தமிழனா?

நண்பா...

இது யாருடைய மனதையும் புண்படுத்துவதற்காக எழுதப்படவில்லை. உண்மை நிலமை என்னவோ அதை மட்டும் தான் கருத்தில் கொல்லப்பட்டது. நீங்கள் கேள்வி பட்டதுண்டா ஒரு வாசகம்.

"வடக்கு வாழ்கிறது, தெற்கு தேய்கிறது" என்று

அது எவ்வளவு உண்மை என்று நமக்கே தெரியும். இருந்தும் நம்மை நாமே ஏமாற்றிக் கொள்கிறோம் ஏன்?

நமது வீடும், வயிறும் மட்டும் நிறைந்தால் போதுமா, அனைவரதும் நிறைய வேண்டாமா?

உங்கள் சித்தாந்தம் முதலில் ஒரு இந்தியன், பிறகு தமிழனா?

இந்தியன் என்பது ஒரு தேசப்பற்று தமிழன் என்பது இனப்பற்று,

1946 க்கு பிறகு பிறந்த இந்த இந்தியா பற்றிய தேசப்பற்று, 2000 வருடமாக இருக்கும் தமிழினப் பற்றை பின்னுக்கு தள்ளுகிறது இல்லையா? காரணம் பொருளாதாரம், வாழ்வமைப்பு, பாதுகாப்பு.

இப்பொழுது கேட்கிறேன் கிரிக்கெட், பாகிஸ்தான் இவை இரண்டைத் தவிர உங்கள் தேசப்பற்றை வேறெங்கு உங்களால் நிருபிக்க முடியும்.

காவிரி பிரச்சனையில்,
முல்லைப்பெரியாரில்,
கிருஷ்ணா நதிநீர்ப் பிரச்சனையில்,
தமிழக மீனவர் பிரச்சனையில்,
ஒக்கேனேக்கல் குடிநீத் திட்டத்தில்,
சேது சமுத்திரத் திட்டத்தில்,
எதில் தான் முடியும்,
தமிழக விவசாயத்தின் தலையெழுத்தை மற்ற முடியுமா?

சரி இவ்வளவு வேண்டாம், வடநாட்டில் சென்று ஒரு தொழில் தொடங்கி நடத்துங்கள் பார்க்கலாம்,

சரி கேரளாவில், கர்நாடகாவில், ஆந்த்ராவில் முடியாத? சரி எங்குதான் முடியும் உங்கள் உங்கள் தேசப்பற்றை வைத்துக்கொண்டு.

என்றாவது நீங்கள் நினைத்ததுண்டா ஏன் இந்தியா மொழிவாரியாக பிரிக்கப்பட்டது என்று? ஏன் பெரியார் சொன்னதுபோல் திராவிட நாடு என்று தென் இந்தியாவையும், வடநாடு என்று வடஇந்தியாவையும் இரண்டு மாநிலமாக பிரிக்கவில்லை என்று?

என்றாவது நினைத்ததுண்டா கர்நாடகாவில் அணை கட்ட அனுமதி அளித்தார்கள் என்று?

இல்லை ஏன் லச்சத்தீவை இலங்கைக்கு தாரைவார்த்துக் கொடுத்தார்கள் என்று யோசித்தீர்களா? சரி இது நடந்து முடிந்த கதை

அராபிய நாடுகளில் சென்று வேலை செய்து பாருங்கள் இல்லை இருப்பவர்களைக் கேளுங்கள் தெரியும் இந்தியாவின் ஒற்றுமையும் அதில் தமிழனுக்கு கிடைக்கும் மரியாதையும்.

என்னை பொருத்தவரை இந்தியன், தேசப்பற்று என்று சொல்லித்தரப்பட்ட சித்தாந்தங்கள் நமக்கு நாமே பூசிக்கொள்ளும் அரிகாரங்கள் நிச்சயம் ஓர்நாள் கலைந்துவிடும் அல்லது கலைத்ததுதான் ஆக வேண்டும்.

இவை தமிழ்நாட்டு மக்களுக்கு மட்டுமல்ல, என் ஈழ மக்களுக்கு ஆறுதல் சொல்லும் உரிமையும் கூட பறிப்பதனால் வந்த உண்மையின் தெளிவு.
தேசம் போனால் இன்னொரு தேசத்தை உருவாக்கிவிட முடியும் ஆனால் இனம்போனால்???????????????????????????

வாழ்க்கைப் பாதையில்...

வாழ்க்கைப் பாதையில்
எத்தனையோ சுவாரசியம்
நொடிக்கு நொடி ஆச்சர்யம்
எத்தனைத் தோல்விகள்
எத்தனைத் தடைகள்
எத்தனை எத்தனை வெற்றிகள்
எவ்வளவு இழிச்சொற்கள்
எப்படிப்பட்ட கேவலப் பார்வைகள்
தூற்றல்கள்
வன்சொற்கள்

இவையனைத்தையும் கடந்த பிறகும்
தெளிந்த பிறகும்
அடர்ந்தக் காட்டில்
விழும் பூப்போல்
கடலில் விழும்
ஒருதுளி நீர் போல்
மனதில் எங்கோ
ஒரு மூலையில்
ஒரு சிறு அழுத்தம்
இல்லை வருத்தம்
இல்லை இல்லை குறை
இம்ஹும் அதுவுமில்லை
நிறைவேராத ஒரு ஆசை
இன்னும் சரியாகச் சொல்லமுடியவில்லை

பேனாமுனை பந்துபோல்
ஒரு சிறு உறுத்தல் இன்னும்
உருண்டுகொண்டுதான் இருக்கிறது.

வேலை பளுவா?
அது நமக்கு கைவந்தக் கலைதான்
அதையும் ஊதியகிவிட்டது.

காதலா?
மூன்றுவருடமாக மூடிவைத்ததை
துப்பியகிவிட்டது.
இன்னும் அந்த உறுத்தல்
மறைந்தபாடில்லை
அது என்னவென்றும்
நான் அறிந்தபாடில்லை.

என்ன செய்ய நான்
ஐயோ தலை வெடித்துவிடும் போல் உள்ளதே
ஒருவேளை
நண்பன் புது வண்டி வாங்கினானே?
அதுவா கிடையாது கிடையாது
பொறாமை படும் பழக்கம் நமக்கில்லை
அப்படி என்றால் வேறென்ன?

புது வீடு கட்டிவிட்டேன்
வங்கியில் பணம் தேவைக்கு உள்ளது
சேமித்து விட்டேன்
வழக்கமாய் வீட்டுக்கு அனுப்பும்
பணத்தையும் அனுப்பிவிட்டேன்
இல்லை இல்லை
இது எதுவும் இல்லை
அது வேறு, அது இவையெதுவும் இல்லை.

அந்த உறுத்தல் இன்னும்
என்னை விட்டபாடில்லை
ஐயோ எனக்கு
பைத்தியம் பிடித்துவிடும்போல் உள்ளதே
ஒன்றுமே புரியவில்லை
என்ன இது இப்படி
என்னை வதைக்கிறதே

ஆ..... கண்டுபிடித்துவிட்டேன்.......
கண்டுபிடித்துவிட்டேன்.....

பதிப்பிட ஒன்றுமே கிடைக்கவில்லை........
அதுதான் இது

அப்பாடி................................

விடுதலை வேட்கை…..

சாலையெங்கும் மக்கள் வெள்ளம், ஆங்காங்கே சிறு சிறு சலசலப்பு, சில ஆரவாரம். சிறைச்சாலை வாயிலில் இருந்து அரண்மனை வாசல் வரை கடலென திரண்டிருந்த மக்கள் கூட்டத்தின் மத்தியில் ஊர்ந்துச் சென்றது ஒரு மாட்டுவண்டி அனைவரது கண்களும் அவன்மேல்.

வண்டியின் மத்தியில் நடப்பட்டக் கம்பத்தில் கட்டப்பட்ட நிலையில் ஓர் இளைஞன், தினவெடுத்த தோள்கள், அகன்ற மார்பு, அழகிய முகம், முறுக்கிய மீசை, உடலெங்கும் காயத்தழும்புகள் அவன் வீரத்தைப் பறைசாற்ற, கோபத்தால் சிவந்த கண்களின் வெறித்தப்பர்வை மட்டும் அரண்மனையை நோக்கியபடியே.

விசாரணை மன்றம் முழுதும் மக்கள் கூட்டம் நிரம்பி வழிந்தது, அரசன் பலபீமனும், முதல் மந்திரியாரும் ஆலோசனையில் இருக்க, பிற மந்திரிகளும் மக்களும் தங்களுக்குள் பேசிக் கொண்டதால் மன்றமெங்கும் இளமாறன், இளமாறன் என்ற சலசலப்பு நிறைந்தே இருந்தது.

“இழுத்துவரச் சொல்லுங்கள் இளமாறனை”

என்ற முதல் மந்திரியரின் குரல் அனைவரது பேச்சிக்கும் முற்றுப்புள்ளி வைக்க எங்கும் அமைதி.

இழுத்துவரப்பட்டான் இளமாறன், அவன்தான் முன்பு கம்பத்துடன் கட்டப்பட்டு, வீதி ஊர்வலம் கொணரப் பட்டவன், இதோ இங்கே இரும்புச் சங்கிலியால் கைகள் பிணைக்கப்பட்டு இழுத்து வரப்படுபவனும் அவன்தான், அதே இளமாறன் தான்.

நிசப்த்தம், எங்கும் நிசப்த்தம் அனைவரது முகமும் ஒரே நிலையில், அனைவரது பார்வையும் அவன்மீதே,

“மன்னருக்கு மரியாதையை செய்”

என்ற மந்திரியின் குரல் இம்முறை அமைதியைக் குலைத்தது
இதழோரம் ஓர் அலட்சியப் புன்னகையை உதிரவிட்டான் இளமாறன்.

அதைக் கண்டும் காணாதது போல் பேசினான் மன்னன் பலபீமன்

"நீ ஏன் இப்படி இங்கு நிறுத்தப்பட்டுல்லாய், தெரியுமா உனக்கு?"

"அதைத் தாங்களே சொல்லிவிடலாமே!" என்றான் இளமாறன்

“கலகம் செய்தாய், அரசுக்கு எதிராக மக்களை தூண்டினாய், புரட்சி செய்ய முயன்றாய்”

என்று இளமாறன் மீது குற்றங்களை அடிக்கினார் முதல் மந்திரி

“என்ன கலகம் செய்தேன்?”

“வரி கொடுக்க முடியாது என்றாய்”

“எம்மினத்தவர் மட்டும் மும்மடங்கு வரி கொடுக்க இயலாது என்றேன்”

"உங்கள் மொழியை மட்டும் ஆட்சி மொழியாக அறிவிக்கச் சொன்னாய்"

"எங்கள் மொழியையும் அறிவிக்கச் சொன்னேன், எங்கள் மொழியை மட்டுமல்ல"

"மன்னருக்கு எதிராக மக்களைத் தூண்டினாய்"

"மக்களைத் தூண்டவில்லை, முறையிட்டேன். மக்களுக்காகத்தான் மன்னன் அந்த மன்னனே உதாசீனப் படுத்தும் பொழுது, மக்களிடம்தான் செல்ல முடியும், அவர்களிடம்தான் முறையிட முடியும்"

"நீ என்ன காரணங்கள் கூறினாலும் சரி உனக்கு தண்டனை உறுதி"

“மரணத்தைப் பற்றி கவலை கொள்ளவில்லை நான், என் கவலையெல்லாம், இந்த நாட்டைப் பற்றித்தான், நட்டுமக்களைப் பற்றித்தான், கேள்விக் குறியாய் இருக்கும் அவர்கள் எதிர்காலம் பற்றித்தான். இனி என்ன? நான் இப்பொழதும் கேட்கிறேன்? கூடியிருக்கும் மக்களே, சகோதரர்களே, நாம் அனைவரும் ஒன்றுதான் மொழியால் இனத்தால் வேருபட்டபோதும் நாமும் மக்கள்தான், உழைக்கும் மக்களின் வர்க்கம் ஒன்றுதான், உழைப்பை உறிஞ்சும்போது வரும் வலி ஒன்றுதான். இப்பொழுது கூறுங்கள் நான் கேட்பது தவறா?, உரிமைகள் மறுக்கப்படுவது அடுக்குமா?, மக்களை அடிமைப் படுத்துவது முறையா? இனத்தை அழிக்க நினைப்பது செயலா? நீங்கள் கூறுங்கள், தீர்ப்பை நீங்களே கூறுங்கள், இப்பொழுதே கூறுங்கள், மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பென்று எண்ணி உயிர்த்துரக்கிறேன் நான்"

"வேண்டாம் வேண்டாம்" என்றது சில குரல்

"இளமாறனை விடுதலை செய்"

"இளமாறன் கோரிக்கைகளை நிறைவேற்று"

"இளமாறனை விடுதலை செய்,
இளமாறனை விடுதலை செய்,
இளமாறனை விடுதலை செய்,....................."
"விடுதலை, விடுதலை........................ "

எங்கும் எழுந்த அந்த ஒலி மன்றம் முழுதும் ஒலித்தது, அரண்மனை முழுதும் ஒலித்தது

இந்த ஒலிகளின் நடுவே, திடீர் என்று கதவுகள் திறக்கப்படும் சப்தம் கேட்க்கவே திடுக்கிட்டு விழித்தான் இளமாறன்.

கருங்கல் உத்திரம், குறைந்த வெளிச்சம் நான் இன்னும் சிறைச்சாலையில்தான் இருக்கிறேன், அவையனைத்தும் கனவா?

என்று இளமாறன் நினைக்கையில் மீண்டும் கதவுகள் திறக்கப்படும் சப்தம்

இதோ வந்துவிட்டனர் நீதிமன்றம் அழைத்துச்செல்ல இல்லை இல்லை விசாரணை மன்றம், நீதி கிடைத்தால்தானே நீதி மன்றம்?.

இளமாறன் சிறைக்குள் நுழைந்த வீரர்களில் ஒருவன்

"இம் எழுந்திரு செல்லலாம்" என்று கட்டளையிட்டான்.

எழுந்த நின்ற இளமாறன் சங்கிலிகளால் பிணைக்கப்பட்டு, கைகளில் விலங்குகளால் பூட்டப்பட்டான். இறுதியாக ஒருவன் அவன் கண்களைக் கட்டினான்.

"எதற்கு கண்களை கட்டுகிறாய்?" என்றான் இளமாறன்

"மன்னர் உத்தரவு" என்றான் இளமாறன் கண்களைக் கட்டியவன்.

“நான் கண்ட கனவு நினைவாகப் போகிறது, எம்மினத்திற்கு விடுதலை வெகு தொலைவில் இல்லை, மக்களிடம் முறையிடப்போகிறேன் மக்கள் புரட்சி துளிர்க்கும், நான் நினைத்த முடிவுகள் கிடைக்கும், கண்கள் கட்டப்பட்டால் என்ன? மூடர்களே என் சிந்தனையை கட்டிவிட முடியாதே?, கரங்கள் கட்டப்பட்டால் என்ன? நெஞ்சின் உரம் கட்டுப்பட்டு விடாதே?, இளமாறன் யாரென்று அறியாதவர்கள் அறிந்து கொள்ளட்டும், என்னை இதுவரை தெரியாத மக்கள் தெரிந்து கொள்ளட்டும், என் புரட்ச்சியை புரியாத இந்த அரசு புரிந்து கொள்ளட்டும்”

என்று அவர்களுடன் நடக்கலானான். அவன் சிந்தை முழுதும் விசாரணை மன்றம், பலபீமன், முதல் மந்திரி, மக்கள் என்றே சுழன்றது.

"நில்" என்றது ஒரு குரல் திடீர் என்று

"ஏன்?" என்றான் இளமாறன், பதிலேதும் இல்லை.

இளமாறன் கண்கட்டு அவிழ்க்கப் பட்டது,

கண்களை மெல்லத் திறந்தான், அதிர்ச்சியில் உறைந்தே போனான்.

நீதி மன்றமும் இல்லை, மக்கள் கூட்டமும் இல்லை, மன்னரும் இல்லை, மந்திரியுமில்லை அவன் நின்றது கொலைக்களம்

"உனக்கு மரணதண்டனை விதிக்கப் பட்டுவிட்டது
மரியாதையாக மண்டியிடு" என்றான் ஒருவன்

பதறினான் இளமாறன், தவித்தான், துடித்தான்

"அநியாயம், அநீதி அநீதி விசாரணை இல்லாமல் தண்டனையா? கொடுமை, கொடுமை, கொடுமையிலும் கொடுமை......."

அவன் முடிக்கும் முன் அவன் உயிரைக் குடித்தது
ஒரு கொடியவனின் வாள் முனை. மெல்ல மெல்ல அடங்கியது அவன் உயிர் மட்டுமல்ல, அவன் கொண்ட சிந்தனையும், விடுதலையின் வேட்கையும் தான்.