Saturday, August 27, 2011

ஒரு தமிழன் முதலமைச்சராய் இருந்திருந்தால்

இதோ இன்னும் பதிமூன்றுநாட்கள் தான் நம் தமிழர் மூவரின் உயிர் ஊசலாடுகிறது. ஆறுகோடி மக்கள் இருந்து என்ன பயன்? வெறும் கண்டனங்கள், அறிக்கைகள், போராட்டங்கள் மட்டும் போதுமா? எவர் மதிக்கிறார் இப்பொழுது?

அய்யா இருந்தபோது அய்யா செய்வாரா? அய்யா செய்வாரா? என்று கையேந்தினோம். தந்தியடித்தார், அறிக்கை விட்டார், கவிதை பாடினார், மகளுக்கு மந்திரி பதவி இல்லை என்று மத்தியில் மிரட்டினார், உண்ணாவிரதம் என்கிறபெயரில் கடற்கரையில் படுத்து இரண்டு மணிநேரம் காற்றுவாங்கிவிட்டு வந்தார், கவிதைபாடினார், கண்ணீர் வடித்தாரே ஒழிய வேறொன்றும் இல்லை பலன். இழப்பு ஈழத்தின் முனேற்றம், புலிகளின் அழிவு, இரண்டுலச்ச மக்கள் படுகொலை.

இப்போது அம்மாவை உட்காரவைத்துவிட்டு அம்மா செய்வாரா? அம்மா செய்வாரா? என்று கையேந்தி நிற்கிறோம்.

வந்தார் மத்தியரசு இவரை மதிக்கும் என்று நினைத்தது பொய்யாய் போக, போர் என்றால் மக்கள் சாகத்தான் செய்வார்கள் என்றவர், பிரபாகரனை கைதுசெய்து இந்தியா கொண்டுவர வேண்டுமென்று தீர்மானம் போட்டவர், திடீரென்று ஈழ மக்கள் என்றார், எம்.ஜி.ஆர் போல் புதிய அவதாரம் எடுத்தார் தீர்மானம் போட்டார், அதற்கு பலனாக சமச்சீர் கல்வியை அழித்துவிட துடித்தார்.

இப்பொழுது இன்று மூன்று தமிழர்களை அதுவும் தமிழ்நாட்டில் தூக்கிலிடப் போகிறார்கள். தமிழகத்தின் முதல்வர், தமிழக மக்களை யாரிடமும் கையேந்த விடமாட்டோம் என்று சொன்னவர் இப்பொழுது மவுனம் காக்கிறார். கருத்துரைக்கவோ, அறிக்கை விடவோ, தீர்மானம் போடவோ முன்வரவில்லை.

இத்தனை மக்களும் கேட்டுக்கொண்ட பிறகும் முதல்வர் அமைதிகாக்கிறார் என்றால் என்றால் அவர்கள் தூக்கிலிடப் படுவதை மறைமுகமாக ஆதரிக்கிறார் என்றே அர்த்தம்.

இதற்க்கெல்லாம் காரணமென்ன?

ஈழப் பிரச்சனையாகட்டும், மீனவர் பிரச்சனையாகட்டும், இந்த தூக்குதண்டனை பிரச்சனையாகட்டும் தமிழ்நாடு என்பதால் தான் இப்படி. இதே வேறு மாநிலமாக இருந்தால் நடப்பதே வேறு என்றும் சொல்லிக்கொள்கிறோம் வெக்கமில்லாமல்.

இதற்க்கெல்லாம் காரணமென்ன அந்தந்த மாநிலங்களில் அவர்களின் தலைவர்கள் அவர்கள் இனத்தவரே. அனால் நம் மாநிலத்தில்தான் போவோர் வருவோரெல்லாம் தலைவர். கண்டவரெல்லாம் முதல்வர் ஏதோ அதிசயமாக எம்.ஜி.ஆர் ம், வை.கோ ம் இருந்துவிட்டால் கண்டவரையெல்லாம் தலைவராகவும் முதல்வராகவும் கொள்வது நம் இனத்திற்கு நாமே துரோகம் செய்வது போலாகுமே?

இதோ இப்பொழுது கையேந்தி நிற்க வேண்டிய நிலைமை ஏன்? நாம்தான் நம் மக்களுக்கும் துரோகம் செய்கிறோம். யார் எந்த பதவியில் இருந்து தவறு செய்தாலும் அவர்களை சொல்லி குற்றமில்லை. அவர்களை அங்கு வைத்த நம்மைத்தான் சொல்லவேண்டும்.

ஒரு இனத்திற்கு தலைவன் அந்த இனத்தை சேர்ந்தவன் இல்லை என்பது எவ்வளவு பெரிய முட்டாள் தனம். பிறகு அவரிடம் எதிர்பார்ப்பது அதைவிட பெரிய முட்டாள் தனம்.

வாழ்க தமிழ், வாழ்க தமிழ் ஈழம், வாழ்க தமிழ் நாடு, வாழ்க தமிழ்மக்கள், வாழ்க திரவிட இனம், வாழ்க தமிழினம்



இந்திய இறையாண்மைக்கு வெடி வைக்கிறது காங்கிரஸ்

அத்துனை போராட்டம், எதிர்ப்புகள், கோரிக்கைகளை மீறி பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகியோரது உயிரைப் பறிப்பதில் குறியாக காய் நகர்த்தி தான் நினைத்தப் பாதையிலேயே சென்று கொண்டிருக்கிறது காங்கிரஸ்.

ஆறுகோடி மக்கள் கெஞ்சி, கதறியும் ஈழத்தில் எதைப் பற்றியும் கவலைபடாமல் இரண்டுலட்ச மக்களை கொன்று குவித்ததோடு மட்டுமல்லாமல், இவர்கள் மூவரையும் தூக்கில் ஏற்றியே ஆகவேண்டும் என்ற வெறியோடு திட்டமிட்டு நடத்துகிறது இந்த அரசு.

ராஜீவ் காந்தி சாவிற்கு பழிவாங்குவது, லோக்பால் பிரச்னையை திசை திருப்புவது, மத்திய அரசுக்கு குடைச்சல் கொடுக்கும் தமிழக அரசுக்கு பிரச்னையை தருவது என்று ஒரே கல்லில் மூன்று மாங்காய் திட்டத்தில் இந்த மரணதண்டனையை நிறைவேற்ற துடிக்கிறது இந்த முட்டாள் காங்கிரஸ்.

இத்தனை திட்டங்களை போட்டு இந்திய இறையாண்மைக்கும், ஒருமைபாட்டிற்கும் வெடி வைப்பதாய் இருக்கும் என்பதை மறந்தோ அல்லது கவலைப்படமலோ செய்லப்டுத்தப் படுகிறது இந்த தண்டனை.

ஈழ அழிவிற்கும், இந்த மூவரது உயிர் பறிப்பிர்க்கும் இந்த காங்கிரசும், இந்திய அரசாங்கமும், இந்திய மக்களும் பதில்சொல்லியே தீரவேண்டும்.

அதுவரை தமிழனுக்கு இழைக்கப் பட்ட துரோகத்திற்கு இந்திய அரசும், இலங்கை அரசும் பதில் சொல்லும்காலம் விரைவில் வரும். ஒவ்வொரு உயிர்களுக்கும் சம அளவில் இழப்புகளை சந்திக்கவேண்டி இருக்கும். ஜனநாயகம், சமத்துவம் என்று நடித்துக்கொண்டு சுயநல அதிகார ஆட்சி நடத்தும் இந்த அரசியல்வாதிகளுக்கு முடிவு விரைவில் வந்து தெளிவு படுத்தும்.

காவிரி பிரச்சனை,
முல்லைபெரியாறு பிரச்சனை,
கிருஷ்ணா நதிநீர் பிரச்சனை,
ஒக்கேனக்கள் திட்ட பிரச்சனை,
சேதுசமுத்திர திட்டம்,
கச்சத்தீவை தாரைவார்த்துக் கொடுத்தது,
தமிழகமீனவர் பிரச்சனை,
ஈழப் பிரச்சனை
இப்பொழுது இந்த தூக்குதண்டனை என்று
அனைத்திலுமே இந்திய அரசாங்கம் தமிழனுக்கும் துரோகமே இழைத்துள்ளது

இவை அனைத்திற்குமான விடை வை.கோ சொல்வதுபோல் இந்திய வரைபடத்தை திருத்தி அமைப்பதைத் தவிர வேறுஒரு வழியும் இல்லை.



இலங்கைக்கு இந்தியா பயப்படுகிறதா?



பாராளுமன்றத்தில் நடத்தப்பட்ட இலங்கைத்தமிழர் பற்றிய விவகாரத்தில் வெளியுறவுத்துறை மந்திரி எஸ்.எம். கிருஷ்ணா அளித்திருக்கும் பதில்கள் தமிழருக்கு செய்யும் துரோகமாகவும், இலங்கைக்கு இந்தியா பயப்படுகிறது என்பதும் வெட்ட வெளிச்சமாக தெரிகிறது.

ஆறுகோடி மக்களின் கோரிக்கையை கவனத்தில் எடுத்துக்கொள்ள முடியவில்லை, சீனா என்னும் பூதத்தைகாட்டி பயமுறுத்திவரும் ஒரு சிறு நாட்டை அடக்கி கையாள தெரியவில்லை இவர்கள் நாட்டை வல்லரசாக்கப் போகிறார்களாம்? என்ன ஒரு பிழைப்பு இது?

கச்சத்தீவு இலங்கையின் எல்லையில்தான் உள்ளதாம். அதனால் தமிழக மீனவர்கள் போகக்கூடாதாம். இந்தியா - இலங்கை ஒப்பந்தப்படி அது இரு நாடுகளுக்கும் பொதுவானதாகவே இருக்க வேண்டும் என்றும், இருநாட்டு மீனவர்களும் அங்கு மீன் பிடித்துக் கொள்ளலாம் என்று இருப்பதுகூட தெரியாத ஒரு வெளியுறவு மந்திரி இருக்கிறார் என்றால் இந்தியாவின் தலையெழுத்தை நாம் என்னவென்று சொல்வது?

மதத்தின் பெயரால் சீனாவுடன் ஒருமனதாய் ஒன்றுபட்டு நிற்கும் அந்த நாட்டிற்கு ஒரு சிறு தீவை தாரைவார்த்துகொடுத்து தன்வசப்படுத்திக் கொள்ளலாம் என்று நினைக்கும் ராஜ தந்திரத்தின் மதிப்பை எப்படி எடைபோடுவது?


சொந்தநாட்டு மக்களுக்கு துரோகம் செய்து, இலங்கையில் இனப்படுகொலைக்கு உதவிசெய்து, உலகமே அவர்களை எதிர்த்துக்குரல் கொடுக்கும் பொழுது. இந்தியாமட்டும் முட்டுக்கட்டையாக இருப்பது எதற்கு? அரசியல் தந்திரமா? இல்லை பயமா?


இலங்கையுடனான உறவு அவ்வளவு முக்கியமா? ஏன்? அந்த உறவை வைத்துக்கொண்டு என்ன செய்யப் முடியும் என்று நினைக்கிறார்கள் இந்த உலகமாக புத்திசாலிகள் என்றுதான் தெரியவில்லை? பிறகு ஏன் பாக்கிஸ்த்தானுடன் மட்டும் அப்படி முடியவில்லை?

தமிழக மீனவர்கள் கொல்லப்படுவதும், காணமல் போவதும் குறைந்துள்ளதாம் இதை சொல்வது ஒரு வெளியுறவுத்துறை மந்திரி வெக்கமாயில்லை? இதில் தெற்காசியாவின் மிக்கபெரிய நாடு என்று பெருமைக்கு ஒன்றும் குறைச்சலில்லை.

காங்கிரசை இரண்டாக பிரிக்கலாம், இந்திராகாந்திக்கு முன் இந்திராகாந்திக்கு பின் என்று. இந்திரகந்திக்கு பிறகு இநதிய அரசியலில் திறமையான ஒரு நாடாளும் தொலைதுரப் பார்வைகொண்ட துணிச்சலான சூத்திரதாரி இல்லை என்றே கூறலாம். இலங்கை மட்டுமல்ல சீனாவே கண்டு பயப்படும் அளவிற்கு துணிச்சலான பல முடிவுகளை எடுத்தவர் அவர். அப்படி ஒரு தலைவர் காங்கிரசில் மட்டுமல்ல இந்தியவிலேயே இதுவரை எவருமில்லை.

இப்பொழுதைய காங்கிரஸ் தலைவர்களிடம் பயமும், பழிவாங்கும் உணர்ச்சியும், அண்டிப்பிழைக்கும் புத்தியும் மட்டுமே காண முடிகிறது. இந்தியாவின் ஜனநாயகம் பற்றியோ? இந்தியாவின் இறையாண்மையை பற்றியோ யோசிப்பதாய் தெரியவில்லை.

மதம், இனம், மொழி இவற்றை வைத்து அரசியல் செய்தவர்யாரும் நிலையை இருந்ததில்லை. அவ்வளவு சிறந்த பிரதமரை திகழ்ந்த இந்திராகாந்தியை வீழ்த்தியது மதத்தை தொட்டதன் விளைவு. ராஜீவ்காந்தியை வீழ்த்தியது இனத்தை தொட்டதன் விளைவு.

இவ்வளவு வரலாறு தெரிந்தும் மீண்டும் மீண்டும் அவற்றை தொட்டு அரசியல் செய்யும் இதுபோன்ற தலைவர்களாலும் அவர்களின் கேடுகெட்ட செய்லகளாலும் உலக அரங்கில் இந்தியாவின் பெருமையும், சிறப்பும் சிதரிக்கொண்டிருக்கிறது, சிறுது சிறுதாக இந்தியா தனது தனித்தன்மையை இழந்துவருகிறது என்பது மறைக்க முடியாத உண்மை, நாம் மீண்டும் யாருக்கோ மறைமுகமாக அடிமையாகிக் கொண்டிருக்கிறோம் என்பதும் கண்ணிற்கு புலப்படாத உண்மை.

Friday, August 26, 2011

ஓட்டைகள் நிறைந்தக் குடை

உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாட்டின் சட்ட திட்டங்கள், வரைமுறைகள் அனைத்தும் மிக அருமை என்று சொன்னால் என்னால் மட்டுமல்ல உண்மை விரும்பிகள் யாராலும் ஏற்றுக்கொள்ள முடியாது.


சட்டம் என்றால் என்ன? எந்த ஒரு தனிமனிதனும் தவறு செய்துவிடக் கூடாது. அதிலும் மக்கள் நலன் பாதிப்பு, பண்பாடு மற்றும் கலாச்சார சீரழிவு, தனிமனித ஆளுமை, தனிமனித சுரண்டல், ஒழுக்க மீறல் போன்ற விசயங்கள் முதன்மையாகும். சரி அப்படி செய்துவிட்டால்? விசாரணை தண்டனை. இவையணைத்தும் சரியாக நடக்கிறது என்றால் ஏன் தவறுக்க மீண்டும் மீண்டும் நடக்கிறது? அப்படி தவறுகள் நடக்கிறது என்றால் சட்டம் சரியில்லை என்றுதானே அர்த்தம். சட்டம் இங்கு ஒரு ஓட்டைகள் நிறைந்த குடையகத்தான் காட்சியளிக்கிறது எனக்கு.



ஐம்பது ரூபாய் திருடியவனும், ஐநூறு கோடி ரூபாய் திருடியவனும் ஒரே முறையில் விசாரிக்கப் படுவதில்லை. உண்மையில் யாரை அதிகமாக அடித்து விசாரிக்க வேண்டும்? குறைந்தபணம் திருடியவனையா? அல்லது அதிக பணம் திருடியவனையா? ஆனால் இங்கு எல்லாமே தலைகீழாக நடக்கிறது. பிறகு ஏன் இந்த சட்டம் நமக்கு?

கிரிமினல் பீனல் கோட் என்னும் பிரித்தானியரின் இந்திய அரசியல் சட்டத்திலிருந்து பெயர்த்து உருவாக்கப் பட்டதுதான் இந்தியன் பீனல் கோட் என்று சொல்லப்படும் இந்த இந்திய அரசியல் அமைப்புச் சட்டம்.

இதன் அடிப்படி தத்துவம் என்ன வென்றால்? நூறு குற்றவாளிகள் தப்பிக்கலாம், அனால் ஒரு நிரபராதி தண்டிக்கப் படக் கூடாதாம். என்ன ஒரு முட்டாள் தனம் இது? நிரபராதி யார் குற்றவளி யார் என்று தெரியாத, கண்டுபிடிக்க முடியாத ஒரு சட்டம், நூறு குற்றவாளிகள் தப்பிக்கும் அளவிற்கு ஓட்டையுள்ள சட்டம் மாற்றப்பட வேண்டும் என்பதுதான் தீர்வாய் இருக்கும். சட்டத்திற்கு முன் அனைவரும் சமம் என்று சொல்லும் போது விசாரணையில் ஏன் இந்த வேறுபாடுகள்?

அது என்ன A Class, B Class, C Class சிறைவசதி யார் இந்த சட்டங்களை இயற்றியது? திருடனோ, கொலைகாரனோ, அரசியல்வாதியோ, போராட்டக்காரனோ, விசாரணைக் கைதியோ, தண்டனை கைதியோ யாராய் இருப்பினும் என்ன? சிறை அனைவருக்கும் ஒரே விதமாய்த்தானே இருக்க வேண்டும். அதில் என்ன வகுப்புப் பிரிவுகள்?.

இதுபரவாயில்லை தவறு செய்பவர்களை கண்டிக்கவும், கண்டுபிடிக்கவும் நீதிமன்றத்தில் ஒப்படைத்து தண்டனை வாங்கித்தரவும் நியமிக்கப் பட்டதுதான் காவல்துறை, புலனாய்வுத்துறை, ஆனால் இவை இரண்டியும் கட்டுபாட்டிற்க்குள் வைத்திருப்பது அதே தவறு செய்பவர்கள்தான். இதைத்தான் "திருடன் கையில் சாவி கொடுப்பது என்பார்களோ" என்று தெரியவில்லை,


அதிகாரத்தை தவறாக பயன்படுத்துபவர்களுக்கு என்ன தண்டனை என்று யாருக்குமே புரியவில்லை.

என்னைப் பொறுத்தவரை ஜன லோக்பால் திட்டத்துடன். இன்னும் சேர்த்துக்கொள்ளலாம்.
அதாவது விசாரணை செய்யும் காவல் துறையையும், புலன்விசாரணைத் துறையும், சட்டதிட்டங்கள் அனைத்தையும் உச்சநீதிமன்றத்தின் கீழ் கொண்டுவர வேண்டும்.

இவை இரண்டும் நீதிமன்றத்தை தவிர வேறு எந்த ஒரு அரசியல்வாதிக்கு கீழும் இயங்காமல் செய்துவிட்டாலே நாட்டில் முக்கால்வாசி பிரச்சனைகள் தீர்க்கப் பட்டுவிடும்.

நீதித்துறையை சார்ந்த இந்த இரு பிரிவுகளும் நீதிமன்றத்தின் கட்டுபாட்டில் இயங்கவேண்டும் என்பதுதானே நியதி. எந்த ஒரு அரசியல்வாதியும், அரசாங்க அதிகாரிகளும் இவை இரண்டையும் கட்டுப்படுத்த இயலாத முறையை இயற்ற விடும்.

ஆனால் அவையும் ஒரு குறிப்பிட்ட பொதுஅமைப்பின் கீழ் இயங்க வேண்டும். அது உச்சநீதி மன்றமாய் இருந்தால் இன்னும் பாதுகாப்பாய் இருக்கும்
.

இதுபோல் சட்டத்தை தனக்கு சாதகமாக அவர்கள் வளைக்க முயற்ச்சிக்கும் அத்துனை ஓட்டைகளும் அடைக்கப்பட வேண்டும்.

அனைவருக்கும் சமமான விசாரணை, சமமான நீதி, சரியான தண்டனை என்று கிடக்க வழி செய்கிறோமோ ஆண்டுதான் தவறுகள் குறையும். இல்லையெனில் தவறுகள் பெருகப் பெருக ஓட்டை சட்டப் புத்தகத்தின் பக்கங்கள் மட்டுமே பெருகுமே ஒழிய. நன்மையெதும் விளையாது.

இந்திய அரசியல் சட்டத்தின் அடிப்படை தத்துவத்தை மாற்றியமைப்போம்

"ஒரு நிரபராதியும் தண்டிக்கப்படக் கூடாது

ஒரு குற்றவாளியும் தப்பிவிடக் கூடாது"

Wednesday, August 24, 2011

பத்திரிகைகளுக்கு ஒரு வேண்டுகோள்



ஒருநாட்டின் வளமான வாழ்விற்கு தேவை இரண்டு. ஒன்று வாள்முனை, இன்னொன்று பேனாமுனை. இதில் இரண்டுமே கூர்மையுடன் இருக்கவேண்டும். எது ஒன்று கூர் மழுங்கினாலும் அந்த நாட்டின் எதிர்காலம் கேள்விக்குறியாகும் என்பது மறுக்க இயலாத உண்மை.

இவை இரண்டும் எப்பொழுதும் நேரான பார்வைகொண்டும், இலக்கை நோக்கி மாறாத பாதைகொண்டும் இருக்க வேண்டும். எதுவொன்று தன இயல்பை இழந்தாலும் அந்நாட்டு மக்களுக்கு வாழ்வாதாரம் காணமல் போகும்.

இவற்றில் வாள்முனையை விட பேனாமுனைக்கு வலிமை அதிகம் என்பது மறுக்கப்படாத ஒன்று. அதை நிருபித்த சரித்திர சான்றுகள் பல. இப்படி ஒரு வலிமைவாய்ந்த ஆயுதம், இன்று நம்நாட்டில் உண்மையில் கூர்மையுடந்தான் இருக்கிறதா? இல்லை குறைந்தபட்சம் உயிருடனாவது இருக்கிறதா? என்ற சந்தேகம் இருந்துகொண்டே இருக்கிறது.

உண்மைகளை மக்களிடம் கொண்டு சேர்த்து விழிப்புணர்வை ஏற்ப்படுத்தும் அற்ப்புத பணியை இன்றைய நம் நாட்டு பத்திரிகைகள் செய்கிறதா? என்று கேட்டால் இல்லை என்றே கூறமுடியும்.

இன்றும் பத்திரிகைகளில் உண்மை செய்திகள்தான் வெளிவருகின்றன ஆனால் அவையனைத்தும் வக்கிரத்தின் உண்மைகள், ஆபாசத்தின் உண்மைகள், கேவலத்தின் உண்மைகள்.

இதுவா சிறப்பான பணி? இதுவா உண்மையான ஒரு பத்திரிக்கையின் அழகு? இல்லை இல்லவே இல்லை. சாதிகளுக்கு, மதங்களுக்கு என்று பிரிவினைவாதம் செய்யும் பத்திரிகைகள், ஆளும் கட்சிக்கும், எதிர்கட்சிக்கும் என்று அவர்கள் புகழ்பாட அடுத்தவரை இகழ என்று ஒரு பத்திரிகைகள், காசுபார்ப்பதர்க்கு மட்டுமே என்ற நோக்கில் செய்லபடும் பத்திரிகைகள் என்ற இவைஅனைத்தும் ஒரு நாட்டின் வளர்ச்சிக்கு புற்றுநோய் போன்று நாட்டை, நாட்டின் மக்களை, நாட்டின் வளர்ச்சியை கொஞ்சம் கொஞ்சமாக அரித்து பாழாக்கிக் கொண்டிருப்பவை.

கொலை, கொள்ளை, கற்பழிப்பு, திருட்டு, கள்ளக் காதல் போன்ற வக்கிர செய்திகளுக்கே முக்கியத்துவம் கொடுப்பது ஏன்? விளையாட்டு, ஆன்மீகம், கலை, வர்த்தகம், அறிவியல் சாதனைகள் போன்ற செய்திகளை பின்னுக்கு தள்ளுவதேன். அப்படி அவற்றில் எதாவது ஒன்று நிகழ்ந்தாலும் தனக்கு வேண்டியவர், வேண்டாதவர் என்ற பாகுபாடு, காழ்ப்புணர்ச்சி என்பவற்றை பொறுத்தே அமைகிறது ஏன்?

கடமை என்று சொல்லி அடுத்தவரது அந்தரங்களை பதிக்கும் நீங்கள் உங்கள் அந்தரங்கள் பிறரால் அறியப்படுவதை விரும்புவீர்களா? இல்லை உங்களுக்கு அந்தரங்கம் என்பதே கிடையாதா? இல்லை நீங்கள் அவ்வளவு தூயவர்களா? நீங்கள் பதிக்கும் விசயங்கள் உங்கள் வீட்டு பிள்ளைகளையும் பாதிக்கும் என்பதை உணராத அளவிற்கு முட்டாள்களா நீங்கள்? இப்படி பட்ட முட்டாள்களின் கையிலா பேனா சிக்கியிருக்கிறது. என்னே நம் நாட்டிற்க்கு வந்த சாபக்கேடு?

பிறர்க்கு செய்தி அறிவிப்பதென்றால், கற்பழித்தவனுக்கு தண்டனை கிடைத்தது என்று இருந்தாலே போதுமே? கற்பழிப்பை விளக்க வேண்டிய அவசியமென்ன? உங்கள் இரண்டு ருபாய் செய்தித்தாள் விற்க வேண்டும் என்பதற்காக எதை வேண்டுமானாலும் செய்வீர்களா? தவறு செய்தவர்களை மக்கள்முன் நிறுத்துவது உங்கள் கடமை என்றால் நீங்கள் தவறுசெய்யாமல் இருக்க வேண்டுமே! நீங்களும் தவறுசெய்தால் உங்களை யார் தடுப்பது?

உங்கள் வருமானத்தை மட்டும் கவனத்தில் கொள்ளாதீர்கள், நாட்டின் வளர்ச்சியை மட்டும் மனதில் வைத்து தவறான செய்திகளையோ, ஒருதலை பட்சமான செய்திகளையோ பிரசுரிக்காதீர்கள். நன்மைகளை விளைவிக்கும் செய்திகளை, நாட்டை வளமாக்கும் செய்திகளை தலைப்பு பகுதியில் இடம்பெறச் செய்யுங்கள். விளையாட்டு, வர்த்தகம், தொழில்துறை, அறிவியல் போன்றவற்றை தொடர்ந்து வரச்செய்யுங்கள் வையுங்கள்.

விபத்து, வக்கிரம், கவர்ச்சி விளம்பரம், கொலை கொள்ளை ஆகியவற்றை தனிப்பகுதியாக்கி, தனித்திரியாக்கி தலைப்பிட்டு சினிமாவுடன் இருதிபக்கங்களாக மாற்றிவிடுங்கள்.

நாட்டை செழுமையாக்குவதும், மன்னாக்குவதும், எதுவாக செய்வதாய் இருந்தாலும் சரி உங்களுக்கு பெரும் பங்கு உண்டு என்பதையும், உங்களால் சமூகத்தில் ஏற்ப்படும் நல்லதோ, கெட்டதோ எதுவாகினும் அது உங்கள் குடும்பத்தையும், குழந்தைகளையும் பாதிக்கும் என்பதையும், நீங்களும் உங்கள் குடும்பமும் இந்த சமூகத்தில் ஒரு அங்கம் என்பதையும் தயவுசெய்து மறக்க வேண்டாம்.

மக்களுக்கு ஒரு வேண்டுகோள் - இதுபோன்ற மட்டமான, கீழ்த்தரமான, வக்கிரமான செய்திகளுக்கு ஆர்வம் காட்ட வேண்டாம். எரிகிற கொள்ளியை எடுத்துவிட்டால் கொதிப்பது அடங்கிவிடும்.

அரசுக்கு ஒரு வேண்டுகோள் - பத்திரிக்கைகளுக்கு வழிமுறைப் படுத்தப்பட்ட இன்னும் கடுமையான சட்டங்கள் இயற்றப் பட வேண்டும். எதிர்மறையான பதிப்புகளை ஏற்ப்படுத்தும் செய்திகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படக்கூடாது. வன்மையும், கொடூரங்களும், தனிப் பகுதிகளாக்கப் பட்டு இறுதியாக இணைக்க வேண்டும்.


இயற்றலும் ஈட்டலுங் காத்தலும் காத்த
வகுத்தலும் வல்ல தரசு